“நான் அவன் ரத்தத்தை குடிக்காம விடப்போறதில்ல ஸார்!
மன்னிச்சுருங்க..இப்டி மொட்டையா சொன்னா எப்படி ஸார் உங்களுக்கு புரியும்? அத்தால ஒரு சின்ன •பிளாஷ்பேக்...
நானும் அவளும் லவ்வர்ஸ். சொந்தத்தை விட்டுட்டு நான் போதும்னு வந்தவ ஸார் அவ! ரொம்ப ஜோவியலான ஆளு...எல்லாத்துகிட்டயும் சகஜமா இருப்பா...அப்பப்போ கடிப்பா...(நான் எப்பவாவது!) லவ்வுன்னா அப்டியரு லவ்வு...இல்லேன்னா கே கே நகர் லச்சுமணசாமி ரோட்ல கூவத்த்தாண்ட நாங்க அவ்வளவு சந்தோஷமா இருக்க முடியுமா? எங்களுக்கு பகலு, ராத்திரி, சாப்பாடு தூக்கம்னு கெடையாது ஸார்! அப்படியே சேந்து சுத்திகினே லை•பை என்ஜாய் பண்ணுவோம்.<>
தயவுசெஞ்சு அலுத்துக்காதீங்க ஸார்! இது ரெகுலரான லவ் ஸ்டோரி இல்ல. கொஞ்சம் என்னப் புரிஞ்சுக்கங்க ஸார்! (என்ன பண்றது ஸார்! தமிழ்நாட்டு பொறப்பானதால ‘ஸார்!’ போடாம பேச வர்றல ஸார்?!)
இப்படி நாங்க ஜாலியா இருக்கப்பதான் காலியா இருந்த பக்கத்து வீட்டுக்கு ஒரு •பேமிலி வந்துது. நான் உடனே அவகிட்ட ‘ஆளுங்கோ எப்டி இருப்பாங்கோ, என்ன மாதிரி பிஹேவ் பண்ணுவாங்கோன்னு தெரியாது. நீ உஷாரா இரு; சகஜமா போய்கினு வந்துகினு இருக்காதே’ன்னு வார்னிங் குடுத்தேன் ஸார். நான் சந்தேகப் பிராணி இல்ல ஸார்! இருந்தாலும் வந்த ஆளுங்கோ எப்படி கீறாங்கன்னு தெரியாம நாம போக வர செய்யறது சரியா ஸார்?!
இவ கேக்கலையே ஸார்! புச்சா கீறதால ஆர்வத்துல அவங்க வீட்டுக்கு ரெண்டு மூணு தபா போனா; அப்பத்தான் அந்த வீடல கீற தடியன் இவளப் பாத்திருக்கணும் ஸார்! என் முன்னாலேயே அவளப் பிடிச்சு, ரெண்டு கையால அணைச்சு....... நாசம் பண்ணிட்டான் ஸார்! ஒரு பூவ கசக்கிட்டான். அதிர்ச்சி தாங்காம என் ஆளு ‘காலி’ ஸார்! ஒரு நிமிட்ல எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு. பொறக்கப்போற கொழந்தைக்குப் பேரு வெச்ச என் ராசாத்தி என் கண்ணு முன்னாலேயே செத்துப் போனா எப்டி இருக்கும் ஸார் எனக்கு?
பத்து நாளு ஒண்ணும் புரியாம கலங்கிப் பூட்டேன் . அப்பால கவலயை உதறிட்டு யோசிச்சேன் ஸார்! அவன போலீஸ¤க்கு இழுத்துகிட்டு போயிறலாம்தான்! ஆனா, போலீஸே அவன் பக்கம்தானே? எங்கள மாதிரியான ஆளுங்களுக்கெல்லாம் கடவுள் கூட தொணையில்லயே! அப்பதான் டிஸைட் பண்ணேன் ஸார்! சட்டத்தை நானே கைல எடுத்துகினு, அவன் வீட்டுக்குள்ளயே போயி, அவனைப் போடப் போறேன்! அத்தான் அவளுக்கு செய்யற அஞ்சலி!
இத்த அவன் எப்டியோ தெரிஞ்சுகிட்டு உஷாராயி, வெள்ளைப்படை ஒண்ணு வெச்சிகிட்டான் ஸார். அத்த மீறி போவுறது எங்கள மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டம். அவ்ளோ டைட் ஸெக்யூரிட்டி. இருந்தாலும் விடுவேனா? எங்க லவ் டிவைன் ஸார்! அறிவை யூஸ் பண்னி, எப்டியாவது வெள்ளையை ஏமாத்தி அவன ‘அட்டாக்’ பண்றது! அத்தானே த்ரில்!
வெள்ளப் படையோட வீக்னஸ கண்டுபுடிக்க பன்னென்டு நாள் கண் முழிக்க வேண்டியதாயிருச்சு. கன்•ப்ர்ம் பண்ண இன்னும் ரெண்டு நாள் பக்காவா செக் பண்ணேன் ஸார்! அப்பதான் ஐடியா வந்திருச்சு!
ராத்திரி ஒம்போது மணிக்கு வர்ற வெள்ளைப் படை காலைல ஏழு மணி வரைக்கும் இருக்கும்! அத்தால அது வர்றதுக்கு முன்னால போய் பதுங்கறதுதான் சரி! ரிஸ்குதான் ஆனா, வேற வழியில்லை ஸார்! அவனை எப்படியாவது......
எல்லாம் பக்காவா நடந்துருச்சு. பதுங்கி, அவன் அஸால்டா கீற சமயத்துல, தூங்கறப்போ கழுத்தாண்ட போயி, மொள்ள அவனுக்குத் தெரியாம ரத்தத்தை ஆர்வமா உறிஞ்சறப்போ......
“அய்யய்யோ! எப்ப முழிச்சுகிட்டான்? தெரியலையே?! இந்த போடு போடறானே! மை டியர் லவ்! சொர்க்கத்துல மீட் பண்ணுவோம்!”
“சே! என்னதான் மஸ்கிடோ நெட் போட்டாலும் எப்டியோ ஒரு கொசு உள்ள பூந்து இந்த கடி கடிக்குதே?’ என்று கொசுவைக் கசக்கிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டான் அவன்.