Sunday, August 16, 2009

அவளும் நானும்

அவளை நான் இரண்டு நாட்களாகத்தான் பார்க்கிறேன்.

எப்போதும் 'துறு துறு' கண்கள். அந்நியன்(ள்?!) போல வழியும் தலைமுடி. முகம் கொள்ளாத சிரிப்பு. காதுகளில் தொங்கும் தொங்கட்டான் (அ) ஜிமிக்கி?! - பால்கனியில் அடிக்கடி வந்து நிற்கும் அவளை நான் இரண்டு நாட்களாகத்தான் பார்க்கிறேன்!

பெங்களூரின் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிகளின் ஒன்றில் என் வாசம். எதிரும், புதிருமாய்க் கட்டித் தள்ளியிருக்கும் தீப்பெட்டி சைஸ் வீடுகள். சொந்தமாய் வாங்கியிருக்கும் மூன்றாவது தள தீப்பெட்டி ஒன்றின் பால்கனியிலிருந்து பார்த்தால் எதிர் பால்கனிகளின் சகலமும்(!) தெரியும். அதற்கு நேரமில்லாது பனசங்கரியிலிருந்து, ஒயிட்·பீல்டுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஓடிக்கொண்டேயிருப்பேன் (ப்ராமிஸ்!). கணினி கம்பெனியில் ஜல்லியடிப்பது போக எனது ஆர்வம் சக இந்தியனைப் போல கிரிக்கெட், இசை, ஸினிமா, போக கொஞ்சம் அழகான...பெண்கள்!

முக்கியமான கலைஞர் ஒருவரை 'வைகுண்டம்' தத்தெடுத்துக்கொண்டதில், பெங்களூரே அடங்கிப்போய் 'bread/jam/maggie'-யுமாய், பொழுது போகாது பால்கனியிலிருந்து பார்வையைத் துருத்தியதில் அவளை முதன் முதலாய்ப் பார்த்தேன். செக்கச் சேவேலென்று என்ன ஒரு அழகு! கண்களை நகர்த்த முடியாது தவித்துப் போனேன்! ('எவ்ளோ நேரம் நின்னுகிட்டே இருப்பே?! பாவம்! உனக்கு கால்கள் வலிக்காதா?!')

நாயகன்/நாயகி-க்குப் பின் யாருடைய அறிமுகம் என சினிமா பார்க்கும், அட்லீஸ்ட் தமிழ் சினிமா பார்க்கும் அனைவருக்கும் தெரியும். சரேலென பால்கனியில் நுழைந்த பெண்மணி (வயதை வைத்து பார்த்தால் அவள் பாட்டியாயிருக்க வேண்டும்), 'உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாதா, ஏன் கேக்கவே மாட்டேங்கறே?!' என்கிற தொனியில் பேச, அவள் மறுக்க..."ஸ்ஸ்..ஆ"-வை சிகரெட் முனை சுட்டதில் கொஞ்சம் சத்தமாய்ச் சொல்லிவிட்டேன் போலும். பாட்டி முறைத்த முறைப்பில் 'நெற்றிக்கண்' இருந்திருந்தால் சாம்பல்!

மாலை. இன்ஸ்டெண்ட் கா·பியுடன் பால்கனிக்கு வந்தால்....அவள்! தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 'ஹாய்!' என வாயசைத்து கையை ஆட்டிக்கொண்டே இருந்ததை பார்த்துவிட்டு, ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தாள். எதிர்பாராத சமயத்தில், 'கை'யை வாயில் வைத்து, அவள் 'உம்ம்ம்மா' என பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுக்க...நான் அம்பேல்! சுதாரித்ததில், பாட்டி என்னை முறைத்துவிட்டு, ஏறக்குறைய அவளை இழுத்துச் செல்வதை பார்க்க முடிந்தது!

சனிக்கிழமை எழுந்து பால்கனிக்கு வந்து சோம்பல் முறித்தபோது, பெங்களூரே அதிகாலைப் பனியில் குளித்துக்கொண்டிருக்க, அத்தனை சீக்கிரமாய் அவள்! 'ஹாய்' என்ற வாயசைப்புக்கு கையசைத்தாள்! 'உன் பேர் என்ன?' என ஆங்கிலத்தில் வினவும்போது...பாட்டி!

'என்னப்பா? மூணு வயசு குழந்தை பால்கனில நிக்குது. விழுந்தா என்னத்துக்கு வுறது? பனி வேற. மிரட்டி வீட்டுக்குள்ள போகச் சொல்லாம அதுகூட கொஞ்சிகிட்டு நிக்கறது கொஞ்ச கூட நல்லால்லப்பா' என உரிமையுடன் அதட்டி விட்டு அவளைத் தூக்கிக்கொண்டு போனாள்!

பாட்டி தோளில் சாய்ந்து, வாயில் விரலை போட்டுக்கொண்டு, அவள் 'க்க்க்க்' எனச் சிரித்தது ரொம்பவே அழகாயிருந்தது.