Saturday, October 06, 2012

நெரிசல்


சோமனஹள்ளி செல்லும் 211 பேருந்து பனஷங்கரி வந்தபோது, நிறுத்தத்தில் நெரிசல்.  நின்றிருந்த அவனுக்கு ஆயாசமாயிருந்தது.

எல்லோரையும் உள்ளே தள்ளி, படிக்கட்டில் அவன் தொற்றிக்கொண்டான்.  இரண்டாவது நிறுத்தம் ஜரகனஹள்ளி என்றாலும், ஊர்ந்து கொண்டிருந்த போக்குவரத்தில் எப்படியும் போய்ச்சேர இருபது நிமிடங்களாகிவிடும் என்கிற எண்ணத்தில் எரிச்சலும் சேர்ந்தது.  

நோட்டம் விட்டதில் பேருந்தின் முன் பகுதி (மகளிருக்கான பகுதி) மட்டுமே தெரிந்தது.  முன்னிருபது அவளும், தேய்த்துக்கொண்டு அருகில் நிற்கும் நடுத்திரத்தைத் தாண்டிய வயதான அவரும் தெரிந்தார்கள்.  ‘வயதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள், பாரேன்!’ என்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்ததற்குக் காரணம் அவளின் அழகும், அவனின் இளமையும், ஏலாமையும் இருக்கக்கூடும்.

ஸாரக்கி வந்ததில், நெரிசல் குறைந்து, அவனுக்கு பேருந்தினுள் நுழைய இடம் கிட்டியது.  அந்த வயதானவர் அருகில் வந்து ‘ஐயா! கொஞ்சம் தள்ளி நிற்கலாமே?!’ உரக்கக்கூறியது பெண்ணின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.  உத்தேசம் அதுவாயும் இருந்திருக்கலாம்.

அவர் பதிலேதும் சொல்லாமல் மௌனம் காக்க, அவள் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்து, ‘அவர் எங்கப்பா!’ என்றதும், அவன் அதிர்ந்து, வாயடைத்தான்.

வயதானவர் கொஞ்சம் இல்லை, அதிகமாகவே விலகியதில் அவன் மனம் இன்னும் காயமானது.  மன்னிப்புக் கோரி ஸாரக்கி சிக்னலிலேயே இறங்கி மறைந்து போனான்.

தள்ளி நின்ற அவரை அவள் நிமிர்ந்து, கனிவாய்ப் பார்த்தாள்.  அவரது விழிகளில் இதுவரை இருந்த கயமை தொலைந்து, கண்ணீரும், மன்னிப்பும் கூடவே நன்றியும் தெரிந்தன.

Sunday, July 15, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 6

வானவராயன் சதித்திட்டம் அம்பலமாகும் கடைசி அத்தியாயம்


சோளபுரி விழாக்கோலம் பூண்டிருந்தது.  அங்கங்கே முகாமிட்டு வல்லவராயன் வாள் வீச்சை சிலாகிக்க, மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று கேட்டுக்கொண்டு ‘மன்னர் வல்லவராயன் வாழ்க!’ என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள். 


அரசவையில் நாளை கொடுக்கப்போகும் ‘வீச்சனை வென்ற வீரர்’ பட்டத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.


பௌர்ணமியாதலால முழு நிலா வானில் நீந்திக்கொண்டு, வெளிச்சத்தை நந்தவனம் முழுதும் இறைத்துக்கொண்டிருந்தது.  
உலவிக்கொண்டிருந்த வல்லவராயனை அவ்வப்போது தென்றல் வந்து தழுவினாலும், மனது புழுக்கமாயிருந்தது.  திருநங்கை இருமுறை அழைப்பு விடுத்தும் போகாது ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். 


திருவடிப்பொடியார் தன்னிடம் உடனடித் திருமுகம் வேண்டி நின்றதின் காரணம் வேறு தெரியவில்லை.


‘வல்லவா! என்ன சிந்தனை, வெற்றிக்களிப்பில் கொண்டாட வேண்டிய நீ ஏன் அமைதி காக்கிறாய்?’ என்று கேட்டுக்கொண்டே உற்சாகமாய் வந்த திருவடிப்பொடியார், திண்டு போன்று இடப்பட்டிருந்த. இருக்கையில் அமைதியாக அமர்ந்தார்.


வல்லவராயன் பதிலேதும் சொல்லாமல் பெருமூச்செறிந்தான்.  திருவடிப்பொடியார் எதிரில் அமர்ந்துகொண்டான்.


‘கத்திவீச்சன் தன் திறமை முழுவதும் உபயோகிக்கவில்லையோ என்கிற சந்தேகம் உனக்கு.  இறுதிச்சுற்றில் வாளைத் தவறவிட்டது இயல்பாயில்லையோ என்கிற ஐயம் உன் மனதைக் குடைகிறது.  என்ன சரிதானே வல்லவா?!’ என்று புன்னகை பூத்தார் திருவடிப்பொடியார்.

வல்லவராயன் திடுக்கிட்டான்.


‘நீங்கள் நினைப்பதெல்லாம் உண்மை. கத்திவீச்சனை விலைக்கு வாங்கிய பின் எப்படி அவன் உங்களை எதிர்த்துப் போரிடுவான்?’ என்றார் அமைதியாக திருவடிப்பொடியார்.


‘ஆசானே! இதென்ன அநியாயம்?’ என்றான் சினத்துடன் வல்லவராயன்.


‘வல்லவா! அமைதி…அமைதி…!’ என்ற திருவடிப்பொடியார் தொடர்ந்தார். 


‘கத்திவீச்சனின் பூர்வீகத்தை கொஞ்சம் தோண்டியபோது, இதுவரை அவன் எந்த மன்னனிடம் நேரடியாக மோதவில்லை என்கிற தகவல் எனக்குக் கிட்டியது.  படைத்தளபதிகள், வாட்போர் வல்லுநர்களிடம் மோதி அவர்களை வென்றவன் ஏன் உங்களை உசுப்பேற்றி போட்டிக்கு இழுக்க வேண்டும்?  கொஞ்சம் ஆராய்ந்தபோது, என்னையே உலுக்கும் உண்மை தெரிந்தது.


தங்கள் சிறிய தகப்பனார் ஏவி விட்ட குறுவாள் கத்திவீச்சன்.  ஐந்தாயிரம் பொன் பெற்றுக்கொண்டு, நஞ்சு தடவிய வாள் கொண்டு, உங்களோடு பொருதி, காயப்படுத்தி, நாள்படக் கொல்லும் நஞ்சை உட்புகுத்தி,  உங்களைக் கொல்ல வேண்டும் என்கிற கொடிய சதியுடன் உங்களை இழுத்திருக்கிறான்.


யோசித்துப் பார்த்தேன்.  மக்களுக்குத் தங்கள் வீரம் தெரிந்து நாளாகிவிட்டன.  போருக்கான வாய்ப்பும் இல்லாத நேரத்தில், இது போன்ற போட்டிகள் மக்களுக்கு உற்சாகத்தைத் தரும்.  அதுவும் மன்னரே போட்டியிடுகிறார் என்றால்…வேலையை விட்டுவிட்டு, பொன்களை அள்ளிவிட தயாராய் இருக்க மாட்டார்களா?  ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைக் கொய்ய முயற்சி செய்தேன்.


ராஜத் துரோகம், பாதாளச் சிறை என்றெல்லாம் பயமுறுத்தி, கத்திவீச்சனை எனது திட்டத்துக்குப் பணியவைத்தேன்.  பத்தாயிரம் பொன் தருவதாக ஆசை காட்டியவுடன் வழிக்கு வந்துவிட்டான். 


தவிரவும், பொன்களைக் கொடுத்து பந்தயத்தைக் காண வந்த மக்களுக்கு பொழுதும் போய், சுவாரஸ்யம் கலந்தும் இருக்க வேண்டாமா?


என்ன…பந்தயம் இயல்பாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லவில்லை. ஆக, பந்தயம் உங்களைச் சுற்றி இயங்க, எனக்கு நிறையவே உதறலாயிருந்தது.  ஆனால், விடாது நீங்களும் போட்டியிட்டு, திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்து விட்டீர்கள்.


இதில் வருத்தப்பட ஏதுமில்லை.  அரசியலில் இதெல்லாம் சகஜம் வல்லவா!’ என்றார் திருவடிப்பொடியார்.  இதழ்களில் இன்னும் புன்னகை .


வல்லவராயன் அயர்ந்து போய், பேசத் தோன்றாது அமர்ந்திருந்தான்.


‘நீங்கள் அடிக்கடி சொல்வதை நினைவூட்டுகிறேன். இதுவும் நாம் அடுத்த வரும் சந்ததியினருக்கு வைத்துவிட்டுப் போகும் சொத்து.  யார் கண்டது? வரப்போகும் பந்தயங்களை முன் கூட்டியே தீர்மானிக்கும் சக்திகள் பின்னாளில் வரலாம். (ஆதாரம்: Ancient Tamil Rulers’ Fixing of War & Competition by Liar, Gapsa & Reels, Page 29) பிள்ளையார் சுழியை நாம் போட்டதாய் வைத்துக் கொள்ளுங்கள். 


வானவராயனின் சதியை வென்றுவிட்டோம்.  இந்த வெற்றியை திருநங்கையோடு மகிழ்ச்சியாய்க் கொண்டாடுங்கள்.  கத்திவீச்சனைத் தக்க மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும். வருகிறேன் வல்லவா!’ என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போயே போய் விட்டார். 

-முற்றும்

பின் குறிப்பு


1. வானவராயன் கத்திவீச்சனைக் கொல்வதற்காகவும் சதித் திட்டம் தீட்டுவதாகத் தகவல்.


2. திருநங்கை இரண்டு மாதம் ‘முழுகாமல்’ இருக்க, சோளபுரி பால வல்லவராயனுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.


3. அங்கவைக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது.  பெண் தோழனாக வல்லவராயன் பங்கேற்பதால், சிபிசிஐடி மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறது.


4. வீச்சனை வென்ற வீர்ன் வல்லவராயன் மல்யுத்தப் பயிற்சியில் ஏனோ ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறான்.


5. சிவந்தமேனி என்கிற பெயர் கொண்ட, கோயிலில் ஒட்டுக்கேட்ட கருப்பு நிற ஒற்றன் ரொம்பவே தாமதமாய்க் கொண்டு வந்த ’வானவராயன் சதித் திட்டம்’ கேட்டுத் திருவடிப்பொடியார் நோகாமல் தலையில் அடித்துக்கொண்ட சேதி யாருக்கும் தெரியாது.

Saturday, July 14, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 5

வல்லவராயன் களத்தில் இறங்கும் ஐந்தாம் அத்தியாயம்



வாள் போட்டி சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருந்தது.  கூட்டத்தின் ஆரவாரிப்பு கூடியிருந்தது.

விதிமுறைகள் சர்வ சாதாரணமாய் அமைக்கப்பட்டிருந்தாலும், மன்னரே நேரடியாய் மோதுகிறார் / கத்திவீச்சன் வாள் திறமை கேள்விப்பட்டு, முண்டியடித்துக்கொண்டு மக்கள் கூடி, பொன்கள் கொடுத்து, காலையிலேயே களை கட்டத் துவங்கிவிட்டது.

ஐந்து சுற்று மோத வேண்டும் – அதிக சுற்று வெல்பவர்கள், போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவர் என்றபோது அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.

முதல் இரு சுற்றுகளில் கத்திவீச்சனின் திறமை அசாத்தியமாயிருந்தது.  வல்லவராயனால் எதிர்கொள்ள முடியாமல் சுலபமாக விழுந்ததில், ஆர்வம் குறைந்தே போனது.  மன்னரின் விசுவாசிகள் காணச் சகியாமல் நெளிந்தனர்.  திருவடிப்பொடியார் முகம் இறுகி அமர்ந்திருந்தார்.  திருநங்கை முகத்தில் ஈயாடவில்லை.

மூன்றாவது சுற்றில் சத்திரிய குலத்தவன் என்பதைச் சற்றே கோடிட்டுக் காட்டி, சிறுத்தையைப் போலச் சீறிப் போரிட்டு வென்ற வல்லவராயன், நான்காவது சுற்றின் இறுதியில், வல்லவராயன் அயர்ச்சியைக் கண்டு தோல்விதான் என தீர்மானமான நொடியில், திடீரெனப் பம்பரமாய்ச் சுழன்று, கத்திவீச்சனின் வாட்களை தட்டிவிட்டு, நிராயுதபாணியாக்கி ’அழகு’ காட்டியதில் கூட்டம் அயர்ந்து போய், சுதாரித்து, கை தட்டிச் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.  கத்திவீச்சன் தன் கண்களையே நம்பாமல் களத்தை விட்டு விலகினான்.

அங்கவை வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள்.  திருவடிப்பொடியார் முகம் இளகியிருந்தாலும் புன்னகை இல்லை.  திருநங்கை வெளியில் சிரித்தாலும், உள்ளுக்குள் உதறலாய் இருந்தாள்.  வல்லவராயனின் இயல்பு எப்படி என அனைவருக்கும் தெரியும்.

இறுதிச் சுற்றில் இடக்கையால் மட்டுமே போரிட வேண்டும்.  கத்திவீச்சன் உற்சாகமாயிருந்தான்.  .வல்லவராயன் சோர்வாயிருந்தான். ‘விட்டால் போதும்’ என்கிற நிலைக்கு எப்போதோ வந்துவிட்டான்!

சுற்று துவங்கியது.  வல்லவராயன் சற்றே அசந்த தருணத்தில், புஜத்தில் காயப்படுத்தி, கத்திவீச்சன் ஆரவாரிக்க, கூட்டம் மயான அமைதி காத்தது.  வல்லவராயன் விதியை மறந்து, வலக்கைக்கு வாளை மாற்ற முயற்சிக்க, கத்திவீச்சன் கேலியாய் ‘இடக்கை மன்னா, இடக்கை! இடக்கையில் போர் புரிய வேண்டும்!’ என்றதும் வல்லவராயன் ரத்தம் வழிந்த இடது கையில் வைத்துக்கொண்டான்.

கத்திவீச்சனின் வாள் சுழற்றும் முறை சற்றே கடுமையாய் மாறியிருக்க, வல்லவராயன் தடுத்துக்கொண்டே வந்தான்.  ஒரு கட்டத்தில், கத்திவீச்சனின் கைகள் வலுத்து, வல்லவராயன் கழுத்தைக் குறிவைத்துத் தாக்க, வல்லவராயன் சுதாரித்துத் திறமையாக எதிர்கொண்டதை கூட்டம் ஆர்வத்துடன், வியப்புடன், அச்சத்துடன், அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தது.

இரு நாழிகைகளுக்கும் மேலாக நீண்ட வாட் போரில், கத்திவீச்சன் கை ஓங்கியிருப்பதைப் பார்த்த மக்கள் கவலையுடன் அமர்ந்திருக்க, வல்லவராயன் தடுத்துக்கொண்டே அருகில் வந்து, நொடிக்கும் குறைவான நேரத்தில் கத்திவீச்சனின் இடக்கையை வாளால் கீறி விட, பதட்டத்தில் கத்திவீச்சன் வாளைத் தவறவிட்டான். வாள் ‘நங்’ என்ற ஓசையுடன் தரையில் விழுந்ததும், வல்லவராயனின் வாள் கத்திவீச்ச்னின் மார்பைக் குறி வைக்க,  மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் ‘மன்னர் வாழ்க!’ என்று கூக்குரலிட்டது.

திருநங்கை ஓடி வந்து, வல்லவராயனைக் கட்டிக்கொண்டாள்.  அங்கவையின் உற்சாகம் கரை புரண்டோடியது.  திருவடிப்பொடியார் இதழோரம் புன்னகை அரும்பியது.

வல்லவராயன் திருநங்கையிடமிருந்து விலகி, தலை குனிந்து நின்று கொண்டிருந்த கத்திவீச்சனைக் கட்டிக்கொண்டான்.  ‘கத்திவீச்சன் வாழ்க!’ என்று உரக்கச் சொன்னதும், கூட்டம் வழி மொழிந்தது.

அமர்ந்திருந்த திருவடிப்பொடியார் எழுந்து வந்து, ‘மன்னர் வாழ்க! ஆரோக்கியமான போட்டியை நெடுநாட்கள் கழித்துப் பார்க்கும் பாக்கியம் கிட்டியது.  மன்னர் வென்றாலும், கத்திவீச்சன் பெருமையை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது.  மன்னர் அனுமதி பெற்று, கத்திவீச்சனுக்கு பத்தாயிரம் பொன் அளிக்க உத்தரவிடுகிறேன்!’ என்றதும் மக்கள் கூட்டம் கை தட்டி வாழ்த்தொலியைத் தெரியப்படுத்தியது.

-அழகு நிலா வளரும்

Tuesday, July 10, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 4

வல்லவராயனை திருநங்கை ஓட்டும் நான்காவது அத்தியாயம்


கதிரவன் உதித்து, நாழிகைகள் மூன்று கடந்தும், மங்கள வாத்தியங்கள் ஒலித்து அடங்கியும், வல்லவராயன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தது திருநங்கைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.


‘மகாராஜா! இன்னும் என்ன உறக்கம்?’ என்றாள் குரலில் மென்மையை வரவழைத்துகொண்டு.


‘இன்றுதான் ஞாயிறு ஆயிற்றே, அரசவையும் இல்லை.  என்னதான் செய்யப்போகிறோம்?  அதிகமாக உறங்கினால் உனக்கு ஆகாதே?’ என்று முனகினான்


‘கத்திவீச்சன் வாட்களோடு விருந்தினர் மாளிகையில் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறான்.  வாள் வீரர்கள் தங்களுக்குப் பயிற்சியளிக்க தினமும் காலையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  நீங்களோ எதையுமே பொருட்படுத்தாமல் படுக்கையில் புரண்டு கொண்டு, இன்று ஞாயிறு என்று முனகிக்கொண்டிருக்கிறீர்கள்…இதுதான் மன்னருக்கு அழகா?’ என்று மென்மை தொலைத்துப் பொரிந்தாள்.


’மங்கள வாத்தியங்களின் ஒலியை விட உன் ஒலி அதிகமாகிக்கொண்டே போகிறது.  நீ கைக்குழந்தையாயிருந்தபோது அப்படி என்னதான் உனக்குக் கொடுத்தார்களோ? எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு’ என்று மீண்டும் முனகினான் வல்லவராயன்.


‘அதைத்தான் நானும் சொல்கிறேன்.  விடிந்து இவ்வளவு நேரமாகியும் தூங்கிக்கொண்டிருக்கிறீர்களே?  கொஞ்சமாவது பொறுப்பிருந்தால் இப்படிச் செய்வீர்களா? அன்று பார்த்தது கண்களில் இன்றும் பசுமையாய்…இரு கரங்களிலும் வாளைச் சுழற்றிய அவரை எப்படி வெல்வது என்கிற யோசனையே இல்லாமல் சோம்பலாய்க் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தால் எப்படி?’ என்றாள் கோபமாக திருநங்கை.


‘ஏன் இப்படி கணவன்/மனைவி எந்நேரமும் சண்டை போட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.  இது பற்றியும் கொஞ்சம் ஆராய வேண்டும்’ என்று மனதுள் நினைத்து எழுந்து விட்டான் வல்லவராயன்.


எல்லாவற்றையும் முடித்துச் சிற்றுண்டிக்கு அமர்ந்தபோது வாக்குவாதம் தொடர்ந்தது.


‘அண்ணாவிடம் இதைப் பற்றி பேசினீர்களா?’ (திருவடிப்பொடியாரை ‘அண்ணா’ என்றும் அழைப்பர்!)


‘அவரால் என்ன செய்துவிடமுடியும்? நான் தானே போட்டியை எதிர்கொள்ள வேண்டும்’ என்று நினைத்ததை வெளியில் சொல்லவில்லை வல்லவராயன்.


‘இதென்ன பொறுப்பில்லாத்தனம்?  பயிற்சியும் மேற்கொள்ளாமல், பெரியோர்களின் உதவியையும் நாடாமல் நாட்களைக் கடத்துவதில் என்ன லாபம்? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?’


ஒன்றுமே பேசவில்லை வல்லவராயன்.


‘கத்திவீச்சனுக்குப் பிடித்த தின்பண்டமே சுண்டக் காய்ச்சிய பாலில், சர்க்கரை, குங்கமப்பூ, பலவித பருப்புகளைக் கலந்து சாப்பிடுவதுதானாம்.  (இப்படிச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் பால் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை என்கிற சேதி கசிகிறது!)  அவனுடைய பயிற்சிகள் காலையில் துவங்கி மதியம் வரை நீளுகிறதாம்.  இரு கரங்களில் வாள் சுழற்றும் வித்தையை நாளெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாமாம்.  ஆனால் நீங்கள்?  ஒன்றுமே செய்யாமல், வேளைக்கு எழுந்து கொள்ளக்கூட முடியாமல், நேரத்துக்கு வயிற்றுக்கு மட்டும் தள்ளிக்கொண்டேயிருக்கிறீர்கள்’ என்று சொல்லிக்கொண்டே போனதும் வல்லவராயன் பொறுமை இழந்தான்.


‘மன்னன் என்றால் வெற்றி வாகை சூட வேண்டும் என்கிற கட்டாயமில்லை திருநங்கை…தோற்கக்கூடாதா?  தோற்றுவிட்டுப் போகிறேன்…’ என்றான் கோபமாக.


திருநங்கையும் விடாது ‘தோற்பதா?  சோளபுரி வம்சம் தோற்றதாகச் சரித்திரம் இல்லை மகாராஜா!  இப்படியொரு அவமானம் என் கணவனால் சோளபுரிக்கு வரக்கூடாது’ என்றாள் ரோஷத்துடன்.


‘திருநங்கை! எனக்குத் தெரிந்து என் பாட்டனார் எந்தப் போருக்கும் சென்றதில்லை.  தந்தையார் போர்க்களத்தைப் பார்த்ததில்லை.  கப்பத்தை ஏற்றுகிறேன் என்பதைத் தவிர சோழ மன்னர் வேறு சேதி அனுப்பி எந்த போருக்கும் அழைத்ததில்லை.  அப்படிப்பார்த்தால் சோளபுரி வம்சம் தோற்றதாகச் சரித்திரம் இல்லைதான்’ என்றான் வல்லவராயன்.


‘மகாராஜா! இதெல்லாம் ஒரு பேச்சா? பயிற்சிக்குப் போவதுமில்லை.  மேம்போக்காகப் பேசிக்கொண்டு, நாட்களையும் கடத்திக்கொண்டு போனால், புரட்டாசி பௌர்ணமி இதோ வந்துவிடும்.  நீங்கள் ’கடுக்காய்’ கொடுத்து ஓடிப் போகவும் முடியாது.  தெரிந்துகொள்ளுங்கள்’ என்று சினத்துடன் பழரசக் கிண்ணத்தை ‘ணங்’ என்று வைத்தாள். போய்விட்டாள்.


மக்களும் புரிந்து கொள்ளவில்லை; எடுத்து வளர்த்த ஆசானும் புரிந்து கொள்ளவில்லை; மணம் புரிந்த மங்கையும் புரிந்து கொள்ளவில்லை என்கிற எண்ணங்களில் வல்லவராயன் மனம் கசந்தது.


அழகு நிலா வளரும்...

Saturday, July 07, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 3

 

திருவடிப்பொடியார் வல்லவராயன் அளவளாவும் மூன்றாம் அத்தியாயம்


தன் முன்னே அமர்ந்திருக்கும் திருவடிப்பொடியாரை தீர்க்கமாகப் பார்த்தான் வல்லவராயன்.


தீவிர வைஷ்ணவரான திருவடிப்பொடியார் சராசரி உயரத்திற்கும் சற்றுக் கீழ்தான்.  மீசையை முறுக்கி, குடுமியை இறுக முடிந்து, சிவப்பு நிறத்தில் நாமமிட்டு, காதுகளில் கடுக்கன் போட்டு, பார்வை தீட்சண்யத்தில் அனைவரையும் பதற வைப்பவர். இரண்டு கரங்களிலும் தங்கக்காப்பு,  உடலில் அங்கங்கே தென்பட்ட நகைகள் கொண்டு ‘தங்கப் பிரியர்’ என்று அறிந்துகொள்ளலாம். எப்போதும் மேலே குறுக்காக அணிந்திருக்கும் பட்டு வஸ்திரம், ஒன்பது முழ வேட்டியை பஞ்சகச்சமாகக் கட்டிய அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அருகில் நெருங்கினால் மட்டுமே மெலிதாய் வீசும் சந்தன வாசம், வீரம் மிகுந்திருந்தாலும், நடையில் கம்பீரம் அவ்வளவாக இல்லாமல் பெண்மையின் நளினம் கலந்திருந்தது,  பரதநாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றதாலும் இருக்கலாம். 


‘என்ன வல்லவா? அப்படியொரு பார்வை?’ திருவடிப்பொடியார் வெண்கலக் குரல் சூழலின் அமைதியைக் கலைத்தது.  வல்லவராயன் நினைவையும்.


வளர்பிறைச் சந்திரன் வானத்தில் நீந்திக்கொண்டிருக்க, ஆவணி மாத இரவாயிருந்தாலும், புழுக்கம் அதிகமாய் இருந்தது. 


உப்பரிக்கையில் இவர்களைத் தவிர வேறில்லை. 
திருவடிப்பொடியார் தனியாகத் திருமுகம் வேண்டி நின்றதுதான் முக்கியக் காரணம்.


‘எதற்காக இந்தத் தனிமைச் சந்திப்பு?  வினாவினால் விளைந்த பார்வை இது’ என்று சமாளித்தான் வல்லவராயன்.


திருவடிப்பொடியார் சிரித்தார்.  ‘வல்லவா! சிறு பிராயத்தில் இருந்தே உங்களை வளர்த்தவன் நான்..என்னிடமே நாடகமா?’ என்றார் கேலியாக.


வல்லவராயன் மௌனம் காத்தான்.  சில நேரங்களில் மௌனமே சிறந்தது என்று திருவடிப்பொடியாரிடம் பாடம் கற்றவன்.


’சில விஷயங்களை மனம் விட்டுப் பேசுவதற்காகவே இங்கு வந்துள்ளேன்’ என்றார் திருவடிப்பொடியார்.


வல்லவராயன் ஏதும் பேசவில்லை.


‘மீசையை முறுக்குவது வீரத்திற்கு அழகு.  முறுக்கு மீசையை நீவிக்கொள்வது பெருமைக்கு அழகு.  அதை விட்டுவிட்டு மீசையைத் ‘தொங்கு மீசை’ ஆக்கியதன் காரணம் என்ன?’


‘மன்னன் என்றால் முறுக்கு மீசைதான் இருக்க வேண்டுமா? சோழனுக்கு ஆண்டாண்டு காலமாய்க் கப்பம் கட்டி, போருக்கே செல்லாமல் பாதி வயதைக் கடந்த எனக்கு மீசை எப்படி இருந்தால் என்ன?  இது அழகாயிருக்கிறதென்று அங்கவை சொல்கிறாள்.’


அங்கவை திருவடிப்பொடியாரின் தங்கை மகள்.  ‘அது பற்றியும் பேச வேண்டும்.  அங்கவைக்கும் உங்களுக்குமான உறவுதான் என்ன?’


‘என் தோழி, எனக்குத் துன்பம் நேரும்போதெல்லாம் தோளில் தாங்கும் தோழி!’


‘வல்லவா! இது என்ன புதிதாக இருக்கிறது?  நீங்கள் இருவரும் அடிக்கடி கேப்பங்கூழ் விடுதிகளில் சந்தித்துக்கொள்வதும், கொஞ்சம் கேப்பங்கூழ் அருந்திவிட்டு, மணிக்கணக்கில் உறவாடுவதும் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’


‘ஆசானே!  கேப்பங்கூழ் விடுதிகளைத் திறந்ததின் நோக்கமே அதுதானே… மக்கள் அங்கு வந்து கூழ் குடித்து, நேரத்தை செலவிடுவதற்குத்தானே அங்கங்கே திறக்கச் சொல்லியிருக்கிறேன்?’


‘வல்லவா! தடாலடியாய் நீங்கள் கேப்பங்கூழ் விடுதிகளில் நுழைந்துவிடுவதால் பாதுகாப்பு பிரச்னைகளை சமாளிப்பதற்குள் சிபிசிஐடி பிரிவு திணறி விடுகிறது’

சிபிசிஐடி என்பது சிறப்புப் பிரிவுச் சிந்தனை ஐமிச்ச டிமிக்கியின் சுருக்கம்.  அரசாங்கத்தின் நேர்ப் பார்வையில் இயங்கும் ஒற்றர் பிரிவு.  (அரசாங்கம் என்றால் திருவடிப்பொடியார் எனும் பொருள் கொள்பவர்கள் அரசியலுக்கு நுழையத் தகுதியானவர்கள்). யாரையும் சந்தேகக் கண்ணோடு (ஐமிச்சம்) பார்க்கும் உளவுகளில்/ஒற்றுகளில் தவறு நிகழ்ந்தால், இவர்களுக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்பட மாட்டாது (டிமிக்கி).


‘ஆசானே!  இதெல்லாம் ஒரு காரணமா?  எனக்கும் அங்கவைக்குமான ஆண்-பெண் நட்பு, கேப்பங்கூழ் விடுதிகள்… வரும் சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணம்..இதெல்லாம் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்’


‘இப்படி அதிகரித்துக்கொண்டே போகும் கேப்பங்கூழ் விடுதிகளில் ஆண்-பெண்கள் உரையாடுவதைத்தான் முக்கியமாக வைத்திருக்கிறார்கள்.  கேப்பங்கூழ் அரிதாகவே அருந்துகிறார்கள்.  இதனாலேயே வெளியே ஒரு பொன்னிற்கு விற்கும் கேப்பங்கூழ், விடுதிகளில் ஐந்து பொன்களுக்கு விற்கப்படுகிறது.  விடுதிக் காப்பாளார்கள் அடிக்கும் கொள்ளை இது’ என்று கொதித்தார் திருவடிப்பொடியார்.


‘ஆசானே! வரி போடுங்கள், சரியாகி விடும்’ என்றான் வல்லவராயன்.


‘வரியா? மக்கள்தானே அவதிப்படுவார்கள்?’


‘படட்டுமே! இளைப்பாற வருபவர்கள் அதற்குண்டான விலையைக் கொடுத்துதானே ஆகிவேண்டும்.  விற்பனை வரி பத்து சதவீதம், சேவை வரி இரண்டு சதவீதம், லாபத்தின் மீதான கூடுதல் வருமான வரி ஐந்து சதவீதம் என்று போட்டுப் பாருங்கள், கஜானா நிரம்பி வழியுமே!’


திருவடிப்பொடியாரால் அந்த நேரத்திலும் வல்லவராயனை வியக்காமல் இருக்க முடியவில்லை.  சமயத்தில் கொஞ்சம் சமயோசிதமாய்ப் பேசுகிறான்!


‘அது சரி! அங்கவைக்கும் உமக்கும் என்னதான் உறவு?’


‘ஆசானே!  கர்ண்ன் – துரியோதனன் போல இது உன்னதமான நட்பு.  அவள் என் மனங்கவர்ந்த தோழி.  இந்த உறவைப் புரிந்துகொள்ள உங்களால் முடியாது’


‘வல்லவா! கண்ணன் – அர்ஜுனன் நட்பு என்கிற உவமையைச் சொல்லலாமே? இதெல்லாம் சரியாய் வருமா?’


‘வரும், வரவேண்டும். அது சரி, இது பற்றி அவளிடம் பேசாதீர்கள்.  மனது வருத்தப்படுவாள்.’


எதற்கும் தீர்வு உண்டு என்று நினைக்கும் திருவடிப்பொடியாருக்கு இதை எப்படிக் கையாளுவது என்று தெரியத்தான் இல்லை.  ‘கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்’


இடுப்பிலிருந்த ஓலையை எடுத்தார்.  ‘இது என்ன?’ என்றார்.
வல்லவராயன் வாங்கிப் பார்த்தான்.  ‘எப்படி உங்களுக்குக் கிடைத்தது?’ என்பது போல பார்வை.


’என்ன இது?’


விலகிருக்கு மாராப்பு
மனசுக்குள்ள மத்தாப்பு
இன்னுமேண்டி வீராப்பு
எட்டு மாசத்துல வளகாப்பு


’தளை தட்டுகிறதே வல்லவா!’


‘களை கட்டுகிறதே! அதைப்பாருங்கள் ஆசானே!  வெண்பா போன்ற பாட்டுக்களை விட்டுவிட்டு இதுபோல மடக்கி, மடக்கி எழுதப்பழகுங்கள்.  இதுவும் நான் வருங்காலச் சந்ததியினருக்கு வைத்துவிட்டுப் போகும் சொத்து!’ என்றான் வல்லவராயன் (ஆதாரம்: Tamil Rulers’ Rhymes – Molle Mary, Pg 259).


திருவடிப்பொடியார் மீண்டும் சங்கடத்தில் ஆழ்ந்தார். சிறிது அமைதிக்குப் பின்…‘திருநங்கை மகாராணியைத் திருப்தி படுத்த முடியாத தங்களுக்கு சாமரம் வீசும் பெண்ணிடம் சரசம் எதற்கு?’


‘திருப்தியாய் திருநங்கை இல்லையே!’ என்ற வல்லவராயனுக்குச் செருமலே பதிலாய்க் கிடைத்தது.  திருவடிப்பொடியார் பார்த்து நடத்தி வைத்த திருமணம்!  மீண்டும் மௌனம்.


’உறையில் வாள் இல்லாத நீங்கள் எந்த தைரியத்தில் உருவத் துணிந்தீர்கள்?’ என்ற திருவடிப்பொடியாரின் அஸ்திரக் கேள்விக்கு வல்லவராயன் திகைப்பே பதிலாயிருந்தது.


சுதாரித்துக்கொண்டு ‘மன்னன் என்பவன் எவ்வளவுதான் அணிந்துகொள்வது?  அணிந்துகொண்டு நடப்பதின் சிரமம் தங்களுக்கு எப்படித் தெரியும்?  அதனால் அவ்வப்போது வேண்டாததை அணியாமல் விடுவேன். அது வாளாயும் இருக்கலாம், உள்ளாடையாயும் இருக்கலாம். இதையும் திருநங்கை சொல்லியிருப்பாளே?!’ என்றான் கோபமாக வல்லவராயன்.  


’திருநங்கை சொல்லவில்லை.  வானவராயன் தங்களைச் சுற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் சிபிசிஐடி பிரிவு விடாமல் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது.  அதில் கசிந்த தகவலே இது’ என்றார் திருவடிப்பொடியார் புன்னகையுடன்.


வல்லவராயன் பதிலேதும் சொல்லவில்லை.


‘மன்னா! இரு கைகளிலும் வாள் சுற்றும் கத்திவீச்சனை எப்படிக் கையாளப்போகிறீர்கள்?  அதுதான் இப்போதைய கவலை.  எனக்கே சவாலாய் நிற்கும் கேள்வி!  குணசீலப் பெருமான்தான் வழிகாட்ட வேண்டும்.  வருகிறேன் வல்லவா! மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் உறங்கு’ என்று சொல்லி, ஆழ்ந்த பெருமூச்சுடன் அகன்றார் திருவடிப்பொடியார்.


வல்லவராயன் நீண்ட நேரம் உறங்காது யோசனையில் ஆழ்ந்திருந்தான்.


அழகு நிலா வளரும்...

Thursday, July 05, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 2


கதாநாயகன் வல்லவராயனைச் சங்கடத்தில் ஆழ்த்தும் இரண்டாம் அத்தியாயம்


நாயகன் வல்லவராயன் ஆளும், திருவடிப்பொடியார் கண்காணிக்கும், வானவராயன் கண் வைக்கும் சோளபுரி என்றழைக்கப்படும் ராஜ்யம் காலப்போக்கில் தஞ்சையில் கரைந்திருக்கக் கூடும் என்று சரித்திர வல்லுனர்கள் கூறுவார்கள். (ஆதாரம்: Cholas’ Fool Proof – Prof. Dupe, Pg 126


வல்லவராயன் தந்தை சுப்பராயன் காலத்திலிருந்தே சோழர் ஆளுமைக்கு உட்பட்டு, கப்பம் கட்டத் துவங்கி விட்டதால், இன்றுவரை போர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.  மாதம் மும்மாரி பொழிதலும், திருவடிப்பொடியாரின் தீவிர, அதிரடி நடவடிக்கைகளில் கஜானா செழித்து, ஒற்றர் படை வளர்ந்து, படைச் செலவு குறைந்து, மக்கள் நலம் மிகுந்திருந்தது.


வானவராயனின் சூழ்ச்சிகளைக் களைந்து வல்லவராயனைக் காத்து, இயல்பாகவே மரங்கள் நிறைந்து, அரண் போல அமைந்த சோளபுரியைத் தன் தாயாகவே பாவித்து கண்போலக் காத்து வரும் திருவடிப்பொடியாரிடம் வல்லவராயனுக்கு பக்தியே உண்டு. 


திருவடிப்பொடியாரும் வல்லவராயனிடம் மகன் போலப் பாசங்கொண்டிருந்தாலும், சமயத்தில் அவனின் சில செயல்களால் சங்கடத்தில்  ஆழ்வதுண்டு.  அந்நேரத்தில் திருமுகம் வேண்டி, தனது பேச்சுக்களால் அவனையறிந்து, மாற்றுவதுண்டு, மாறுவதுமுண்டு!


பின்னாளில் தோன்றி நம்மை இம்சிக்கப் போகும் ‘இம்சை அரசன்’ வல்லவராய வம்சாவளியில் வந்தவன் தான்! (ஆதாரம் – தமிழகக் குறுநில மன்னர்களின் குசும்புகள், மாரி கேப், பக்கம் 131).   அதனாலோ என்னவோ, வல்லவராயன் செயல்களில் ‘இம்சை’யின் சாயலைக் காணலாம்!


வல்லவராயன் அன்று காலையிலிருந்தே இயல்பாயில்லை.  எப்போழுதும் சரியாய் நிகழும் காலைக்கடன், ‘முக்கி’யும் நிகழாதது, காலை நடை பயிலும்போது சந்திப்பதாய்ச் சொன்ன அங்கவை வராதது,  இட்டிலி என அழைக்கப்படும் சிற்றுண்டியுடன் தக்காளித் தொக்கு இல்லாதது, இரு நாட்களாக திருவடிப்பொடியார் கண்களில் படாதது போன்ற காரணங்களுக்காகவும் இருக்கலாம்.  அல்லது அரசவையில் இன்னும் இருக்க வேண்டுமே என்கிற ஆயாசமாகவும் இருக்கலாம் (இது போன்ற ஆயாசங்கள், வெறுப்புகள் குறுநில மன்னர்களுக்கு இருந்ததென ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு - ஆதாரம் - ராசாக்களின் ராவடி – டாக்டர் புருடா – பக்கம் 81).


அரசவை அன்று கூட்டம் மிகுந்து காணப்பட்டது.  மக்களுக்கு வேறு வேலை இல்லை போலும்.  ’தினமும் என்னதான் நடக்குது’ என்கிற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  பொரிகடலை முத்திரை பதித்த ஆசனம் தவிர அனைத்தும் நிரம்பியிருந்தன.  வல்லவராயன் முகபாவம் கண்டு யாவரும் பதில் பேசாது அமர்ந்திருந்தனர்.


வல்லவராயன் தொங்கு மீசை வைத்திருந்தான்.  பிரஸன்ன வேங்கடேச பெருமாளைத் துதித்து விட்டு வந்ததால், நெற்றியில் திருமண் மேலே சிறிதாய் அஞ்சனமும், வலது காதில் துளசி தளமும் இருந்தது.  அணிய வேண்டுமே என்கிற விதத்தில்  ஆடைகள் அமைந்திருந்தன.  கண்களில் அலுப்பும், சலிப்பும் நிறைந்திருந்தன.  சாமரம் வீசிய பாவையிடம் காணப்பட்ட சுவாரசியம் வேறெதிலும் இல்லை. உன்னிப்பாய்க் கவனித்து ஓலையெழுதினான்.  அவளிடம் கொடுக்கவும் செய்தான்.


படிக்காமல் செருகிக்கொண்டு, அவனுக்கு மட்டும் கேட்கும்படியாய் ‘கச்சையை இச்சையுடன் நோக்கும் மன்னா! நீர் தரும் பிச்சை பொறுத்து…’ முடியுமுன்னே…


வாயிற்காப்போன் உள்ளே நுழைந்து ‘மன்னா! தங்களைக் காண வட தேசத்திலிருந்து வீர்ர் ஒருவர் வந்துள்ளார்’ என்றுரைக்க, கவனம் சிதறிய வல்லவராயனின் ’உடனே வரச்சொல்’ போதாத வேளையாக இருந்திருக்க வேண்டும்.


வந்தவன் திடகாத்திரமாயிருந்தான்.  அணிந்திருந்த ஆடைகள் சுத்த மாவீரனாகக் காட்டின.  இருபுறங்களிலும் உறை இட்டு, வாட்களை வைத்திருந்தான்.  மிக மெலிதான, வரையப்பட்டதோ என எண்ணும்படியான மீசை.  கண்கள் சீனாக்காரனைப் போல் சிறியதாயும், கூர்மையாயும் இருந்தன.  வல்லவராயனைப் பார்த்த பார்வையில் மரியாதை இருந்தது.  அச்சமில்லை.


‘மன்னா! வணக்கம்’ என்றதில் தமிழ் கொச்சைபட்டது.  ‘என் பெயர் கத்தி வீச்சன்.  மறைகழன்ற அடியாரிடம் முறையாகப் பயின்று, வாட் போர் புரிவதில் தேர்ச்சி பெற்று, குறுநில மன்னர்களைக் கண்டு, அவர்தம் வீர்ர்களை வென்று, தோல்வியைக் காணாமல் தங்கள் முன் வந்துள்ளேன். என் வாள் வீச்சைப் பார்க்கிறீர்களா?’ என்றான்.


’ஆகட்டும்’ என்றதும் வாட்கள் உறையிலிருந்து உருவப்பட்டன.


இரு வாட்கள் சுழன்ற விதம் வார்த்தைகளில் விவரிக்க இயலாத அற்புதமாயிருந்தது.  நடனக்காரியின் நளினம், மேளக்காரனின் தாளம், குயிலின் கானம், கரகாட்டத்தின் லாகவம், படைத்தளபதியின் கூர்மை எல்லாம் கலந்து மோன நிலைக்கு இட்டுச்சென்றன.  அரசவைக் கூட்டம் அயர்ந்து போயிருந்தது.


ஒரு நாழிகைக்கும் மேலாக நிகழ்ந்த அற்புதம் அடங்கியவுடன், கூட்டம் ஆர்ப்பரித்தது. கை தட்டியது.  ஆரவாரித்தது.


வல்லவராயன் வியந்து போனான்.  கழுத்திலிருந்த விலை உயர்ந்த முத்துமாலையை எடுத்தான்.  தானே எழுந்து சென்று கத்திவீச்சனுக்கு அணிவித்தான்.  கூட்டம் மீண்டும் கை தட்டியது.  ஆர்ப்பரித்தது.


’மன்னா! என்னிடம் இது போன்ற பரிசுகள் பல உண்டு.  வாங்கி, வாங்கி அலுத்துப்போய்விட்டன.  தினவெடுக்கும் தோள்களுக்கு வேலை கொடுங்கள்’ என்றான் கத்திவீச்சன்.


’கொடுத்துவிட்டால் போயிற்று.  எங்கள் நாட்டில் சிறிது இளைப்பாறுங்கள்.  எங்கள் வீரர்களிடம் வலு இருக்கிறது.  வீரம் இருக்கிறது.’ என்றான் வல்லவராயன்.


‘வீரர்களைக் கண்டு நாளாகிவிட்டது மன்னவா!  தாங்கள் வாட்போரில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  என்னுடன் போட்டியிடத் தயாரா?’ என்றான் கத்திவீச்சன்.


வல்லவராயன் மெல்ல நகைத்தான்.  ;அது அழகல்லவே! முறையல்லவே!  வீரர்கள் இருக்க அரசன் நேரடியாகப் போரிடலாகாது, அது அரச தர்மம் இல்லை என்று புராணங்களும், சாத்திரங்களும் கூறியிருப்பது தங்களுக்குத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்’ என்றான்.


‘மன்னா!  சாத்திரங்களும் புராணங்களும் நாம் வகுத்ததுதானே!  மீறலாமே…என்னுடன் நடை பழக வாருங்கள்!’ என்றான் கத்திவீச்சன்.


வல்லவராயன் மௌனம் காத்ததை கத்திவீச்சன் சாதகமாக்கிக்கொண்டான்.


‘மன்னா!  என்னைப் பற்றி இப்போது தெரிந்து விட்டதால் ஏற்பட்ட நடுக்கமா? பரவாயில்லை, உங்கள் வீரர்களிடமே போரிட்டுப் பார்க்கிறேன்’ என்று உரக்கக்கூறி கேலியாய் நகைத்தான். அரசவை சலசலத்தது.


வல்லவராயன் வெகுண்டு வாளை எடுக்க உறையில் கை வைத்த தருணத்தில்…வாள் இல்லாததை உணர்ந்தான்!  


மேற்கொண்டு கதையை எப்படி நகர்த்துவது?  அடடா! முக்கியமான பாத்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறோம்.  அறிமுகப்படுத்தவே யில்லையே?!  


‘வல்லவா!  நிறுத்துங்கள், அமைதியாயிருங்கள்’ என்று கர்ஜித்தபடி  பிரவேசித்தார் அவர்.  மன்னவனை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு.  யாரெனச் சொல்லவும் வேண்டுமோ? அவர்தான் திருவடிப்பொடியார்! சட்டென அரசவையில் அமைதி பூத்தது.


(கதையின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய வல்லமை படைத்த திருவடிப்பொடியார் அரசவையில் திடீரென பிரவேசித்ததால் வர்ணிக்க இயலாமல் போய்விட்டது. அவர் பற்றி பின்னே பார்ப்போம்!)


கத்திவீச்சன் இதை, இதை  எதிர்பார்க்கவேயில்லை.  சிறு கண்களால் அவரை முறைத்தான்.


‘வல்லவா! மன்னன் முறை தவறி நடக்கலாமா? கொஞ்சம் பொறுங்கள்’ என்ற திருவடிப்பொடியார் கத்திவீச்சனைத் தீர்க்கமாகப் பார்த்தார்.  


‘விருந்தினராய் வந்தீர், அதனால் ராஜ நிந்தனைக்கு ஆளாகாமல் பிழைத்துப் போகிறீர்.  எதற்கும் நேரம் காலம் உண்டு போட்டிக்கும், போருக்கும் காலத்தின் உசிதம் வேண்டும்.  எங்கள் விருந்தினராய் இளைப்பாறுவீர்.  தங்களின் வீரத்தோடு எங்கள் மன்னரின் வீரம் விளையாடும் நாள் தூரத்தில் இல்லை’ என்று கேலியாய் கத்திவீச்சனைப் பார்த்து திருவடிப்பொடியார் உரக்க உரைத்தார்.


’யாரங்கே?  இவருக்கு உரிய மரியாதை அளித்து நமது விருந்தினர் மாளிகையில் தங்க வையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.


வல்லவராயன் பதிலேதும் சொல்லாமல் அலுப்பாய் ‘சபை கலையலாம்’ என்றபடி அகன்றான்.  அரசவை கலைந்தது.


சாமரம் வீசும் பாவையிடமிருந்து நழுவிய ஓலையை இரு கூரிய விழிகள் கண்டு, இடக்கரம் கொண்டு அள்ளிக்கொண்டது.


அழகு நிலா வளரும்...

Wednesday, July 04, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 1

வானவராயன் சதித் திட்டம் தீட்டும் முதல் அத்தியாயம்


அமாவாசை முடிந்து மூன்று நாட்கள் கழிந்திருந்தாலும், மையிருட்டு.  நேரமோ நடுச்சாமம் கடந்து அரை நாழிகை ஆகியிருந்தது. காரிருளில் கானகம் மூழ்கிக் கிடந்தது. 

காட்டின் மையப்பகுதியில் அமைந்திருந்த ப்ரத்யங்கரா மண்டபம் பற்றிப் பலவிதமான கதைகள்.  சுற்றிலும் நெடிதுயர்ந்த மரங்களின் நிழல்கள் மண்டபத்தின் மீது விழுந்து, வெளிச்சம் தராது, ஒரே இருட்டு. நடுவில் நிறுவப்பட்ட ‘ப்ரத்யங்கரா தேவி’ சிலை மனம் நலிந்தோரை நடுங்க வைக்கும் அமைப்பைக் கொண்டதாயிருந்தது.  இதனாலேயே பகலில் இளைப்பாறும் பிரயாணிகள் கூட இரண்டு நாழிகைகளுக்கு மேல் தங்காமல், நடையைக் கட்டுவதும் உண்டு.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் இணையாமல் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், தமிழகம் முழுதும் குறுநில மன்னர்கள் பரவியிருந்தார்கள்.  நாட்டை எப்படியாவது ஆள வேண்டும் என்கிற வெறியில் உறவினர்களுக்குள் எப்போதும் சண்டை.  போராலேயும், சதியாலேயும் நேர் வாரிசுகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி, வாரிசுகளைக் கொன்று, விசுவாசிகளை வைத்து படைகளைத் தன் கீழ் கொணர்ந்து நாட்டை ஆளும் கொடுமை நிலை (ஆதாரம் – தமிழகக் குறுநில மன்னர்களின் குசும்புகள், மாரி கேப், பக்கம் 67).  

ப்ரத்யங்கரா தேவியின் அருகில் ‘மினுக்/மினுக்’ வெளிச்சம்.  அச்சம் கொள்ளாமல் அருகில் சென்றோமானால், மெல்லிய குரலில் கசிந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜர் மீதான / திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடலைக் கேட்கலாம். 


பாடுபவரின் சாரீரம் பாட்டிற்குச் சுவை சேர்த்தாலும், சூழலுக்குப் பொருத்தமாயில்லை.

அணிந்திருந்த உடைகள் கொண்டு அவனை மெத்தப் படித்தவன் என அறியலாம்.  நடுச்சாமத்திலும் நெற்றியில் அழியாத திருநீறு, குங்குமம் கண்டு அவனது நியமத்தையும், ஒழுங்கையும் அறியலாம். வலுவான உடலமைப்பை வைத்து, அவன் படைகள் திறம்பெற ஏற்று நடத்தும் தகுதியுடைய வீரனென்று அறியலாம்.

நற்றமிழ்  ஞான சம் பந்தன்  நான்மறை
கற்றவன்  காழியர்  மன்னன்  உன்னிய
அற்றமில்  மாலையீ  ரைந்தும்  அஞ்செழுத்
துற்றன….


‘ஆஹா!’ என்ற ஒலி கேட்டதும் சட்டென பாட்டை நிறுத்தி ‘வானவராயரே! எப்போது வந்தீர்?’ என்கிற குரலில் இருந்த இனிமை போய், பணிவு வந்தது..


வானவராயன் என்று விளிக்கப்பட்ட உருவம் வெளிப்பட்டது தெரியத்தான் இல்லை.  கம்பர் பாடியது போல் ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’ எங்கே இருந்தான்?!


‘தண்டபாணி நாயக்கரே! அவையில் அனைவரும் மயங்கிக் கேட்கும் குரலை யாருமறியாது கானகத்திலே வைத்திருக்கிறீரே? தேவரும் போற்றும் வீரத்தை ஒளித்து வைத்திருக்கிறீரே? காலம்தான் எவ்வளவு கொடிது!’ என்று அரற்றினான் வானவராயன்.


’வானவராயரே! நானாக விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டதுதானே இது.  சரி, எதற்காக வரச்சொன்னீர்?’


‘எனக்கு உரித்தான அரியணை வேண்டும்.  அதற்கே ஆலோசிக்க வந்திருக்கிறேன்’.


‘வானவராயரே! பலமுறை உமக்கு அறிவுறுத்தியும் விளங்காமல் மீண்டும் மீண்டும் உசிதமில்லாத காரியத்தில் இறங்குவது சரியல்லவே!’


‘அது எனக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியம்.  என் தமையனார் அகாலத்தில் இறந்தவுடன், என்னை மன்னனாக்கி அழகு பார்த்தார்கள்.  ஆனால், அந்தக் கிழ திருவடிப்பொடியார்…’ என வானவராயன் கர்ஜித்தான்.


‘பதவி ஆசையில் சொந்த தமையனாரைக் கொன்று, மகனையே விஷம் வைக்கத் துணிந்தீர்கள்.  அதனாலேயே வாழ்வை இழந்தீர்கள்’ என இடித்துரைக்க வேண்டிய நாயக்கன் மௌனம் காத்தான்.  வானவராயன் மீது நாயக்கன் வைத்திருக்கும் விசுவாசம் கும்பகர்ணன் ராவணன் மீது வைத்த விசுவாசத்தை விட ஒரு படி மேலே.


’சொல்கிறேன் கேள், ஏதேனும் ஓட்டைகள் இருந்தால் அடைத்து விடலாம் இப்போதே’ என்று திட்டத்தை மிகவும் அமைதியாக, சீரான குரலில் சொல்லி முடித்தான்.


‘அருமை வானவராயரே!  இதில் உங்கள் மேல் குற்றம் இராது.  சோளபுரி உங்கள் கையில்’ என்றான் நாயக்கன்.


‘முக்கியமாக அந்த புத்திசாலிக் கிழம் திருவடிப்பொடியார் தலையீடும் இருக்காது. நாம் நினைத்தவாறே நடந்தால் அடுத்த ‘பரஞ்சோதி’ நீதான்!’ என்று கூறி வானவராயன் சிரித்தது ஆந்தை அலறுதலை நினைவூட்டியது.


நியாயமாக அத்தியாயம் இங்கு முடிந்திருக்க வேண்டும்.  ஆனாலும், சரித்திர கதைகளுக்கே உரித்தான திருப்பத்துடன் முடித்தால்தானே சரியாய் வரும்?!  அதனால்….

‘சல சல’வென மண்டபத்தின் கோடியில் சப்தம் கேட்டதும், வாளை உருவிக் கொண்டு வானவராயன் வெளியே பாய்ந்து ஓடினான்.  நாயக்கன் திகைத்துப் போய் செய்வதறியாது நின்றான்.  மஞ்சள் கண்கள் மட்டுமே தெரிந்த பூனை  ‘மியாவ்’வுடன் ஓடி ஒளிந்து கொண்டது தவிர ஏதும் தென்படவில்லை. 


வாளை உறையில் இட்டு, ஏமாற்றத்துடன் மண்டபத்துக்குத் திரும்பிய வானவராயன் கால்களில் ஏதோ நெருடியது.  எடுத்து வந்து, தீபத்தின் சுடரில் பார்த்தான்.  ‘பொரி கடலை’ உருவ இலச்சினை! 


‘திருவடிப்பொடியார்!’ என்று கடுங்கோபத்தில் வானவராயனும், அச்சத்தில் நாயக்கனும் ஒரே சமயத்தில் கூவியது கேட்டு வௌவால்கள் பறந்தன!



இதொன்றும் அறியாத நமது நாயகன், வல்லவராயன் லேசான குறட்டையுடன், உல்லாசம் முடித்த களைப்பில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.



அழகு நிலா வளரும்...

Sunday, May 13, 2012

விதி!

முக்கியமான முன்குறிப்பு:
கையெழுத்துப் பிரதியான ‘பைரவி’ நவம்பர், 1986 இதழில் நான் எழுதிய இந்தக்கதை மாற்றம் ஏதுமில்லாமல் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே ‘விதி வலியது’ன்னு பெரியவாள்ளாம் சொல்றா.  நீங்க ‘விதியை மதியால வெல்லலாம்’னு சொல்லலாம்.  ஆனா, ‘அந்த மதியும் விதியோட இழைஞ்சு போணும்’னு நான் சொல்றேன்.  இதையேதான் நம்ம ’ராஜேந்திரன்’ கதையும் ஸ்ட்ரெஸ் பண்றது!

ராஜேந்திரன் ஒரு வேலையில்லா பட்டதாரி.  அவாளோட நெலைமைதான் உங்களுக்குப் புரியுமே?  ‘ஆத்துல ஸதா கரிச்சுக் கொட்டிண்டே இருப்பா!’  அவனைச் சொல்லியும் குத்தமில்லை.  அவன் கிராஸ்-பெல்ட் ஆனதால, என்னதான் ஸின்ஸியரா வேலையைத் தேடினாலும், அது கவர்ணமெண்ட் ப்ராமினுக்கில்ல போயிண்டிருக்கு!

அவனுக்கு எப்படியும் வேலை கிடைச்சாணுங்கறது விதி.  அது ராமநாதன் ரூபத்துல வந்துது.  ராமநாதன் ஒரு கம்பெனில பெரீய போஸ்ட்ல வேலை பாத்துண்டிருந்தார்.  அவா ரெண்டு பேரும் சந்திச்சதே ஒரு ரஸமான அனுபவம்னா!

ராஜேந்திரன் அம்பி 12பி-ல ஏதோ வேலையா போயிண்டிருக்கன்.  ராமநாதனும் அதே பஸ்ஸுல, கார் ப்ரேக்டவுன் ஆனதால (என்ன ஆச்சரியமாயிருக்கா, கார் ப்ரேக் ஃபெயிலியர் – அதனால ப்ரேக் டவுன்னு சொன்னேன்..இது தப்பா?!) வர்றார்.  ராஜேந்திரனோட பர்ஸ் பிக்பாக்கெட் ஆயிடறது.

ராமநாதன் பாத்துட்டு, பிக்பாக்கெட்காரனை பிடிச்சு, அடிச்சு, உதைச்சு பர்ஸை ராஜேந்திரன் கிட்ட கொடுக்கறார்.  ஆனா பாருங்கோ, ராஜேந்திரன் பர்ஸைத் தொறந்து அவர்கிட்ட காமிக்கிறான்.  அதுல ஒரு பைசா கூட இல்லைன்னா!


ராமநாதன் ராஜேந்திரனைப் பாக்கறார்.  அவன் கண்ணுல இருந்த சோகம் அவரை உருக்கறது.  அவனோட நெலமையைத் தெரிஞ்சுண்டார்.  தான் ஒரு வேலை வாங்கித் தரதாகவும் வாக்குக் கொடுத்துட்டார்!

ராமநாதன் கம்பெனி ஒரு வித்தியாசமான கம்பெனி.  பெரீய போஸ்ட்ல  இருக்கறவா, அவாளோட சொந்தக்காராங்களுக்கு மட்டும் சிபாரிசு பண்ணலாம்.  சொந்தத்துல இல்லன்னா வேற எந்த ரெகமண்டேஷன் –ல்லாம் செல்லாது.  கம்பெனியே சில இன்வெஸ்டிகேட்டர்ஸ்-ஐ வெச்சு, உண்மைதானான்னு கண்டு பிடிப்பா.  பொய்யா இருந்தா தர்ம சங்கடமா போயிடும்.

அதுக்கும் ராமநாதன் ஒரு வழி பண்றார்.  தன் வீட்டுப் பக்கத்துல எல்லார்கிட்டயும் சொல்லிட்டார்.  ராஜேந்திரனும், அவர் சொல்லிக் கொடுத்தா மாதிரி தன் வீட்டுப் பக்கத்துல எல்லார் கிட்டயும் சொல்லிண்டான்.

இவா சொல்லிண்ட உறவுமுறை என்னன்னா, ராமநாதனோட பாட்டியோட அம்மாவும், ராஜேந்திரனோட பாட்டியோட அம்மாவும் ஒண்ணுவிட்ட அக்கா தங்கையாம்!

இன்வெஸ்டிகேட்டர்ஸும் விசாரிச்சா, “உண்மை”யைத் தெரிஞ்சுண்டா.  ஆனா பாருங்கோ!  இதோட விட்டதா கதை? (யோவ்! சொல்லித் தொலைய்யான்னு நீங்க சொல்றது காதுல விழறது!)

இண்டர்வ்யூவும் வந்தது.  ராஜேந்திரன் தெம்பா போனான்.  ஏன்னா ராமநாதன் ஏற்கெனவே ‘இண்டர்வ்யூ வெறும் ஐ வாஷ்’தான்ன்னு சொல்லிட்டார்.  அவா கேட்ட கேள்விக்கெல்லாம் ‘டாண், டாண்’னு பதில் சொன்னான்.

கடைசியா அவா, ‘ராமநாதனோட பாட்டியோட அம்மாவும், உன்னோட பாட்டியோட அம்மாவும் ‘ஒண்ணு விட்ட அக்கா தங்கை’ன்னு சொன்னே, சரி…இதுல யார் அக்காவோட கொள்ளுப்பேரன்?’ன்னு கேட்டா!

ராஜேந்திரனுக்கு வெலவெலத்துப் போச்சு!  ராமநாதன் இதைப் பத்தி எதுவும் சொல்லலியே?! ‘ஒத்தையா ரெட்டையா’ மாதிரி எதாவது சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.  என்னவானாலும் சரி, அந்த ‘ராமநாதன்’ மேல பாரத்தைப் போட்டு, ‘அக்காவோட கொள்ளுப்பேரன் நான்’னு சொல்லிட்டான்.

உடனே அவா, ‘யு ஆர் ஸெலக்டட்’னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில கொடுத்துட்டா!  ராஜேந்திரனுக்குக் கொள்ளையா கொள்ளையா சந்தோஷம்.

இதுலேந்து என்ன தெரியறது?  ‘விதிக்கு ரொம்ப பவர், மதி இருந்தா அதுவும் விதி ஒத்துழைச்சா வெல்லலாம்’னு தெரிய வர்றது!

மங்களம்…சுப மங்களம்!

Saturday, March 17, 2012

வெண் பொங்கல்

என் நண்பர் திரு கணேசன் அவர்கள் எழுதிய கதை.

ராமு, ஜானகி கொண்டு வந்து கொடுத்த filter coffee குடித்துக் கொண்டு, அன்றைய செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டு வாசலில் சின்ன யானை (TATA Ace) வந்து நின்றது.  இறங்கிய 24 வயது இளைஞன், அவன் அம்மா/அப்பா - வீட்டு சாமான்களுடன் குடி புகுந்தனர்.
ஜானகி ராமுவிடம்மாமா பேரு நாராயணன், மாமி பேரு பங்கஜம், பையன் பாலாஜிமுந்தா நேத்திதான் வந்து பால் காச்சிட்டு போனாஎன்று புட்டு புட்டு வைத்தாள்.
கொஞ்ச நாட்கள் கழித்து, பங்கஜம் மாமிஇந்தா ஜானகிஉங்க ஆத்துக்காரருக்கு வெண்பொங்கல் புடிக்கும்னு சொன்னியேஆத்துல பண்ணினேன்…” என்று கொடுத்து விட்டுப் போனாள்.
ராமு பாண்ட் சட்டை மாட்டிக் கொண்டுஜானு, ஆஃபீசுக்கு டைமாச்சு.  சீக்கிரம் டிஃபன் கொடுஎன்று பறந்தான்.
ஏன்னா..இந்தாங்கோ கொஞ்சம் வெண்பொங்கல்!” என்று ஒரு வாய் ஊட்டி விட்டாள்(?!).  அவ்வளவுதான்அப்படியே உட்கார்ந்து, முழு பொங்கலையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டான்!
ராமு சரவண பவன், வஸந்த பவன், ரத்னா கஃபே, அடையார் ஆனந்த பவன், D C Manor, மாம்பலம் Brilliant Tutorials கையேந்தி பவன், வீட்டுக்கு அருகே மல்லிகா மெஸ், கல்யாண டிஃபன், Get together என எல்லாவற்றிலும் புகுந்து, பொளந்து கட்டியவன்.  இதுவரை இப்படியொரு பொங்கலை ருசித்ததில்லை.
அன்றிரவு ஜானகியிடன் வெண் பொங்கலைப் பற்றிச் சிலாகித்து, துளைக்க ஆரம்பித்தான்.  ஜானகிக்கு சற்று பொறாமையாய் இருந்தது.  என்ன மனுஷன் இவன்?  கார்த்தாலே காலில் சக்கரம் கட்டி பறந்து கொண்டுராத்திரியும் தொந்திரவைப் பொறுத்துக்கொண்டு – இவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒப்புக்காகவாவது பாராட்டியதில்லையே…!”
ஜானகிக்கு சமையல் குறிப்பு புத்தகங்களை வாங்கி பொங்கல் செய்து, ராமு முன்னால் வைத்து,  ஏக்கத்துடன் பார்த்தாள்.  ம்ஹூம்..ராமுவிடம் no reaction.
ஈகோவை விட்டு, பங்கஜம் மாமியிடம் செய்முறை விளக்கம் கேட்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சரிவிகிதம் கொடுத்து ராமுவைப் பார்த்தாள்.
பரவாயில்லை, ஆனாலும் மாமி டேஸ்ட் வரலை…” என்று உண்மையான feedback கொடுத்தான்.
ஜானகியின் கோபம் உச்சகட்டத்திற்குப் போன காரணம், ராமு சொன்ன இந்த வார்த்தைகள்தான். “மாமியின் கை பக்குவமே தனி!”
மறுநாள் ஜானகி, பங்கஜம் மாமி சமையலறைக்குச் சென்று எப்படியெல்லாம் சமையல் செய்கிறாள் என்று ஒன்று விடாமல்ஜெராக்ஸ்எடுத்துக் கொண்டாள்.
மாமி வெண்பொங்கலை அடுப்பிலிருந்து இறக்கி, பத்து நிமிடங்கள் கழிந்தவுடன், எடுத்து ஒரு வாய்போட்டுக் கொள்ளலாம் என்று ஜானகி எத்தனித்த நேரத்தில்
இரும்மா ஜானகி! பெருமாளுக்கு நைவேத்தியம் செஞ்சுட்டு அப்புறமா சாப்பிடலாம்என்று இயல்பாகக் கூறினாள்.
தூக்கி வாரிப்போட்டது ஜானகிக்கு.  அடடா! நாம் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டோம்!’
அன்று முதல், ஜானகியின் சமையலைப் பெருமாள் சுவைத்த பின் தான் அனைவருக்கும்!