Sunday, July 15, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 6

வானவராயன் சதித்திட்டம் அம்பலமாகும் கடைசி அத்தியாயம்


சோளபுரி விழாக்கோலம் பூண்டிருந்தது.  அங்கங்கே முகாமிட்டு வல்லவராயன் வாள் வீச்சை சிலாகிக்க, மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று கேட்டுக்கொண்டு ‘மன்னர் வல்லவராயன் வாழ்க!’ என்று கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள். 


அரசவையில் நாளை கொடுக்கப்போகும் ‘வீச்சனை வென்ற வீரர்’ பட்டத்துக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன.


பௌர்ணமியாதலால முழு நிலா வானில் நீந்திக்கொண்டு, வெளிச்சத்தை நந்தவனம் முழுதும் இறைத்துக்கொண்டிருந்தது.  
உலவிக்கொண்டிருந்த வல்லவராயனை அவ்வப்போது தென்றல் வந்து தழுவினாலும், மனது புழுக்கமாயிருந்தது.  திருநங்கை இருமுறை அழைப்பு விடுத்தும் போகாது ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். 


திருவடிப்பொடியார் தன்னிடம் உடனடித் திருமுகம் வேண்டி நின்றதின் காரணம் வேறு தெரியவில்லை.


‘வல்லவா! என்ன சிந்தனை, வெற்றிக்களிப்பில் கொண்டாட வேண்டிய நீ ஏன் அமைதி காக்கிறாய்?’ என்று கேட்டுக்கொண்டே உற்சாகமாய் வந்த திருவடிப்பொடியார், திண்டு போன்று இடப்பட்டிருந்த. இருக்கையில் அமைதியாக அமர்ந்தார்.


வல்லவராயன் பதிலேதும் சொல்லாமல் பெருமூச்செறிந்தான்.  திருவடிப்பொடியார் எதிரில் அமர்ந்துகொண்டான்.


‘கத்திவீச்சன் தன் திறமை முழுவதும் உபயோகிக்கவில்லையோ என்கிற சந்தேகம் உனக்கு.  இறுதிச்சுற்றில் வாளைத் தவறவிட்டது இயல்பாயில்லையோ என்கிற ஐயம் உன் மனதைக் குடைகிறது.  என்ன சரிதானே வல்லவா?!’ என்று புன்னகை பூத்தார் திருவடிப்பொடியார்.

வல்லவராயன் திடுக்கிட்டான்.


‘நீங்கள் நினைப்பதெல்லாம் உண்மை. கத்திவீச்சனை விலைக்கு வாங்கிய பின் எப்படி அவன் உங்களை எதிர்த்துப் போரிடுவான்?’ என்றார் அமைதியாக திருவடிப்பொடியார்.


‘ஆசானே! இதென்ன அநியாயம்?’ என்றான் சினத்துடன் வல்லவராயன்.


‘வல்லவா! அமைதி…அமைதி…!’ என்ற திருவடிப்பொடியார் தொடர்ந்தார். 


‘கத்திவீச்சனின் பூர்வீகத்தை கொஞ்சம் தோண்டியபோது, இதுவரை அவன் எந்த மன்னனிடம் நேரடியாக மோதவில்லை என்கிற தகவல் எனக்குக் கிட்டியது.  படைத்தளபதிகள், வாட்போர் வல்லுநர்களிடம் மோதி அவர்களை வென்றவன் ஏன் உங்களை உசுப்பேற்றி போட்டிக்கு இழுக்க வேண்டும்?  கொஞ்சம் ஆராய்ந்தபோது, என்னையே உலுக்கும் உண்மை தெரிந்தது.


தங்கள் சிறிய தகப்பனார் ஏவி விட்ட குறுவாள் கத்திவீச்சன்.  ஐந்தாயிரம் பொன் பெற்றுக்கொண்டு, நஞ்சு தடவிய வாள் கொண்டு, உங்களோடு பொருதி, காயப்படுத்தி, நாள்படக் கொல்லும் நஞ்சை உட்புகுத்தி,  உங்களைக் கொல்ல வேண்டும் என்கிற கொடிய சதியுடன் உங்களை இழுத்திருக்கிறான்.


யோசித்துப் பார்த்தேன்.  மக்களுக்குத் தங்கள் வீரம் தெரிந்து நாளாகிவிட்டன.  போருக்கான வாய்ப்பும் இல்லாத நேரத்தில், இது போன்ற போட்டிகள் மக்களுக்கு உற்சாகத்தைத் தரும்.  அதுவும் மன்னரே போட்டியிடுகிறார் என்றால்…வேலையை விட்டுவிட்டு, பொன்களை அள்ளிவிட தயாராய் இருக்க மாட்டார்களா?  ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைக் கொய்ய முயற்சி செய்தேன்.


ராஜத் துரோகம், பாதாளச் சிறை என்றெல்லாம் பயமுறுத்தி, கத்திவீச்சனை எனது திட்டத்துக்குப் பணியவைத்தேன்.  பத்தாயிரம் பொன் தருவதாக ஆசை காட்டியவுடன் வழிக்கு வந்துவிட்டான். 


தவிரவும், பொன்களைக் கொடுத்து பந்தயத்தைக் காண வந்த மக்களுக்கு பொழுதும் போய், சுவாரஸ்யம் கலந்தும் இருக்க வேண்டாமா?


என்ன…பந்தயம் இயல்பாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லவில்லை. ஆக, பந்தயம் உங்களைச் சுற்றி இயங்க, எனக்கு நிறையவே உதறலாயிருந்தது.  ஆனால், விடாது நீங்களும் போட்டியிட்டு, திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாயிருந்து விட்டீர்கள்.


இதில் வருத்தப்பட ஏதுமில்லை.  அரசியலில் இதெல்லாம் சகஜம் வல்லவா!’ என்றார் திருவடிப்பொடியார்.  இதழ்களில் இன்னும் புன்னகை .


வல்லவராயன் அயர்ந்து போய், பேசத் தோன்றாது அமர்ந்திருந்தான்.


‘நீங்கள் அடிக்கடி சொல்வதை நினைவூட்டுகிறேன். இதுவும் நாம் அடுத்த வரும் சந்ததியினருக்கு வைத்துவிட்டுப் போகும் சொத்து.  யார் கண்டது? வரப்போகும் பந்தயங்களை முன் கூட்டியே தீர்மானிக்கும் சக்திகள் பின்னாளில் வரலாம். (ஆதாரம்: Ancient Tamil Rulers’ Fixing of War & Competition by Liar, Gapsa & Reels, Page 29) பிள்ளையார் சுழியை நாம் போட்டதாய் வைத்துக் கொள்ளுங்கள். 


வானவராயனின் சதியை வென்றுவிட்டோம்.  இந்த வெற்றியை திருநங்கையோடு மகிழ்ச்சியாய்க் கொண்டாடுங்கள்.  கத்திவீச்சனைத் தக்க மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும். வருகிறேன் வல்லவா!’ என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போயே போய் விட்டார். 

-முற்றும்

பின் குறிப்பு


1. வானவராயன் கத்திவீச்சனைக் கொல்வதற்காகவும் சதித் திட்டம் தீட்டுவதாகத் தகவல்.


2. திருநங்கை இரண்டு மாதம் ‘முழுகாமல்’ இருக்க, சோளபுரி பால வல்லவராயனுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.


3. அங்கவைக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது.  பெண் தோழனாக வல்லவராயன் பங்கேற்பதால், சிபிசிஐடி மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறது.


4. வீச்சனை வென்ற வீர்ன் வல்லவராயன் மல்யுத்தப் பயிற்சியில் ஏனோ ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறான்.


5. சிவந்தமேனி என்கிற பெயர் கொண்ட, கோயிலில் ஒட்டுக்கேட்ட கருப்பு நிற ஒற்றன் ரொம்பவே தாமதமாய்க் கொண்டு வந்த ’வானவராயன் சதித் திட்டம்’ கேட்டுத் திருவடிப்பொடியார் நோகாமல் தலையில் அடித்துக்கொண்ட சேதி யாருக்கும் தெரியாது.

1 comment:

Swetha Venkat said...

why shud the story end now ? :) enjoyed the writing. i think the story went off track in the 2nd chapter but came back to form in the chapters that followed. Nice work!