Saturday, July 14, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 5

வல்லவராயன் களத்தில் இறங்கும் ஐந்தாம் அத்தியாயம்



வாள் போட்டி சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருந்தது.  கூட்டத்தின் ஆரவாரிப்பு கூடியிருந்தது.

விதிமுறைகள் சர்வ சாதாரணமாய் அமைக்கப்பட்டிருந்தாலும், மன்னரே நேரடியாய் மோதுகிறார் / கத்திவீச்சன் வாள் திறமை கேள்விப்பட்டு, முண்டியடித்துக்கொண்டு மக்கள் கூடி, பொன்கள் கொடுத்து, காலையிலேயே களை கட்டத் துவங்கிவிட்டது.

ஐந்து சுற்று மோத வேண்டும் – அதிக சுற்று வெல்பவர்கள், போட்டியில் வென்றவராக அறிவிக்கப்படுவர் என்றபோது அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.

முதல் இரு சுற்றுகளில் கத்திவீச்சனின் திறமை அசாத்தியமாயிருந்தது.  வல்லவராயனால் எதிர்கொள்ள முடியாமல் சுலபமாக விழுந்ததில், ஆர்வம் குறைந்தே போனது.  மன்னரின் விசுவாசிகள் காணச் சகியாமல் நெளிந்தனர்.  திருவடிப்பொடியார் முகம் இறுகி அமர்ந்திருந்தார்.  திருநங்கை முகத்தில் ஈயாடவில்லை.

மூன்றாவது சுற்றில் சத்திரிய குலத்தவன் என்பதைச் சற்றே கோடிட்டுக் காட்டி, சிறுத்தையைப் போலச் சீறிப் போரிட்டு வென்ற வல்லவராயன், நான்காவது சுற்றின் இறுதியில், வல்லவராயன் அயர்ச்சியைக் கண்டு தோல்விதான் என தீர்மானமான நொடியில், திடீரெனப் பம்பரமாய்ச் சுழன்று, கத்திவீச்சனின் வாட்களை தட்டிவிட்டு, நிராயுதபாணியாக்கி ’அழகு’ காட்டியதில் கூட்டம் அயர்ந்து போய், சுதாரித்து, கை தட்டிச் சந்தோஷத்தை வெளிப்படுத்தியது.  கத்திவீச்சன் தன் கண்களையே நம்பாமல் களத்தை விட்டு விலகினான்.

அங்கவை வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள்.  திருவடிப்பொடியார் முகம் இளகியிருந்தாலும் புன்னகை இல்லை.  திருநங்கை வெளியில் சிரித்தாலும், உள்ளுக்குள் உதறலாய் இருந்தாள்.  வல்லவராயனின் இயல்பு எப்படி என அனைவருக்கும் தெரியும்.

இறுதிச் சுற்றில் இடக்கையால் மட்டுமே போரிட வேண்டும்.  கத்திவீச்சன் உற்சாகமாயிருந்தான்.  .வல்லவராயன் சோர்வாயிருந்தான். ‘விட்டால் போதும்’ என்கிற நிலைக்கு எப்போதோ வந்துவிட்டான்!

சுற்று துவங்கியது.  வல்லவராயன் சற்றே அசந்த தருணத்தில், புஜத்தில் காயப்படுத்தி, கத்திவீச்சன் ஆரவாரிக்க, கூட்டம் மயான அமைதி காத்தது.  வல்லவராயன் விதியை மறந்து, வலக்கைக்கு வாளை மாற்ற முயற்சிக்க, கத்திவீச்சன் கேலியாய் ‘இடக்கை மன்னா, இடக்கை! இடக்கையில் போர் புரிய வேண்டும்!’ என்றதும் வல்லவராயன் ரத்தம் வழிந்த இடது கையில் வைத்துக்கொண்டான்.

கத்திவீச்சனின் வாள் சுழற்றும் முறை சற்றே கடுமையாய் மாறியிருக்க, வல்லவராயன் தடுத்துக்கொண்டே வந்தான்.  ஒரு கட்டத்தில், கத்திவீச்சனின் கைகள் வலுத்து, வல்லவராயன் கழுத்தைக் குறிவைத்துத் தாக்க, வல்லவராயன் சுதாரித்துத் திறமையாக எதிர்கொண்டதை கூட்டம் ஆர்வத்துடன், வியப்புடன், அச்சத்துடன், அமைதியுடன் பார்த்துக்கொண்டிருந்தது.

இரு நாழிகைகளுக்கும் மேலாக நீண்ட வாட் போரில், கத்திவீச்சன் கை ஓங்கியிருப்பதைப் பார்த்த மக்கள் கவலையுடன் அமர்ந்திருக்க, வல்லவராயன் தடுத்துக்கொண்டே அருகில் வந்து, நொடிக்கும் குறைவான நேரத்தில் கத்திவீச்சனின் இடக்கையை வாளால் கீறி விட, பதட்டத்தில் கத்திவீச்சன் வாளைத் தவறவிட்டான். வாள் ‘நங்’ என்ற ஓசையுடன் தரையில் விழுந்ததும், வல்லவராயனின் வாள் கத்திவீச்ச்னின் மார்பைக் குறி வைக்க,  மக்கள் கூட்டம் உற்சாகத்துடன் ‘மன்னர் வாழ்க!’ என்று கூக்குரலிட்டது.

திருநங்கை ஓடி வந்து, வல்லவராயனைக் கட்டிக்கொண்டாள்.  அங்கவையின் உற்சாகம் கரை புரண்டோடியது.  திருவடிப்பொடியார் இதழோரம் புன்னகை அரும்பியது.

வல்லவராயன் திருநங்கையிடமிருந்து விலகி, தலை குனிந்து நின்று கொண்டிருந்த கத்திவீச்சனைக் கட்டிக்கொண்டான்.  ‘கத்திவீச்சன் வாழ்க!’ என்று உரக்கச் சொன்னதும், கூட்டம் வழி மொழிந்தது.

அமர்ந்திருந்த திருவடிப்பொடியார் எழுந்து வந்து, ‘மன்னர் வாழ்க! ஆரோக்கியமான போட்டியை நெடுநாட்கள் கழித்துப் பார்க்கும் பாக்கியம் கிட்டியது.  மன்னர் வென்றாலும், கத்திவீச்சன் பெருமையை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது.  மன்னர் அனுமதி பெற்று, கத்திவீச்சனுக்கு பத்தாயிரம் பொன் அளிக்க உத்தரவிடுகிறேன்!’ என்றதும் மக்கள் கூட்டம் கை தட்டி வாழ்த்தொலியைத் தெரியப்படுத்தியது.

-அழகு நிலா வளரும்

No comments: