Tuesday, July 10, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 4

வல்லவராயனை திருநங்கை ஓட்டும் நான்காவது அத்தியாயம்


கதிரவன் உதித்து, நாழிகைகள் மூன்று கடந்தும், மங்கள வாத்தியங்கள் ஒலித்து அடங்கியும், வல்லவராயன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தது திருநங்கைக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.


‘மகாராஜா! இன்னும் என்ன உறக்கம்?’ என்றாள் குரலில் மென்மையை வரவழைத்துகொண்டு.


‘இன்றுதான் ஞாயிறு ஆயிற்றே, அரசவையும் இல்லை.  என்னதான் செய்யப்போகிறோம்?  அதிகமாக உறங்கினால் உனக்கு ஆகாதே?’ என்று முனகினான்


‘கத்திவீச்சன் வாட்களோடு விருந்தினர் மாளிகையில் நாட்களைக் கழித்துக்கொண்டிருக்கிறான்.  வாள் வீரர்கள் தங்களுக்குப் பயிற்சியளிக்க தினமும் காலையில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  நீங்களோ எதையுமே பொருட்படுத்தாமல் படுக்கையில் புரண்டு கொண்டு, இன்று ஞாயிறு என்று முனகிக்கொண்டிருக்கிறீர்கள்…இதுதான் மன்னருக்கு அழகா?’ என்று மென்மை தொலைத்துப் பொரிந்தாள்.


’மங்கள வாத்தியங்களின் ஒலியை விட உன் ஒலி அதிகமாகிக்கொண்டே போகிறது.  நீ கைக்குழந்தையாயிருந்தபோது அப்படி என்னதான் உனக்குக் கொடுத்தார்களோ? எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு’ என்று மீண்டும் முனகினான் வல்லவராயன்.


‘அதைத்தான் நானும் சொல்கிறேன்.  விடிந்து இவ்வளவு நேரமாகியும் தூங்கிக்கொண்டிருக்கிறீர்களே?  கொஞ்சமாவது பொறுப்பிருந்தால் இப்படிச் செய்வீர்களா? அன்று பார்த்தது கண்களில் இன்றும் பசுமையாய்…இரு கரங்களிலும் வாளைச் சுழற்றிய அவரை எப்படி வெல்வது என்கிற யோசனையே இல்லாமல் சோம்பலாய்க் காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தால் எப்படி?’ என்றாள் கோபமாக திருநங்கை.


‘ஏன் இப்படி கணவன்/மனைவி எந்நேரமும் சண்டை போட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.  இது பற்றியும் கொஞ்சம் ஆராய வேண்டும்’ என்று மனதுள் நினைத்து எழுந்து விட்டான் வல்லவராயன்.


எல்லாவற்றையும் முடித்துச் சிற்றுண்டிக்கு அமர்ந்தபோது வாக்குவாதம் தொடர்ந்தது.


‘அண்ணாவிடம் இதைப் பற்றி பேசினீர்களா?’ (திருவடிப்பொடியாரை ‘அண்ணா’ என்றும் அழைப்பர்!)


‘அவரால் என்ன செய்துவிடமுடியும்? நான் தானே போட்டியை எதிர்கொள்ள வேண்டும்’ என்று நினைத்ததை வெளியில் சொல்லவில்லை வல்லவராயன்.


‘இதென்ன பொறுப்பில்லாத்தனம்?  பயிற்சியும் மேற்கொள்ளாமல், பெரியோர்களின் உதவியையும் நாடாமல் நாட்களைக் கடத்துவதில் என்ன லாபம்? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?’


ஒன்றுமே பேசவில்லை வல்லவராயன்.


‘கத்திவீச்சனுக்குப் பிடித்த தின்பண்டமே சுண்டக் காய்ச்சிய பாலில், சர்க்கரை, குங்கமப்பூ, பலவித பருப்புகளைக் கலந்து சாப்பிடுவதுதானாம்.  (இப்படிச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் பால் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை என்கிற சேதி கசிகிறது!)  அவனுடைய பயிற்சிகள் காலையில் துவங்கி மதியம் வரை நீளுகிறதாம்.  இரு கரங்களில் வாள் சுழற்றும் வித்தையை நாளெல்லாம் பார்த்துக்கொண்டேயிருக்கலாமாம்.  ஆனால் நீங்கள்?  ஒன்றுமே செய்யாமல், வேளைக்கு எழுந்து கொள்ளக்கூட முடியாமல், நேரத்துக்கு வயிற்றுக்கு மட்டும் தள்ளிக்கொண்டேயிருக்கிறீர்கள்’ என்று சொல்லிக்கொண்டே போனதும் வல்லவராயன் பொறுமை இழந்தான்.


‘மன்னன் என்றால் வெற்றி வாகை சூட வேண்டும் என்கிற கட்டாயமில்லை திருநங்கை…தோற்கக்கூடாதா?  தோற்றுவிட்டுப் போகிறேன்…’ என்றான் கோபமாக.


திருநங்கையும் விடாது ‘தோற்பதா?  சோளபுரி வம்சம் தோற்றதாகச் சரித்திரம் இல்லை மகாராஜா!  இப்படியொரு அவமானம் என் கணவனால் சோளபுரிக்கு வரக்கூடாது’ என்றாள் ரோஷத்துடன்.


‘திருநங்கை! எனக்குத் தெரிந்து என் பாட்டனார் எந்தப் போருக்கும் சென்றதில்லை.  தந்தையார் போர்க்களத்தைப் பார்த்ததில்லை.  கப்பத்தை ஏற்றுகிறேன் என்பதைத் தவிர சோழ மன்னர் வேறு சேதி அனுப்பி எந்த போருக்கும் அழைத்ததில்லை.  அப்படிப்பார்த்தால் சோளபுரி வம்சம் தோற்றதாகச் சரித்திரம் இல்லைதான்’ என்றான் வல்லவராயன்.


‘மகாராஜா! இதெல்லாம் ஒரு பேச்சா? பயிற்சிக்குப் போவதுமில்லை.  மேம்போக்காகப் பேசிக்கொண்டு, நாட்களையும் கடத்திக்கொண்டு போனால், புரட்டாசி பௌர்ணமி இதோ வந்துவிடும்.  நீங்கள் ’கடுக்காய்’ கொடுத்து ஓடிப் போகவும் முடியாது.  தெரிந்துகொள்ளுங்கள்’ என்று சினத்துடன் பழரசக் கிண்ணத்தை ‘ணங்’ என்று வைத்தாள். போய்விட்டாள்.


மக்களும் புரிந்து கொள்ளவில்லை; எடுத்து வளர்த்த ஆசானும் புரிந்து கொள்ளவில்லை; மணம் புரிந்த மங்கையும் புரிந்து கொள்ளவில்லை என்கிற எண்ணங்களில் வல்லவராயன் மனம் கசந்தது.


அழகு நிலா வளரும்...

No comments: