Thursday, July 05, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 2


கதாநாயகன் வல்லவராயனைச் சங்கடத்தில் ஆழ்த்தும் இரண்டாம் அத்தியாயம்


நாயகன் வல்லவராயன் ஆளும், திருவடிப்பொடியார் கண்காணிக்கும், வானவராயன் கண் வைக்கும் சோளபுரி என்றழைக்கப்படும் ராஜ்யம் காலப்போக்கில் தஞ்சையில் கரைந்திருக்கக் கூடும் என்று சரித்திர வல்லுனர்கள் கூறுவார்கள். (ஆதாரம்: Cholas’ Fool Proof – Prof. Dupe, Pg 126


வல்லவராயன் தந்தை சுப்பராயன் காலத்திலிருந்தே சோழர் ஆளுமைக்கு உட்பட்டு, கப்பம் கட்டத் துவங்கி விட்டதால், இன்றுவரை போர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.  மாதம் மும்மாரி பொழிதலும், திருவடிப்பொடியாரின் தீவிர, அதிரடி நடவடிக்கைகளில் கஜானா செழித்து, ஒற்றர் படை வளர்ந்து, படைச் செலவு குறைந்து, மக்கள் நலம் மிகுந்திருந்தது.


வானவராயனின் சூழ்ச்சிகளைக் களைந்து வல்லவராயனைக் காத்து, இயல்பாகவே மரங்கள் நிறைந்து, அரண் போல அமைந்த சோளபுரியைத் தன் தாயாகவே பாவித்து கண்போலக் காத்து வரும் திருவடிப்பொடியாரிடம் வல்லவராயனுக்கு பக்தியே உண்டு. 


திருவடிப்பொடியாரும் வல்லவராயனிடம் மகன் போலப் பாசங்கொண்டிருந்தாலும், சமயத்தில் அவனின் சில செயல்களால் சங்கடத்தில்  ஆழ்வதுண்டு.  அந்நேரத்தில் திருமுகம் வேண்டி, தனது பேச்சுக்களால் அவனையறிந்து, மாற்றுவதுண்டு, மாறுவதுமுண்டு!


பின்னாளில் தோன்றி நம்மை இம்சிக்கப் போகும் ‘இம்சை அரசன்’ வல்லவராய வம்சாவளியில் வந்தவன் தான்! (ஆதாரம் – தமிழகக் குறுநில மன்னர்களின் குசும்புகள், மாரி கேப், பக்கம் 131).   அதனாலோ என்னவோ, வல்லவராயன் செயல்களில் ‘இம்சை’யின் சாயலைக் காணலாம்!


வல்லவராயன் அன்று காலையிலிருந்தே இயல்பாயில்லை.  எப்போழுதும் சரியாய் நிகழும் காலைக்கடன், ‘முக்கி’யும் நிகழாதது, காலை நடை பயிலும்போது சந்திப்பதாய்ச் சொன்ன அங்கவை வராதது,  இட்டிலி என அழைக்கப்படும் சிற்றுண்டியுடன் தக்காளித் தொக்கு இல்லாதது, இரு நாட்களாக திருவடிப்பொடியார் கண்களில் படாதது போன்ற காரணங்களுக்காகவும் இருக்கலாம்.  அல்லது அரசவையில் இன்னும் இருக்க வேண்டுமே என்கிற ஆயாசமாகவும் இருக்கலாம் (இது போன்ற ஆயாசங்கள், வெறுப்புகள் குறுநில மன்னர்களுக்கு இருந்ததென ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு - ஆதாரம் - ராசாக்களின் ராவடி – டாக்டர் புருடா – பக்கம் 81).


அரசவை அன்று கூட்டம் மிகுந்து காணப்பட்டது.  மக்களுக்கு வேறு வேலை இல்லை போலும்.  ’தினமும் என்னதான் நடக்குது’ என்கிற ரீதியில் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  பொரிகடலை முத்திரை பதித்த ஆசனம் தவிர அனைத்தும் நிரம்பியிருந்தன.  வல்லவராயன் முகபாவம் கண்டு யாவரும் பதில் பேசாது அமர்ந்திருந்தனர்.


வல்லவராயன் தொங்கு மீசை வைத்திருந்தான்.  பிரஸன்ன வேங்கடேச பெருமாளைத் துதித்து விட்டு வந்ததால், நெற்றியில் திருமண் மேலே சிறிதாய் அஞ்சனமும், வலது காதில் துளசி தளமும் இருந்தது.  அணிய வேண்டுமே என்கிற விதத்தில்  ஆடைகள் அமைந்திருந்தன.  கண்களில் அலுப்பும், சலிப்பும் நிறைந்திருந்தன.  சாமரம் வீசிய பாவையிடம் காணப்பட்ட சுவாரசியம் வேறெதிலும் இல்லை. உன்னிப்பாய்க் கவனித்து ஓலையெழுதினான்.  அவளிடம் கொடுக்கவும் செய்தான்.


படிக்காமல் செருகிக்கொண்டு, அவனுக்கு மட்டும் கேட்கும்படியாய் ‘கச்சையை இச்சையுடன் நோக்கும் மன்னா! நீர் தரும் பிச்சை பொறுத்து…’ முடியுமுன்னே…


வாயிற்காப்போன் உள்ளே நுழைந்து ‘மன்னா! தங்களைக் காண வட தேசத்திலிருந்து வீர்ர் ஒருவர் வந்துள்ளார்’ என்றுரைக்க, கவனம் சிதறிய வல்லவராயனின் ’உடனே வரச்சொல்’ போதாத வேளையாக இருந்திருக்க வேண்டும்.


வந்தவன் திடகாத்திரமாயிருந்தான்.  அணிந்திருந்த ஆடைகள் சுத்த மாவீரனாகக் காட்டின.  இருபுறங்களிலும் உறை இட்டு, வாட்களை வைத்திருந்தான்.  மிக மெலிதான, வரையப்பட்டதோ என எண்ணும்படியான மீசை.  கண்கள் சீனாக்காரனைப் போல் சிறியதாயும், கூர்மையாயும் இருந்தன.  வல்லவராயனைப் பார்த்த பார்வையில் மரியாதை இருந்தது.  அச்சமில்லை.


‘மன்னா! வணக்கம்’ என்றதில் தமிழ் கொச்சைபட்டது.  ‘என் பெயர் கத்தி வீச்சன்.  மறைகழன்ற அடியாரிடம் முறையாகப் பயின்று, வாட் போர் புரிவதில் தேர்ச்சி பெற்று, குறுநில மன்னர்களைக் கண்டு, அவர்தம் வீர்ர்களை வென்று, தோல்வியைக் காணாமல் தங்கள் முன் வந்துள்ளேன். என் வாள் வீச்சைப் பார்க்கிறீர்களா?’ என்றான்.


’ஆகட்டும்’ என்றதும் வாட்கள் உறையிலிருந்து உருவப்பட்டன.


இரு வாட்கள் சுழன்ற விதம் வார்த்தைகளில் விவரிக்க இயலாத அற்புதமாயிருந்தது.  நடனக்காரியின் நளினம், மேளக்காரனின் தாளம், குயிலின் கானம், கரகாட்டத்தின் லாகவம், படைத்தளபதியின் கூர்மை எல்லாம் கலந்து மோன நிலைக்கு இட்டுச்சென்றன.  அரசவைக் கூட்டம் அயர்ந்து போயிருந்தது.


ஒரு நாழிகைக்கும் மேலாக நிகழ்ந்த அற்புதம் அடங்கியவுடன், கூட்டம் ஆர்ப்பரித்தது. கை தட்டியது.  ஆரவாரித்தது.


வல்லவராயன் வியந்து போனான்.  கழுத்திலிருந்த விலை உயர்ந்த முத்துமாலையை எடுத்தான்.  தானே எழுந்து சென்று கத்திவீச்சனுக்கு அணிவித்தான்.  கூட்டம் மீண்டும் கை தட்டியது.  ஆர்ப்பரித்தது.


’மன்னா! என்னிடம் இது போன்ற பரிசுகள் பல உண்டு.  வாங்கி, வாங்கி அலுத்துப்போய்விட்டன.  தினவெடுக்கும் தோள்களுக்கு வேலை கொடுங்கள்’ என்றான் கத்திவீச்சன்.


’கொடுத்துவிட்டால் போயிற்று.  எங்கள் நாட்டில் சிறிது இளைப்பாறுங்கள்.  எங்கள் வீரர்களிடம் வலு இருக்கிறது.  வீரம் இருக்கிறது.’ என்றான் வல்லவராயன்.


‘வீரர்களைக் கண்டு நாளாகிவிட்டது மன்னவா!  தாங்கள் வாட்போரில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  என்னுடன் போட்டியிடத் தயாரா?’ என்றான் கத்திவீச்சன்.


வல்லவராயன் மெல்ல நகைத்தான்.  ;அது அழகல்லவே! முறையல்லவே!  வீரர்கள் இருக்க அரசன் நேரடியாகப் போரிடலாகாது, அது அரச தர்மம் இல்லை என்று புராணங்களும், சாத்திரங்களும் கூறியிருப்பது தங்களுக்குத் தெரிந்திருக்குமென நினைக்கிறேன்’ என்றான்.


‘மன்னா!  சாத்திரங்களும் புராணங்களும் நாம் வகுத்ததுதானே!  மீறலாமே…என்னுடன் நடை பழக வாருங்கள்!’ என்றான் கத்திவீச்சன்.


வல்லவராயன் மௌனம் காத்ததை கத்திவீச்சன் சாதகமாக்கிக்கொண்டான்.


‘மன்னா!  என்னைப் பற்றி இப்போது தெரிந்து விட்டதால் ஏற்பட்ட நடுக்கமா? பரவாயில்லை, உங்கள் வீரர்களிடமே போரிட்டுப் பார்க்கிறேன்’ என்று உரக்கக்கூறி கேலியாய் நகைத்தான். அரசவை சலசலத்தது.


வல்லவராயன் வெகுண்டு வாளை எடுக்க உறையில் கை வைத்த தருணத்தில்…வாள் இல்லாததை உணர்ந்தான்!  


மேற்கொண்டு கதையை எப்படி நகர்த்துவது?  அடடா! முக்கியமான பாத்திரத்தைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறோம்.  அறிமுகப்படுத்தவே யில்லையே?!  


‘வல்லவா!  நிறுத்துங்கள், அமைதியாயிருங்கள்’ என்று கர்ஜித்தபடி  பிரவேசித்தார் அவர்.  மன்னவனை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு.  யாரெனச் சொல்லவும் வேண்டுமோ? அவர்தான் திருவடிப்பொடியார்! சட்டென அரசவையில் அமைதி பூத்தது.


(கதையின் போக்கை நிர்ணயிக்கக்கூடிய வல்லமை படைத்த திருவடிப்பொடியார் அரசவையில் திடீரென பிரவேசித்ததால் வர்ணிக்க இயலாமல் போய்விட்டது. அவர் பற்றி பின்னே பார்ப்போம்!)


கத்திவீச்சன் இதை, இதை  எதிர்பார்க்கவேயில்லை.  சிறு கண்களால் அவரை முறைத்தான்.


‘வல்லவா! மன்னன் முறை தவறி நடக்கலாமா? கொஞ்சம் பொறுங்கள்’ என்ற திருவடிப்பொடியார் கத்திவீச்சனைத் தீர்க்கமாகப் பார்த்தார்.  


‘விருந்தினராய் வந்தீர், அதனால் ராஜ நிந்தனைக்கு ஆளாகாமல் பிழைத்துப் போகிறீர்.  எதற்கும் நேரம் காலம் உண்டு போட்டிக்கும், போருக்கும் காலத்தின் உசிதம் வேண்டும்.  எங்கள் விருந்தினராய் இளைப்பாறுவீர்.  தங்களின் வீரத்தோடு எங்கள் மன்னரின் வீரம் விளையாடும் நாள் தூரத்தில் இல்லை’ என்று கேலியாய் கத்திவீச்சனைப் பார்த்து திருவடிப்பொடியார் உரக்க உரைத்தார்.


’யாரங்கே?  இவருக்கு உரிய மரியாதை அளித்து நமது விருந்தினர் மாளிகையில் தங்க வையுங்கள்’ என்று உத்தரவிட்டார்.


வல்லவராயன் பதிலேதும் சொல்லாமல் அலுப்பாய் ‘சபை கலையலாம்’ என்றபடி அகன்றான்.  அரசவை கலைந்தது.


சாமரம் வீசும் பாவையிடமிருந்து நழுவிய ஓலையை இரு கூரிய விழிகள் கண்டு, இடக்கரம் கொண்டு அள்ளிக்கொண்டது.


அழகு நிலா வளரும்...

No comments: