Tuesday, December 08, 2009

சகலகலாவல்லவன்!

"நான் மகான் அல்ல; சின்ன சின்ன சுவாரஸ்யமான தவறிழைக்கும் மனிதனே!"

வளசரவாக்கத்தில் வசித்து வந்த காலம் அது.

திருவல்லிக்கேணியிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ் திரைப்படங்களை second run-ல் மதியம் 2.30 மணிக்கு மலிவு கட்டணத்தில் திரையிடுவார்கள். டிக்கெட்டின் விலை ரூ 1 மற்றும் ரூ 2 மட்டுமே! அப்போது கமல் நடித்த சகலகலா வல்லவன் ஓடிக்கொண்டிருந்தது. 25 வாரங்கள் ஓடிய படம் அது. எனக்குப் பார்க்கவேண்டும் என்ற ஆவல்.

என் தந்தையிடம் சென்று அனுமதி கேட்டேன். மறுக்கப்பட்டது. தாயிடம் கெஞ்சினேன். தாய் எனக்காக பரிந்துரை செய்தும் அனுமதி கிட்டவில்லை. என் தந்தையிடம் ஒரு குணம் உண்டு. முதலில் அவர் மறுத்தால் இறுதிவரை முடிவில் மாற்றமிராது.

எனக்கு அந்த வயதிற்குரிய கோபம் வந்தது. இரண்டு நாள் பேசாமல் முகத்தில் 'உம்'! பாச்சா பலிக்கவில்லை! மூன்றாம் நாள் விபரீதமான எண்ணம் உதித்தது. 'அப்பாவிற்குத் தெரியாமல் படம் போனால் என்ன?!'

மளிகை சாமான் வாங்கும் சாக்கில் இரு ஐம்பது பைசாக்களை ஒரு பொக்கிஷத்தைப் போல பதுக்கி பாதுகாப்பாக வைத்தேன். அவ்வப்போது இடம் மாற்றினேன்!

அந்த நாளும் வந்தது. அப்பாவிடம் 'திருவல்லிக்கேணி போயிட்டு வரட்டுமா?' என்றேன். 'படம் பார்க்கத்தான் போகக்கூடாதுன்னு சொல்லிட்டேனே?' என்றார் விடாது! "இல்லப்பா...friends-ஐப் பாக்கப்போறன். ஆனா 5 மணிக்கு வந்துருவேன்" என்றேன்! என்ன தோன்றியதோ 'சரி போயிட்டு வா' என்று முற்றுப்புள்ளி வைத்து அனுப்பி வைத்தார்.

திருவல்லிக்கேணி வந்தேன். என் நண்பர்களைக் கண்டேன். ஒரு நண்பனிடம் மட்டும் நான் செய்யப்போவதைக் கூறினேன். "இதெல்லாம் தப்பே இல்லடா" என்று ஏற்றி விட்டான்!

2.00 மணியளவில் டிக்கெட் கவுண்டரில் நின்றேன். இரு ஐம்பது காசுகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். மனது திக் திக் என்றது. பிரஷர் ஏறிற்று. டிக்கெட் வாங்கும்போது கை நடுங்கியது! அப்பா முகம் எதிரில் வந்து போயிற்று! அங்கும் இங்கும் நோட்டம் விட்டுக்கொண்டே அரங்கினுள் சென்றேன்.

2.30 மணிக்குத் திரைப்படம் துவங்கியதில் மனம் ஆழ்ந்து போனது. படம் முடிந்ததும் பயம் துவங்கியது! ஏற்றி விட்ட நண்பன் "முதல் தடவை இதெல்லாம் சகஜமப்பா. அப்புறமா சரியாயிடும்" என்றான்!

5.30 மணிக்குத் திருவல்லிக்கேணியிலிருந்து கிளம்பி 25C பிடித்து வீட்டினுள் பயந்துகொண்டே நுழைந்த போது மணி 7.00! அப்பா அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். காபி அருந்திக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்தார். பின் அந்த மில்லியன் டாலர் கேள்வி வந்தது

"நீ சகலகலாவல்லவன் பாத்துட்டு தானே லேட்டா வர்றே?" என்றார்!

சர்வ நாடியும் ஒடுங்கிப் போய் "உங்க அனுமதியில்லாம நான் எப்படிப்பா போவேன்?" என்றேன் ஈனஸ்வரத்தில்.

"எனக்குத்தெரியுண்டா உன்னப்பத்தி. நான் சொன்னத நீ என்னிக்கும் மீறமாட்ட. சும்மா விளையாடிப் பார்த்தேன்" என்றார்.

மனது குற்ற உணர்ச்சியில் குன்றிப்போனது. ஆனாலும், உண்மை சொல்லி என்"மதிப்பை" கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை!

அன்று தொடங்கிய வினை, என் திருமணம் வரை தொடர்ந்தது. நிறையப் படங்கள் வீட்டிற்குத் தெரியாமல் பார்த்தேன். தெரியாமல் போவதில் "திரில்" என்பது போய் அந்தப் பழக்கத்துக்கு நான் அடிமையானதுதான் மிச்சம்! ஆனாலும், அவ்வப்போது அம்மாவுக்கும் புத்திசாலியான என் தங்கை/தம்பிக்கும் இது தெரிந்தே இருந்தது!!

என் தந்தையிடம் உண்மையை மறைத்த நான், 20 வருடங்கள் கழித்து அவர் இல்லாத நாளில் அனைவரின் முன் ஒப்புக்கொள்வதில் என்ன "தில்" இருக்கிறது?

இன்று யோசித்துப்பார்க்கிறேன். இழப்பு யாருக்கு?!

Wednesday, November 18, 2009

பிரிவு

கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்தில நான் அவள விட்டு பிரிஞ்சதேயில்ல. ஓவர்ஸீஸ் டெபுடேஷன்னதும் நெறயவே யோசிச்சேன். அவகிட்ட பேசினதில 'நாலு வாரம்தானே, ஓடியே போயிரும், போய்ட்டு வந்தா ப்ரமோஷன் வேற'ன்னு சந்தோஷமா வழியனுப்பி வெச்சா.

நாலு வாரம் நாலு மாசமானதில எல்லாமே போரடிக்க ஆரம்பிச்சது. காலிங் கார்டுல பேசறப்பல்லாம் 'உங்கள விட்டு என்னால் இருக்கவே முடியலப்பா'ன்னு பொலம்புவா. எனக்கும் அழுகை வரும். நானும் சொல்ல நெனப்பேன். ஆம்பளயாச்சே?! முடியுமா?!

குணா-ல வர்ற பாட்டு ஞாபகம் வரும் 'எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க அழுகை வந்தது. எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது'. ஒண்ணும் சொல்லாம சமாளிச்சு மனசுக்குள்ளயே அழுதுக்குவேன்.

ஒரு வழியா 'தாய் மண்ணே வணக்கம்' சொன்னப்போ ஆறு மாசாமாயிருச்சி. ஏர்போர்ட்டுல என்னப் பாத்தப்ப அவ கண்ல தண்ணி; என் கண்ணுல கூடத்தான்.

ராத்திரி எனக்கு புடிச்ச ஜாதிமல்லியோட பக்கத்துல படுத்தா. மெல்ல தொட்டப்ப 'நீங்க ரொம்ப மோசம்பா'ன்னா. 'என்னம்மாது...இன்னும் ஆரம்பிக்கலியே!' ன்னதும் 'ச்சீ..அதில்ல'ன்னு செல்லமா சிணுங்கினா.

'வேற என்னம்மா'ன்னதுக்கு, 'எப்ப பேசினாலும் நா 'நீங்க இல்லாம் என்னால இருக்க முடியலே'னு பொலம்பிகிட்டே இருப்பேன். ஆனா நீங்க? என்ன சமாதானப்படுத்தவாவது ஒரு தடவ, ஒரே ஒரு தடவ 'உன்ன விட்டுட்டு என்னாலயும் இருக்க முடியலேம்மா'ன்னு அழ வேண்டாம். அட்லீஸ்ட் வாய்விட்டு சொல்லிருக்கலாம். ஆனாலும் நீங்க ரொம்ப அழுத்தம்பா'ன்னா.

நான் என்னத்த சொல்றது?!

Friday, October 16, 2009

அப்பாவும் தீபாவளியும்

குமுதம் ஜங்ஷனில் 2003 தீபாவளி இதழில் வெளிவந்தது.படித்துப் பாருங்களேன்!
தீபாவளியை என் அப்பா கொண்டாடும் அழகே தனி. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.

என் அப்பாவின் தாத்தா திதி தீபாவளி அன்று வருவதால் அவர் சிறு வயதில் பண்டிகை கொண்டாடியதேயில்லை. ஊரெங்கும் மகிழ்ச்சியுடன் புத்தாடை உடுத்திருக்கையில் என் அப்பா மட்டும் பழைய உடை அணிந்திருப்பார். என் தாத்தா கொடுக்கும் காலணா வெங்காய வெடிகளில் அப்பாவின் தீபாவளி முடிந்துவிடும்! மதியம் திதி முடிந்தவுடன் கொண்டாடப்படும் தீபாவளியில் என்ன சுகம் இருந்திருக்க முடியும்?

எங்களுக்கு விவரம் தெரிந்த வயதில் தீபாவளியைக் கொண்டாடக் கற்றுக் கொடுத்தார். தனக்கு ஒரு எட்டு முழ வேட்டி, ஒரு புது 'கை வைத்த' உள் பனியன், ஒரு துண்டு என்பதோடு திருப்தி யடைந்த அவர், எங்களுக்கு துணிகள் வாங்கிக் கொடுப்பதில் குறையே வைக்கவில்லை. சமயத்தில் இரண்டு/மூன்று செட்கள் கிடைத்து விடும்.

சேனல்களில் அப்போதெல்லாம் வீடுகள் அடைபடாத காலம். தீபாவளியின் சந்தோஷமே பட்டாசுகள்தாம். அதை நன்றாக உணர்ந்திருந்தார் என் அப்பா. மத்திய சர்க்காரில் (ஏஜ“ஸ் அலுவலகம், தேனாம்பேட்டை) வேலை செய்பவர்களின் பல சலுகைகளில் ஒன்று சகாய விலையில் பட்டாசுகள்! அதற்கென்றே ஒரு தனிக்கூட்டம் என் அப்பா அலுவலகத்தில் கூடும்.

என் அப்பாவின் ரசனைகள் தனி. 5 'குருவி' வெடிகள் கொண்ட பாக்கெட் 25; 5 'லஷ்மி' வெடிகள் கொண்ட பாக்கெட் 5; 3 'redfort' சரங்கள்; 1 பாக்கெட் ஊசிப்பட்டாசு; 3 டஜன் கம்பி மத்தாப்புகள் (சாதாரணமான கம்பி மத்தாப்புகளில்தான் ஆர்வம்!); 1 டஜன் சாட்டை; 2 டஜன் தரைச்சக்கரம்; 3 டஜன் புஸ்வானம் என்று வகை வகையாக வாங்கினாலும் விலையென்னவோ ரூ 100க்குள்தான் இருக்கும்! racket, atom bomb, double வெடிகளில் அவருக்கு ஆர்வம் இருந்ததில்லை. பொறுமையாக எங்கள் மூவருக்கும் பிரித்துக் கொடுப்பார் (நான், எனது தங்கை, தம்பி!). அப்பா வாங்கித்தந்த எந்த வெடிகளும் சோடை போனதில்லை.

தீபாவளிக்கு முதல் நாளில் வீட்டில் நிச்சயம் 'பஜ்ஜி' உண்டு! உருளை, கத்திரி, புடலை, வாழை என வகைகள் நீளும். அன்றைய இரவே மறுநாள் உடுத்த வேண்டிய துணிகளை எடுத்து பூஜையறை பலகை முன் வைத்து விடுவார். தலைக்குத் தேய்க்க வேண்டிய எண்ணெய் கூட காய்ச்சி வைக்கப்பட்டு விடும்! கேஸ் பர்னரில் தலையில் 'தவலை'கள் தண்ணீருடன் ஏற்றப்பட்டு விடும்!

காலை 3.30 மணிக்கு எழுப்பி விடுவார் (அது போகப்போகத் வளர்ந்து 4.30 ஆகி இன்று 5.30 ஆகிவிட்டது!). தலைக்கு எண்ணெய் வைக்கப்பட்டவுடன் எங்களில் ஒருவரோடு வீட்டிற்கு வெளியே வந்து ஒரு 'redfort' சரம் வைப்பார். 'பட பட' வென அது வெடிக்கும்போது அவர் முகம் விரிவதை நான் பார்த்திருக்கிறேன். 'எண்ணெய் வெச்சுண்டவுடனே ஒரு பட்டாசு வெக்கணும்; அதான் சாஸ்திரம்' என்பார்.

எல்லோரும் குளித்து முடித்தவுடன், தான் பலகையில் உட்கார்ந்து உடல் முழுதும் எண்ணெய் தேய்த்துக்கொள்வார். 'எண்ணெய் உடம்பு முழுக்க ஒரு எடம் விடாம தேச்சுக்கணும்; அப்பதான் ஒரு வியாதி வராது; அதே போல சீயக்கா மட்டும்தான் தேய்ச்சுக்கணும்; இன்னிக்கு சோப்பு கூடாது; எண்ணெய் முழுக்க போற மாதிரி சீயக்கா தேச்சுக்கபடாது; கொஞ்சம் பிசுபிசுப்பு இருக்கணும்' என்பார். குளித்தவுடன் எல்லோரையும் அன்பாக "கங்கா ஸ்நானம் ஆச்சா?" என்று விசாரிக்கும் அழகே தனி. அதே போல 'தீபாவளி மருந்து' சாப்பிட்ட பின் தான் எல்லா இனிப்பு/கார வகைகளில் கை வைக்க வேண்டும் என்ற அன்புக் க்ட்டளை வேறு!

"புஸ்வாணம், தரைச்சக்கரம், சாட்டை இதல்லாம் ராத்திரி விடணும்; அப்பத்தான் நன்னா இருக்கும். அதுவும் புஸ்வானம் பூத்து விரியற அழக ராத்திரிலதான் பாக்கணும்" என்று வற்புறுத்தி எங்களை ரசிக்க வைத்ததில் அவருடைய பங்கு அதிகம்.

தீபாவளி அன்று அவர் பாதம் தொட்டு ஆžர்வாதம் வாங்க வரும அனைவருக்கும் 'ஒரு ரூபாய்' நாணயம் உண்டு. அது வாங்குவதற்கென்றே எனது நண்பர்/உறவினர் கூட்டம் வருவதும் உண்டு!

இன்றும் தீபாவளி இருக்கிறது; அப்பாதான் இல்லை
!

Wednesday, October 07, 2009

நிஜம்

'பாஸ்கி! படம் பாத்த எல்லாரும் அலர்றாங்க. அவ்ளோ நல்லா இருக்காம். தியேட்டர்ல விசில் பறக்குது. நிச்சயம் வெள்ளி விழாதான். கலெக்ஷன் ரிபோர்ட் பாத்தியா?'

'டேய்! அந்த டாக்டர் ரோலை நான் பண்ணிருக்கணும்டா'

'பாஸ்கி! என்ன வெள்ளாடறியா? செத்துப் போற ரோலை நீ பண்ணா டிஸ்ட்ரிபியூடர்ஸ் வாங்குவாங்களா? இல்ல உன் ரசிகன்தான் சும்மா இருப்பானா? ஸ்க்ரீனை கிழிச்சு தியேட்டரையே கொளுத்திடுவாய்யா!'

'லை•ப் டைம் ரோல் அது; மிஸ்ஸாயிருச்சு!'

'நீ யாரு? எம்ஜியார் ரஜினிக்கப்பறமா நீதான்னு பேசிக்கறாங்க. ரெண்டு பேரோட ஸ்டைலையும் உட்டாலங்கடி பண்ணி, கொஞ்சமா கமலையும் விட்டுடாம கலாய்ச்சிகினு இருக்க. உனக்கு ஏண்டா இந்த வீண் ரிஸ்க்?'

'சும்மார்றா கம்மனாட்டி! திலக் படம் பாத்தியா?'

'ஹ¤ம்..பாத்தேன். ஸ்டார் பெர்•பார்மென்ஸ். ரெண்டு காலும் இல்லாம என்னமா நடிச்சுருக்கான்? ஆனா, உன்னோட படம் சுனாமி மாதிரி 'தள்ளி'கின்னு போயிருச்சு. தேவில அவன் படம் ஈயடிக்குது; பாரடைஸ்ல உன் படம் ப்ளாக்ல போவுது!'

'படத்துக்கு படம் திலக் என்னமா வெரைட்டி கொடுக்கறான்! நான்? ஒரே மாதிரி அம்மா சென்டிமென்ட், காமெடி, டூயட், வில்லன்?'

'பாஸ்கி! என்னாச்சு உனக்கு? ரொம்ப பிலஸா•பிகலா போயிட்ட. ஒண்ணை புரிஞ்சுக்கோ. நீ வந்துட்டு போனா போதும்னு உன் ரசிகன் நெனக்கறான். ஆனா திலக் படத்துல நூத்தம்பது பர்ஸென்ட் பெர்•பார்மென்ஸ் எதிர்பாக்கறான். அதுல கொஞ்சம் கொறஞ்சா கூட ஒப்துக்கறதில்ல'

'டேய்! எனக்குனு ஒரு மனசு இருக்குடா. அதுக்கு நான் தீனி போட வேணாமா?'

'உன்ன நம்பியிருக்கற இன்டஸ்ட்ரிய பாரு; உன் படம் போற வெலைய பாரு; அதனால வாழற குடும்பங்களப் பாரு; கவலையை மறந்து பாலூத்தி, உன்னப் பாத்தா விசிலடிக்கற •பேன்ஸை பாரு; இத்தனை வயசுக்கப்பறமும் உன் 'பல்செட்' சிரிப்புல மயங்கற சின்னப் பசங்கள பாரு; அதாண்டா உன்ன மாதிரி கமர்ஷியல் ஹீரோக்களுக்குத் தீனி. சுருக்கமா சொன்னா எங்கள் இதயத் திருடா! இதாண்டா சினிமா!'

Sunday, October 04, 2009

இரக்கம்

முன் குறிப்பு - 22 வருடங்களுக்கு முன் கையெழுத்து பிரதியான "பைரவி"யில் வெளிவந்த என் கதை அப்படியே தரப்பட்டிருக்கிறது. இந்த எழுத்தில் காணப்படும் "கன்னி"த் தன்மை என்னைக் கவர்கிறது. "காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு"தானே!

12ம் நம்பர் பஸ் ஐஸ் ஹவுஸ் டெர்மினஸ் வரும்போதே நல்ல கூட்டம். எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு ஏறினர், என்னைத் தவிர! எல்லோரும் ஏறிய பிறகு, நான் ஏறி இரண்டாம் படிக்கட்டில் நின்றேன். அப்போதுதான் அவ்வாலிபனை, நடத்துனர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருப்பவனைப் பார்த்தேன்.

ஒல்லியான தேகம். சுருள் முடி. வெளிர் நீல சட்டை. நீல பாண்ட். சட்டை பாக்கெட்டில் அழகாக செருகி வைக்கப்பட்ட பேனா. அருமையாக இருந்தான்.

அடுத்து வந்த ஐஸ் ஹவுஸ் போலிஸ் ஸ்டேஷனில் மற்றொரு கும்பல் ஏறிற்று. நான் இப்போது மூன்றாம் படிக்கட்டில் நின்றேன். பஸ் சிறிதே முனகிவிட்டு செல்ல ஆரம்பித்தது!

இரண்டொரு ஸ்டாப்பிங்குகள் கடந்தன. திரும்பிப் பார்க்கையில் அவ்வாலிபனுக்கு எதிரில் ஒரு கனமான அம்மாளும், கைக்குழந்தைக்காரியும் நின்றிருந்தார்கள். அவ்வாலிபனோ, ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்தான். அதைக் கலைத்தது அந்த கனமான அம்மாளின் குரல்!
"பச்ச புள்ளயோட அந்தம்மா நிக்கறது தெரியல? எழுந்து எடம் விடப்பா!" என்றாள் (கத்தினாள் என்பதே பொருந்தும்!) அவ்வாலிபன் அதிர்ந்து போய் எழுந்தே விட்டான்.

இதையெல்லாம் கவனித்து வந்த நான், "ஸார்! நீங்க உக்காருங்க. இந்த ஸ“ட்டுக்கு முன்னாலயும் லேடீஸ் ஸ“ட்தான். பின்னாலேயும் லேடீஸ் ஸ“ட்தான். அவங்க யாருக்குமே இல்லாத இரக்கம் உங்க கிட்ட மட்டும் இருக்கணுமா? நீங்க உக்காருங்க ஸார்! அப்படியே அந்தம்மா உக்காந்துதான் ஆகணும்னா லேடீஸ் ஸ“ட் லேந்து யாராவது எந்திரிச்சப்புறம் உக்காரட்டும்" என்றேன் அந்த கனமான அம்மாளின் பார்வையைப் பொருட்படுத்தாமல்!

உடனே அவ்வாலிபன் " பரவாயில்லப்பா, பொண்ணுன்னா பேயும் இரங்கும்னு பெரியவங்க சொல்வாங்க. நான் பேயை விடக் கொடியவனா இருக்க விரும்பல. புக் படிச்சிக்கிட்டு இருந்ததால நான் இவங்கள கவனிக்கல. அவங்க இப்ப உக்காரட்டும்" என்றான். நான் பதில் பேசவில்லை. அவன் எழுந்து கொஞ்சம் சிரமப்பட்டு தள்ளி நின்றுகொண்டான்.

Amruthanjan stopping வந்தது. அவ்வாலிபன் இப்போது மிகவும் சிரமப்பட்டு இறங்கினான்.

பஸ்ஸ”ம் கிளம்பியது. அவன் விந்தி விந்தி நடந்ததைக் கண்டு நான் அதிர்ந்தே போனேன்!

அந்த கனமான அம்மாள் முகத்தில் ஈயாடவில்லை!

Thursday, October 01, 2009

பிறந்த நாள்

விஷ்வா அன்று காலை விழித்துக் கொள்ளும் போது மணி ஏழாகிவிட்டது. மனைவி நிகிதாவை திட்டிக் கொண்டே அரக்கப் பரக்கக் குளித்தார். குளிக்கும் போது சட்டென ஞாபகம் வந்தது "அட! இன்றுதானே எனக்கு பிறந்த நாள்..நிகிதா ஆச்சரியப் பரிசு வைத்திருப்பாள்...அருணும், அகிலாவும் வழக்கம் போல் பூங்கொத்துடன்.." நினைப்பே இனித்தது. இன்றாவது அலுவலகத்திலிருந்து žக்கிரம் வந்து எல்லோரையும் "அன்னலஷ்மி"க்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அவருக்குப் பிடித்த நீல நிறத்தில் உடுத்திக் கொண்டு, டைனிங் ஹாலுக்கு வந்தபோது, காலை டிபன் ரெடியாக இருந்தது. "அட..நமக்குப் பிடித்த வெண் பொங்கல், வெங்காய கொத்ஸ”, காரட் அல்வா.." நிகிதாவை மனதில் பாராட்டினார். "என்னங்க..போட்டுக்க வேண்டியது தானே.." என்று கூறியவாறே நிகிதா பரிமாற ஆரம்பித்தாள். வழக்கம் போல் பிறந்த நாள் பரிசான "நெற்றி முத்தம்" மிஸ்ஸ’ங். அதிர்ச்சியாக இருந்தது. நிகிதாவின் முகத்தைப் பார்த்தார். கோபம் எதுவும் இல்லை.

"ஹாய் டாட்!" என்றார்கள் அருணும், அகிலும். நினைவிற்கு வந்தார். "மா..! காலேஜுக்கு லேட் ஆயிடுத்து..žக்கிரம்.." என்றவாறே தட்டில் தாளம் போட்டனர். "டாட்! கேன் யூ ட் ராப் மீ..?" என்று அகில் கெஞ்சினாள். இவர்களுக்குமா ஞாபகம் இல்லை? மற்றொரு சராசரி தினம் போல் அல்லவா நடந்து கொள்கிறார்கள்?

விஷ்வாவிற்கு காரட் அல்வா கசந்தது. சாப்பிட்டு முடித்து "நிகி! நா(ன்) கௌம்பறேன்" என்றார். "சரி..வழக்கம் போல லேட்தானே?" என்றாள் நிகிதா. "ஆமாம்" என்று உதிர்த்து விட்டு மாருதியை உசுப்பினார்.

வழியில் செல்லும் போது வருத்தமாக உணர்ந்தார். மனசு கனமாக இருந்தது. அலுவலகத்துள் நுழைந்து, லிப்டில் ஏறி, 6வது மாடியில் இருந்த தன் கேபினுக்குள் புகும் போது, அவரது செகரட் ரி ஜோத்ஸ்னா "குட் மார்னிங் பாஸ்! ஹாப்பி பர்த்டே" என்றாள். விஷ்வா தெம்பானார். அட்லீஸ்ட இவளாவது ஞாபகம் வைத்திருக்கிறாளே...!

விஷ்வா அன்றைய அலுவல்களில் ஆழ்ந்ததில் மணி ஒன்றானது தெரியவில்லை. கதவை மெலிதாகத் தட்டிய பின் வந்த ஜோத்ஸ்னா "நீங்கதான் இன்னிக்கு எனக்கு ட் ரீட் கொடுக்கணும்..எங்க போலாம்?" என்றாள். விஷ்வாவிற்கும் சரியெனப் பட்டது. "வா..! "அன்னலஷ்மி" போலாம்" என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றார்.

ஏதேதோ பேசியதில் விஷ்வாவிற்கு நேரம் சென்றதே தெரியவில்லை. அசட்டுத்தனமாய் ஜோத்ஸ்னா மேல் சபலம் தட்டியது. புருஷனை இழந்தவள். இன்றும் அவள் பழகும் முறையில் ஒரு வினோதம் தென்படும். அதுவும் எல்லோரும் அலட்சியப் படுத்திய தன் பிறந்த நாளை அவள் கொண்டாடிய விதம் விஷ்வாவிற்கு பிடித்திருந்தது.

இருவரும் லஞ்ச் முடித்து வெளியே வந்தனர். "நீங்க தப்பா நெனக்கலேன்னா நா(ன்) ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் ஜோத்ஸ்னா. விஷ்வா அவளை ஏறிட்டார். "இதுக்கு மேலயும் போய் ஆபீஸா? வாங்களேன்..என் ஃபிளாட்டுக்கு போலாம்" என்றாள். விஷ்வாவிற்கு ஒரு "ஹாஃப்" உள்ளிறக்கியது போல் இருந்தது. "போலாமே.." என்றார் ஈனஸ்வரத்தில். வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறந்தன.

ஜோத்ஸ்னா ஃபிளாட்டில் நுழையும் போது விஷ்வாவிற்கு "ஜுரம்" வந்தது போல் இருந்தது. அங்கங்கே தொங்கும் "ஓவியங்கள்" அவரது இளமையை நினைவு படுத்தின. "பாஸ்..! நான் கொஞ்சம் ட் ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கறேன்.." என்று "எஸ் ஜானகி" குழைவில், ஏறக்குறைய விஷ்வா மேல் படர்ந்து விட்டு ஜோத்ஸ்னா பெட் ரூமிற்குள் சென்றாள்.

விஷ்வாவிற்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. இன்னும் நாம் சும்மா இருந்தால் நமது ஆண்மையே சந்தேகத்துக்குரியதாகிவிடும். உடைகளைக் களைந்து முழு நிர்வாணமாகி பெட் ரூம் கதவைத் தள்ளி நுழைந்தால்..

டேபிள் மேல் "கேக்" வைக்கப் பட்டிருந்தது. "ஹாப்பி பர்த்டே டு யூ" என்று கோரஸாய் நிகிதா, அருண், அகில், ஜோத்ஸ்னா, மற்றும் சில நண்பர்கள் பாடி வரவேற்றனர்!!!

("வலை"யிலிருந்து பின்னப்பட்டது)

Sunday, August 16, 2009

அவளும் நானும்

அவளை நான் இரண்டு நாட்களாகத்தான் பார்க்கிறேன்.

எப்போதும் 'துறு துறு' கண்கள். அந்நியன்(ள்?!) போல வழியும் தலைமுடி. முகம் கொள்ளாத சிரிப்பு. காதுகளில் தொங்கும் தொங்கட்டான் (அ) ஜிமிக்கி?! - பால்கனியில் அடிக்கடி வந்து நிற்கும் அவளை நான் இரண்டு நாட்களாகத்தான் பார்க்கிறேன்!

பெங்களூரின் ஆயிரக்கணக்கான அடுக்குமாடிகளின் ஒன்றில் என் வாசம். எதிரும், புதிருமாய்க் கட்டித் தள்ளியிருக்கும் தீப்பெட்டி சைஸ் வீடுகள். சொந்தமாய் வாங்கியிருக்கும் மூன்றாவது தள தீப்பெட்டி ஒன்றின் பால்கனியிலிருந்து பார்த்தால் எதிர் பால்கனிகளின் சகலமும்(!) தெரியும். அதற்கு நேரமில்லாது பனசங்கரியிலிருந்து, ஒயிட்·பீல்டுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஓடிக்கொண்டேயிருப்பேன் (ப்ராமிஸ்!). கணினி கம்பெனியில் ஜல்லியடிப்பது போக எனது ஆர்வம் சக இந்தியனைப் போல கிரிக்கெட், இசை, ஸினிமா, போக கொஞ்சம் அழகான...பெண்கள்!

முக்கியமான கலைஞர் ஒருவரை 'வைகுண்டம்' தத்தெடுத்துக்கொண்டதில், பெங்களூரே அடங்கிப்போய் 'bread/jam/maggie'-யுமாய், பொழுது போகாது பால்கனியிலிருந்து பார்வையைத் துருத்தியதில் அவளை முதன் முதலாய்ப் பார்த்தேன். செக்கச் சேவேலென்று என்ன ஒரு அழகு! கண்களை நகர்த்த முடியாது தவித்துப் போனேன்! ('எவ்ளோ நேரம் நின்னுகிட்டே இருப்பே?! பாவம்! உனக்கு கால்கள் வலிக்காதா?!')

நாயகன்/நாயகி-க்குப் பின் யாருடைய அறிமுகம் என சினிமா பார்க்கும், அட்லீஸ்ட் தமிழ் சினிமா பார்க்கும் அனைவருக்கும் தெரியும். சரேலென பால்கனியில் நுழைந்த பெண்மணி (வயதை வைத்து பார்த்தால் அவள் பாட்டியாயிருக்க வேண்டும்), 'உனக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாதா, ஏன் கேக்கவே மாட்டேங்கறே?!' என்கிற தொனியில் பேச, அவள் மறுக்க..."ஸ்ஸ்..ஆ"-வை சிகரெட் முனை சுட்டதில் கொஞ்சம் சத்தமாய்ச் சொல்லிவிட்டேன் போலும். பாட்டி முறைத்த முறைப்பில் 'நெற்றிக்கண்' இருந்திருந்தால் சாம்பல்!

மாலை. இன்ஸ்டெண்ட் கா·பியுடன் பால்கனிக்கு வந்தால்....அவள்! தைரியத்தை வரவழைத்துக்கொண்டு 'ஹாய்!' என வாயசைத்து கையை ஆட்டிக்கொண்டே இருந்ததை பார்த்துவிட்டு, ஒரு புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தாள். எதிர்பாராத சமயத்தில், 'கை'யை வாயில் வைத்து, அவள் 'உம்ம்ம்மா' என பறக்கும் முத்தம் ஒன்றைக் கொடுக்க...நான் அம்பேல்! சுதாரித்ததில், பாட்டி என்னை முறைத்துவிட்டு, ஏறக்குறைய அவளை இழுத்துச் செல்வதை பார்க்க முடிந்தது!

சனிக்கிழமை எழுந்து பால்கனிக்கு வந்து சோம்பல் முறித்தபோது, பெங்களூரே அதிகாலைப் பனியில் குளித்துக்கொண்டிருக்க, அத்தனை சீக்கிரமாய் அவள்! 'ஹாய்' என்ற வாயசைப்புக்கு கையசைத்தாள்! 'உன் பேர் என்ன?' என ஆங்கிலத்தில் வினவும்போது...பாட்டி!

'என்னப்பா? மூணு வயசு குழந்தை பால்கனில நிக்குது. விழுந்தா என்னத்துக்கு வுறது? பனி வேற. மிரட்டி வீட்டுக்குள்ள போகச் சொல்லாம அதுகூட கொஞ்சிகிட்டு நிக்கறது கொஞ்ச கூட நல்லால்லப்பா' என உரிமையுடன் அதட்டி விட்டு அவளைத் தூக்கிக்கொண்டு போனாள்!

பாட்டி தோளில் சாய்ந்து, வாயில் விரலை போட்டுக்கொண்டு, அவள் 'க்க்க்க்' எனச் சிரித்தது ரொம்பவே அழகாயிருந்தது.