Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, March 14, 2013

வந்தவன்!*

*தலைப்புக்கு நன்றி : ‘வாத்தியார்’ சுஜாதா

தன் முன்னால் அமர்ந்திருந்தவனை, வங்கி அதிகாரி ஆண்ட்ரூ (எ) ஆண்ட்ரூ மில்லர் பார்த்தான்.

பழுப்பு நிறமாயிருந்தான். கண்ணாடி அணிந்திருந்தான். உப்பு/மிளகு தலை முடி ஒழுங்கில்லாமல் கலைந்து, நெற்றியில் புரண்டிருந்தது. இரண்டு நாள் தாடி.

ஆசியக் கண்டத்திலிருந்து வந்திருப்பான் போலும். பார்த்தாலே ஆண்ட்ரூவிற்கு வெறுப்பாயிருந்தது. இந்தியா / சீனா / பாகிஸ்தான் / வங்க தேசம் / இலங்கை-யிலிருந்து சலிக்காமல் பயணம் செய்து, ஸ்காட்லாந்திற்கு வந்து, வேலையும் நன்றாகச் செய்து, ஆங்கிலேயப் பிரஜையாகி நம் பிழைப்பில் மண்ணைப் போடுகிறார்கள். பிரசுரிக்கத்தகாத வார்த்தையை உதடுகள் மௌனமாய் உச்சரித்தது.

வங்கியில் கணக்கை இப்போதுதான் துவக்கியிருப்பான் போலும். பற்று அட்டையை (debit card) பணிவாய் நீட்டினான்.

'மாலை வணக்கங்கள். என் பெயர் நாகேஷ். இணைய வங்கி (internet banking) விண்ணப்பிக்க வந்திருக்கிறேன்’ என்றவனின் ஆங்கிலம் ஆங்கிலேயனின் ஆங்கிலத்தை ஒட்டியிருந்தது ஆண்ட்ரூவிற்கு எரிச்சலை அதிகப்படுத்தியது.

வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு பற்று அட்டையை வாங்கி, கணிணியை மேய்ந்தான்.

‘உங்கள் பிறந்த தேதி?’

சொன்னான்.

’உங்கள் தபால் இலக்கத்தின் (postal code) கடைசி மூன்று எண்களைச் சொல்ல முடியுமா?’

உதட்டைப் பிதுக்கி ‘தெரியாது’ என்று அலட்சியமாய்ச் சொன்னதில் எரிச்சல் கூடிற்று. ’எப்படியாவது இவனைச் சிக்கலில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்க வேண்டும்’ என்கிற எண்ணம் வந்தது.

‘உங்கள் அடையாளத்தை (identification) நிரூபிக்க வேறு ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டான். வங்கி அதிகாரி என்கிற அதிகாரத்தில், சந்தேகம் எழுந்தால் மட்டுமே கேட்க வேண்டும் என்கிற முறையை மீறிய கேள்வி அது. பற்று அட்டை வைத்திருப்பவன் என்பதே போதுமானதாயிருந்தது.

வந்தவன் யோசித்தான். ஆண்ட்ரூவிற்கு உள்ளுக்குள் சந்தோஷமாயிருந்தது. ஆனால், நீடிக்கவில்லை.

மேல் அங்கியை (coat) விலக்கி, துழாவி, பயண இசைவுச் சீட்டை (passport) எடுத்து நீட்டினான்.

வாங்கிப் பார்த்த ஆண்ட்ரூவிற்கு வந்தவன் இந்தியன் என்பது மட்டும் புரிந்தது. பெயர் வாயில் நுழையவேயில்லை. புகைப்படம் பொருந்திப் போனது.

வேறு வழியில்லாமல் அவன் சொன்னதைச் செய்து விட்டு, ‘இன்னும் ஐந்து தினங்களில் உங்களுக்குத் தபால் வந்து சேரும். பிறகு இணைய வங்கியை இனிதாய்த் துவங்கலாம்’ என்று செயற்கையாய்ப் புன்னகைத்து, குலுக்குவதற்காகக் கைகளை நீட்டினான்.

நாகேஷ் மெலிதாய்க் கை குலுக்கி, மார்பில் பெயரைப் படித்துவிட்டு ‘திரு ஆன்ட்ரூ! ஒன்று சொல்லட்டுமா?’

‘என்ன?’ என்பது போல் புருவம் நெரிந்தது.

‘உங்கள் நாட்டிற்குப் பணி நிமித்தமாய்த்தான் வந்திருக்கிறேன். அதுவும் ஆறு மாதம்தான். அதுவும் மனமில்லாமல்தான். நிரந்தரமாய்த் தங்கும் எண்ணமுமில்லை. இதற்கே உங்களுக்கு எரிச்சலாயிருக்கிறது என்றால் 300 ஆண்டுகள் எங்கள் நாட்டை விட்டுப் போகாமல் நங்கூரம் அடித்த உங்களைப் பார்க்கும்போது எங்களுக்கு எப்படியிருக்கும்?’ என்று நிதானமாய்க் கேட்டான்.

ஆண்ட்ரூ பதறி ‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை’ என்றாலும் குரலில் சுரத்தில்லை.

‘பரவாயில்லை. எங்களுக்கு தோல் கெட்டி! அப்புறம் இன்னொன்று...’

‘இன்னுமா?’ என்பது போல ஆண்ட்ரூவின் பார்வை.

‘என்னைப் பார்த்தவுடன் நீங்கள் உதிர்த்த வார்த்தைக்கான அர்த்தத்தை உங்கள் தாயாரிடம் கேளுங்கள். இனிய மாலை உமதாகட்டும்’ என்று சொல்லிவிட்டு நாகேஷ் போயே விட்டான்!

Saturday, January 19, 2013

Mrs. காதலி



நான் மாலினியைச் சந்தித்த முதல் நொடியிலேயே காதலிக்கத் துவங்கிவிட்டேன்.  திருமணமானவள் எனத் தெரிந்துங்கூட.

நான் என்கிற ராஜாராமன் ஒரு பட்டதாரி.  படித்து முடித்தவுடன் சுடச்சுட software கம்பெனி ஒன்றால் traineeயாய்த் தத்தெடுக்கப்பட்டவன்.  தேசீயமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் திருச்சி கிளையில் மேலாளராய்த் தந்தை.  அதனால் பிரம்மச்சாரியாய், தனியனாய் மும்பை வாசம்.  நிறைய அரட்டை, நிறைய சிகரெட் (அப்பாவிற்குத் தெரியாது), நடுவில் கொஞ்சமாய் SQL / PLSQL code எழுதும் சிக்கலான வேலை.

Project-ன் முக்கிய தருணத்தில் இன்னொரு ‘கை’ தேவைப்பட்டதில், என்னுடன் கோர்க்கப்பட்ட பெண் மாலினி.  மாலினி ஐஸ் இல்லை; ஏன் நம்மூர் த்ரிஷா போலக்கூட இல்லை.  இருந்தும் பிடித்துப்போய், ஒன்றுமே தோன்றாது அதிர்ந்து விட்டேன்.  மாலினி என்னமோ சகஜமாய்த்தான் பழகினாள்; நான்தான் மாறிப்போய் விட்டேன்.

இரண்டே நாட்களில் மாலினி கண்டுபிடித்துவிட்டாள்.  கேட்டபோது மறைக்காமல் ஒப்புக்கொண்டேன்.  அவள் சிரித்தாள்.  ‘நீ வெளிப்படையாய்ப் பேசினது எனக்கு புடிச்சிருக்கு.  ஆனா, இதெல்லாம் சரிப்படாது’.  நான் ஒப்புக்கொள்ளவில்லை.

இவ்வளவு ஆனபின்னும் மாலினி இயல்பாய்த்தான் நடந்து கொண்டாள்.  என்னோடுதான் லஞ்ச்.  எப்போதும் போல ‘சள சள’வென வீழும் அருவி போலப் பேச்சு.  நான் ‘கவிதை’ கூட எழுத ஆரம்பித்து விட்டேன்.

திருமணமானவள் எனத் தெரிந்தும்
திரும்பிப் பார்க்கிறேன்;
விவாகமானவள் எனத் தெரிந்தும்
விரும்பிப் பார்க்கிறேன்;
கல்யாணமானவள் எனத் தெரிந்தும்
காதலித்துப் பார்க்கிறேன்!

மாலினிக்குக் கூடக் காட்டினேன்.  படித்தவுடன், ‘கொஞ்சம் லூஸோ’ என எண்ணுமளவிற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்.

அன்று வழக்கம்போல் லஞ்சுக்கு ‘ஷிவ் ஸாகர்’ வந்தோம்.  கூட்டம் நெரிந்தது.  இடம் பிடித்து உண்ணத் துவங்கினோம்.  பேரரிடம் ‘இன்னுமொரு ரொட்டி’ என்றேன்.  எடுத்து வந்தவன் தவறுதலாய் மாலினி தட்டில் வைத்துவிட்டான்.  பாதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த, விரலைச் சப்பி ருசித்துக் கொண்டிருந்த கையால் எடுத்து ‘ஏ இந்தா’ என மாலினி கொடுக்க, நான் வாங்க மறுத்தேன்.  வியப்புடன் மாலினி பார்க்க ‘ஸாரி! நான் வேறே ரொட்டி ஆர்டர் பண்ணிக்கறேன்.  எனக்கு எச்சில் பிடிக்காது’ என்றேன்.

‘நான் மட்டும் என்னவாம்?’ என்று casual-ஆகத்தான் மாலினி கேட்டாள்.  எனக்குத்தான் பிய்ந்து போன செருப்பால் அடி வாங்கியது போல இருந்தது!

இன்றும் மாலினியோடுதான் பணி புரிகிறேன்.  நல்ல நண்பனாக.

Saturday, October 06, 2012

நெரிசல்


சோமனஹள்ளி செல்லும் 211 பேருந்து பனஷங்கரி வந்தபோது, நிறுத்தத்தில் நெரிசல்.  நின்றிருந்த அவனுக்கு ஆயாசமாயிருந்தது.

எல்லோரையும் உள்ளே தள்ளி, படிக்கட்டில் அவன் தொற்றிக்கொண்டான்.  இரண்டாவது நிறுத்தம் ஜரகனஹள்ளி என்றாலும், ஊர்ந்து கொண்டிருந்த போக்குவரத்தில் எப்படியும் போய்ச்சேர இருபது நிமிடங்களாகிவிடும் என்கிற எண்ணத்தில் எரிச்சலும் சேர்ந்தது.  

நோட்டம் விட்டதில் பேருந்தின் முன் பகுதி (மகளிருக்கான பகுதி) மட்டுமே தெரிந்தது.  முன்னிருபது அவளும், தேய்த்துக்கொண்டு அருகில் நிற்கும் நடுத்திரத்தைத் தாண்டிய வயதான அவரும் தெரிந்தார்கள்.  ‘வயதை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள், பாரேன்!’ என்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்ததற்குக் காரணம் அவளின் அழகும், அவனின் இளமையும், ஏலாமையும் இருக்கக்கூடும்.

ஸாரக்கி வந்ததில், நெரிசல் குறைந்து, அவனுக்கு பேருந்தினுள் நுழைய இடம் கிட்டியது.  அந்த வயதானவர் அருகில் வந்து ‘ஐயா! கொஞ்சம் தள்ளி நிற்கலாமே?!’ உரக்கக்கூறியது பெண்ணின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.  உத்தேசம் அதுவாயும் இருந்திருக்கலாம்.

அவர் பதிலேதும் சொல்லாமல் மௌனம் காக்க, அவள் சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்து, ‘அவர் எங்கப்பா!’ என்றதும், அவன் அதிர்ந்து, வாயடைத்தான்.

வயதானவர் கொஞ்சம் இல்லை, அதிகமாகவே விலகியதில் அவன் மனம் இன்னும் காயமானது.  மன்னிப்புக் கோரி ஸாரக்கி சிக்னலிலேயே இறங்கி மறைந்து போனான்.

தள்ளி நின்ற அவரை அவள் நிமிர்ந்து, கனிவாய்ப் பார்த்தாள்.  அவரது விழிகளில் இதுவரை இருந்த கயமை தொலைந்து, கண்ணீரும், மன்னிப்பும் கூடவே நன்றியும் தெரிந்தன.

Sunday, May 13, 2012

விதி!

முக்கியமான முன்குறிப்பு:
கையெழுத்துப் பிரதியான ‘பைரவி’ நவம்பர், 1986 இதழில் நான் எழுதிய இந்தக்கதை மாற்றம் ஏதுமில்லாமல் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே ‘விதி வலியது’ன்னு பெரியவாள்ளாம் சொல்றா.  நீங்க ‘விதியை மதியால வெல்லலாம்’னு சொல்லலாம்.  ஆனா, ‘அந்த மதியும் விதியோட இழைஞ்சு போணும்’னு நான் சொல்றேன்.  இதையேதான் நம்ம ’ராஜேந்திரன்’ கதையும் ஸ்ட்ரெஸ் பண்றது!

ராஜேந்திரன் ஒரு வேலையில்லா பட்டதாரி.  அவாளோட நெலைமைதான் உங்களுக்குப் புரியுமே?  ‘ஆத்துல ஸதா கரிச்சுக் கொட்டிண்டே இருப்பா!’  அவனைச் சொல்லியும் குத்தமில்லை.  அவன் கிராஸ்-பெல்ட் ஆனதால, என்னதான் ஸின்ஸியரா வேலையைத் தேடினாலும், அது கவர்ணமெண்ட் ப்ராமினுக்கில்ல போயிண்டிருக்கு!

அவனுக்கு எப்படியும் வேலை கிடைச்சாணுங்கறது விதி.  அது ராமநாதன் ரூபத்துல வந்துது.  ராமநாதன் ஒரு கம்பெனில பெரீய போஸ்ட்ல வேலை பாத்துண்டிருந்தார்.  அவா ரெண்டு பேரும் சந்திச்சதே ஒரு ரஸமான அனுபவம்னா!

ராஜேந்திரன் அம்பி 12பி-ல ஏதோ வேலையா போயிண்டிருக்கன்.  ராமநாதனும் அதே பஸ்ஸுல, கார் ப்ரேக்டவுன் ஆனதால (என்ன ஆச்சரியமாயிருக்கா, கார் ப்ரேக் ஃபெயிலியர் – அதனால ப்ரேக் டவுன்னு சொன்னேன்..இது தப்பா?!) வர்றார்.  ராஜேந்திரனோட பர்ஸ் பிக்பாக்கெட் ஆயிடறது.

ராமநாதன் பாத்துட்டு, பிக்பாக்கெட்காரனை பிடிச்சு, அடிச்சு, உதைச்சு பர்ஸை ராஜேந்திரன் கிட்ட கொடுக்கறார்.  ஆனா பாருங்கோ, ராஜேந்திரன் பர்ஸைத் தொறந்து அவர்கிட்ட காமிக்கிறான்.  அதுல ஒரு பைசா கூட இல்லைன்னா!


ராமநாதன் ராஜேந்திரனைப் பாக்கறார்.  அவன் கண்ணுல இருந்த சோகம் அவரை உருக்கறது.  அவனோட நெலமையைத் தெரிஞ்சுண்டார்.  தான் ஒரு வேலை வாங்கித் தரதாகவும் வாக்குக் கொடுத்துட்டார்!

ராமநாதன் கம்பெனி ஒரு வித்தியாசமான கம்பெனி.  பெரீய போஸ்ட்ல  இருக்கறவா, அவாளோட சொந்தக்காராங்களுக்கு மட்டும் சிபாரிசு பண்ணலாம்.  சொந்தத்துல இல்லன்னா வேற எந்த ரெகமண்டேஷன் –ல்லாம் செல்லாது.  கம்பெனியே சில இன்வெஸ்டிகேட்டர்ஸ்-ஐ வெச்சு, உண்மைதானான்னு கண்டு பிடிப்பா.  பொய்யா இருந்தா தர்ம சங்கடமா போயிடும்.

அதுக்கும் ராமநாதன் ஒரு வழி பண்றார்.  தன் வீட்டுப் பக்கத்துல எல்லார்கிட்டயும் சொல்லிட்டார்.  ராஜேந்திரனும், அவர் சொல்லிக் கொடுத்தா மாதிரி தன் வீட்டுப் பக்கத்துல எல்லார் கிட்டயும் சொல்லிண்டான்.

இவா சொல்லிண்ட உறவுமுறை என்னன்னா, ராமநாதனோட பாட்டியோட அம்மாவும், ராஜேந்திரனோட பாட்டியோட அம்மாவும் ஒண்ணுவிட்ட அக்கா தங்கையாம்!

இன்வெஸ்டிகேட்டர்ஸும் விசாரிச்சா, “உண்மை”யைத் தெரிஞ்சுண்டா.  ஆனா பாருங்கோ!  இதோட விட்டதா கதை? (யோவ்! சொல்லித் தொலைய்யான்னு நீங்க சொல்றது காதுல விழறது!)

இண்டர்வ்யூவும் வந்தது.  ராஜேந்திரன் தெம்பா போனான்.  ஏன்னா ராமநாதன் ஏற்கெனவே ‘இண்டர்வ்யூ வெறும் ஐ வாஷ்’தான்ன்னு சொல்லிட்டார்.  அவா கேட்ட கேள்விக்கெல்லாம் ‘டாண், டாண்’னு பதில் சொன்னான்.

கடைசியா அவா, ‘ராமநாதனோட பாட்டியோட அம்மாவும், உன்னோட பாட்டியோட அம்மாவும் ‘ஒண்ணு விட்ட அக்கா தங்கை’ன்னு சொன்னே, சரி…இதுல யார் அக்காவோட கொள்ளுப்பேரன்?’ன்னு கேட்டா!

ராஜேந்திரனுக்கு வெலவெலத்துப் போச்சு!  ராமநாதன் இதைப் பத்தி எதுவும் சொல்லலியே?! ‘ஒத்தையா ரெட்டையா’ மாதிரி எதாவது சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.  என்னவானாலும் சரி, அந்த ‘ராமநாதன்’ மேல பாரத்தைப் போட்டு, ‘அக்காவோட கொள்ளுப்பேரன் நான்’னு சொல்லிட்டான்.

உடனே அவா, ‘யு ஆர் ஸெலக்டட்’னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில கொடுத்துட்டா!  ராஜேந்திரனுக்குக் கொள்ளையா கொள்ளையா சந்தோஷம்.

இதுலேந்து என்ன தெரியறது?  ‘விதிக்கு ரொம்ப பவர், மதி இருந்தா அதுவும் விதி ஒத்துழைச்சா வெல்லலாம்’னு தெரிய வர்றது!

மங்களம்…சுப மங்களம்!

Saturday, March 17, 2012

வெண் பொங்கல்

என் நண்பர் திரு கணேசன் அவர்கள் எழுதிய கதை.

ராமு, ஜானகி கொண்டு வந்து கொடுத்த filter coffee குடித்துக் கொண்டு, அன்றைய செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டு வாசலில் சின்ன யானை (TATA Ace) வந்து நின்றது.  இறங்கிய 24 வயது இளைஞன், அவன் அம்மா/அப்பா - வீட்டு சாமான்களுடன் குடி புகுந்தனர்.
ஜானகி ராமுவிடம் ‘மாமா பேரு நாராயணன், மாமி பேரு பங்கஜம், பையன் பாலாஜி…முந்தா நேத்திதான் வந்து பால் காச்சிட்டு போனா” என்று புட்டு புட்டு வைத்தாள்.
கொஞ்ச நாட்கள் கழித்து, பங்கஜம் மாமி “இந்தா ஜானகி…உங்க ஆத்துக்காரருக்கு வெண்பொங்கல் புடிக்கும்னு சொன்னியே…ஆத்துல பண்ணினேன்…” என்று கொடுத்து விட்டுப் போனாள்.
ராமு பாண்ட் சட்டை மாட்டிக் கொண்டு ‘ஜானு, ஆஃபீசுக்கு டைமாச்சு.  சீக்கிரம் டிஃபன் கொடு” என்று பறந்தான்.
“ஏன்னா..இந்தாங்கோ கொஞ்சம் வெண்பொங்கல்!” என்று ஒரு வாய் ஊட்டி விட்டாள்(?!).  அவ்வளவுதான்… அப்படியே உட்கார்ந்து, முழு பொங்கலையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டான்!
ராமு சரவண பவன், வஸந்த பவன், ரத்னா கஃபே, அடையார் ஆனந்த பவன், D C Manor, மாம்பலம் Brilliant Tutorials கையேந்தி பவன், வீட்டுக்கு அருகே மல்லிகா மெஸ், கல்யாண டிஃபன், Get together என எல்லாவற்றிலும் புகுந்து, பொளந்து கட்டியவன்.  இதுவரை இப்படியொரு பொங்கலை ருசித்ததில்லை.
அன்றிரவு ஜானகியிடன் வெண் பொங்கலைப் பற்றிச் சிலாகித்து, துளைக்க ஆரம்பித்தான்.  ஜானகிக்கு சற்று பொறாமையாய் இருந்தது.  ”என்ன மனுஷன் இவன்?  கார்த்தாலே காலில் சக்கரம் கட்டி பறந்து கொண்டு…ராத்திரியும் தொந்திரவைப் பொறுத்துக்கொண்டு – இவனுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒப்புக்காகவாவது பாராட்டியதில்லையே…!”
ஜானகிக்கு சமையல் குறிப்பு புத்தகங்களை வாங்கி பொங்கல் செய்து, ராமு முன்னால் வைத்து,  ஏக்கத்துடன் பார்த்தாள்.  ம்ஹூம்..ராமுவிடம் no reaction.
ஈகோவை விட்டு, பங்கஜம் மாமியிடம் செய்முறை விளக்கம் கேட்டு, மிளகு, சீரகம், பெருங்காயம், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, முந்திரி சரிவிகிதம் கொடுத்து ராமுவைப் பார்த்தாள்.
‘பரவாயில்லை, ஆனாலும் மாமி டேஸ்ட் வரலை…” என்று உண்மையான feedback கொடுத்தான்.
ஜானகியின் கோபம் உச்சகட்டத்திற்குப் போன காரணம், ராமு சொன்ன இந்த வார்த்தைகள்தான். “மாமியின் கை பக்குவமே தனி!”
மறுநாள் ஜானகி, பங்கஜம் மாமி சமையலறைக்குச் சென்று எப்படியெல்லாம் சமையல் செய்கிறாள் என்று ஒன்று விடாமல் ’ஜெராக்ஸ்’ எடுத்துக் கொண்டாள்.
மாமி வெண்பொங்கலை அடுப்பிலிருந்து இறக்கி, பத்து நிமிடங்கள் கழிந்தவுடன், எடுத்து ‘ஒரு வாய்’ போட்டுக் கொள்ளலாம் என்று ஜானகி எத்தனித்த நேரத்தில்…
‘இரும்மா ஜானகி! பெருமாளுக்கு நைவேத்தியம் செஞ்சுட்டு அப்புறமா சாப்பிடலாம்” என்று இயல்பாகக் கூறினாள்.
தூக்கி வாரிப்போட்டது ஜானகிக்கு.  ‘அடடா! நாம் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டோம்!’
அன்று முதல், ஜானகியின் சமையலைப் பெருமாள் சுவைத்த பின் தான் அனைவருக்கும்!