Sunday, May 13, 2012

விதி!

முக்கியமான முன்குறிப்பு:
கையெழுத்துப் பிரதியான ‘பைரவி’ நவம்பர், 1986 இதழில் நான் எழுதிய இந்தக்கதை மாற்றம் ஏதுமில்லாமல் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே ‘விதி வலியது’ன்னு பெரியவாள்ளாம் சொல்றா.  நீங்க ‘விதியை மதியால வெல்லலாம்’னு சொல்லலாம்.  ஆனா, ‘அந்த மதியும் விதியோட இழைஞ்சு போணும்’னு நான் சொல்றேன்.  இதையேதான் நம்ம ’ராஜேந்திரன்’ கதையும் ஸ்ட்ரெஸ் பண்றது!

ராஜேந்திரன் ஒரு வேலையில்லா பட்டதாரி.  அவாளோட நெலைமைதான் உங்களுக்குப் புரியுமே?  ‘ஆத்துல ஸதா கரிச்சுக் கொட்டிண்டே இருப்பா!’  அவனைச் சொல்லியும் குத்தமில்லை.  அவன் கிராஸ்-பெல்ட் ஆனதால, என்னதான் ஸின்ஸியரா வேலையைத் தேடினாலும், அது கவர்ணமெண்ட் ப்ராமினுக்கில்ல போயிண்டிருக்கு!

அவனுக்கு எப்படியும் வேலை கிடைச்சாணுங்கறது விதி.  அது ராமநாதன் ரூபத்துல வந்துது.  ராமநாதன் ஒரு கம்பெனில பெரீய போஸ்ட்ல வேலை பாத்துண்டிருந்தார்.  அவா ரெண்டு பேரும் சந்திச்சதே ஒரு ரஸமான அனுபவம்னா!

ராஜேந்திரன் அம்பி 12பி-ல ஏதோ வேலையா போயிண்டிருக்கன்.  ராமநாதனும் அதே பஸ்ஸுல, கார் ப்ரேக்டவுன் ஆனதால (என்ன ஆச்சரியமாயிருக்கா, கார் ப்ரேக் ஃபெயிலியர் – அதனால ப்ரேக் டவுன்னு சொன்னேன்..இது தப்பா?!) வர்றார்.  ராஜேந்திரனோட பர்ஸ் பிக்பாக்கெட் ஆயிடறது.

ராமநாதன் பாத்துட்டு, பிக்பாக்கெட்காரனை பிடிச்சு, அடிச்சு, உதைச்சு பர்ஸை ராஜேந்திரன் கிட்ட கொடுக்கறார்.  ஆனா பாருங்கோ, ராஜேந்திரன் பர்ஸைத் தொறந்து அவர்கிட்ட காமிக்கிறான்.  அதுல ஒரு பைசா கூட இல்லைன்னா!


ராமநாதன் ராஜேந்திரனைப் பாக்கறார்.  அவன் கண்ணுல இருந்த சோகம் அவரை உருக்கறது.  அவனோட நெலமையைத் தெரிஞ்சுண்டார்.  தான் ஒரு வேலை வாங்கித் தரதாகவும் வாக்குக் கொடுத்துட்டார்!

ராமநாதன் கம்பெனி ஒரு வித்தியாசமான கம்பெனி.  பெரீய போஸ்ட்ல  இருக்கறவா, அவாளோட சொந்தக்காராங்களுக்கு மட்டும் சிபாரிசு பண்ணலாம்.  சொந்தத்துல இல்லன்னா வேற எந்த ரெகமண்டேஷன் –ல்லாம் செல்லாது.  கம்பெனியே சில இன்வெஸ்டிகேட்டர்ஸ்-ஐ வெச்சு, உண்மைதானான்னு கண்டு பிடிப்பா.  பொய்யா இருந்தா தர்ம சங்கடமா போயிடும்.

அதுக்கும் ராமநாதன் ஒரு வழி பண்றார்.  தன் வீட்டுப் பக்கத்துல எல்லார்கிட்டயும் சொல்லிட்டார்.  ராஜேந்திரனும், அவர் சொல்லிக் கொடுத்தா மாதிரி தன் வீட்டுப் பக்கத்துல எல்லார் கிட்டயும் சொல்லிண்டான்.

இவா சொல்லிண்ட உறவுமுறை என்னன்னா, ராமநாதனோட பாட்டியோட அம்மாவும், ராஜேந்திரனோட பாட்டியோட அம்மாவும் ஒண்ணுவிட்ட அக்கா தங்கையாம்!

இன்வெஸ்டிகேட்டர்ஸும் விசாரிச்சா, “உண்மை”யைத் தெரிஞ்சுண்டா.  ஆனா பாருங்கோ!  இதோட விட்டதா கதை? (யோவ்! சொல்லித் தொலைய்யான்னு நீங்க சொல்றது காதுல விழறது!)

இண்டர்வ்யூவும் வந்தது.  ராஜேந்திரன் தெம்பா போனான்.  ஏன்னா ராமநாதன் ஏற்கெனவே ‘இண்டர்வ்யூ வெறும் ஐ வாஷ்’தான்ன்னு சொல்லிட்டார்.  அவா கேட்ட கேள்விக்கெல்லாம் ‘டாண், டாண்’னு பதில் சொன்னான்.

கடைசியா அவா, ‘ராமநாதனோட பாட்டியோட அம்மாவும், உன்னோட பாட்டியோட அம்மாவும் ‘ஒண்ணு விட்ட அக்கா தங்கை’ன்னு சொன்னே, சரி…இதுல யார் அக்காவோட கொள்ளுப்பேரன்?’ன்னு கேட்டா!

ராஜேந்திரனுக்கு வெலவெலத்துப் போச்சு!  ராமநாதன் இதைப் பத்தி எதுவும் சொல்லலியே?! ‘ஒத்தையா ரெட்டையா’ மாதிரி எதாவது சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.  என்னவானாலும் சரி, அந்த ‘ராமநாதன்’ மேல பாரத்தைப் போட்டு, ‘அக்காவோட கொள்ளுப்பேரன் நான்’னு சொல்லிட்டான்.

உடனே அவா, ‘யு ஆர் ஸெலக்டட்’னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில கொடுத்துட்டா!  ராஜேந்திரனுக்குக் கொள்ளையா கொள்ளையா சந்தோஷம்.

இதுலேந்து என்ன தெரியறது?  ‘விதிக்கு ரொம்ப பவர், மதி இருந்தா அதுவும் விதி ஒத்துழைச்சா வெல்லலாம்’னு தெரிய வர்றது!

மங்களம்…சுப மங்களம்!

No comments: