Tuesday, December 08, 2009

சகலகலாவல்லவன்!

"நான் மகான் அல்ல; சின்ன சின்ன சுவாரஸ்யமான தவறிழைக்கும் மனிதனே!"

வளசரவாக்கத்தில் வசித்து வந்த காலம் அது.

திருவல்லிக்கேணியிலுள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ் திரைப்படங்களை second run-ல் மதியம் 2.30 மணிக்கு மலிவு கட்டணத்தில் திரையிடுவார்கள். டிக்கெட்டின் விலை ரூ 1 மற்றும் ரூ 2 மட்டுமே! அப்போது கமல் நடித்த சகலகலா வல்லவன் ஓடிக்கொண்டிருந்தது. 25 வாரங்கள் ஓடிய படம் அது. எனக்குப் பார்க்கவேண்டும் என்ற ஆவல்.

என் தந்தையிடம் சென்று அனுமதி கேட்டேன். மறுக்கப்பட்டது. தாயிடம் கெஞ்சினேன். தாய் எனக்காக பரிந்துரை செய்தும் அனுமதி கிட்டவில்லை. என் தந்தையிடம் ஒரு குணம் உண்டு. முதலில் அவர் மறுத்தால் இறுதிவரை முடிவில் மாற்றமிராது.

எனக்கு அந்த வயதிற்குரிய கோபம் வந்தது. இரண்டு நாள் பேசாமல் முகத்தில் 'உம்'! பாச்சா பலிக்கவில்லை! மூன்றாம் நாள் விபரீதமான எண்ணம் உதித்தது. 'அப்பாவிற்குத் தெரியாமல் படம் போனால் என்ன?!'

மளிகை சாமான் வாங்கும் சாக்கில் இரு ஐம்பது பைசாக்களை ஒரு பொக்கிஷத்தைப் போல பதுக்கி பாதுகாப்பாக வைத்தேன். அவ்வப்போது இடம் மாற்றினேன்!

அந்த நாளும் வந்தது. அப்பாவிடம் 'திருவல்லிக்கேணி போயிட்டு வரட்டுமா?' என்றேன். 'படம் பார்க்கத்தான் போகக்கூடாதுன்னு சொல்லிட்டேனே?' என்றார் விடாது! "இல்லப்பா...friends-ஐப் பாக்கப்போறன். ஆனா 5 மணிக்கு வந்துருவேன்" என்றேன்! என்ன தோன்றியதோ 'சரி போயிட்டு வா' என்று முற்றுப்புள்ளி வைத்து அனுப்பி வைத்தார்.

திருவல்லிக்கேணி வந்தேன். என் நண்பர்களைக் கண்டேன். ஒரு நண்பனிடம் மட்டும் நான் செய்யப்போவதைக் கூறினேன். "இதெல்லாம் தப்பே இல்லடா" என்று ஏற்றி விட்டான்!

2.00 மணியளவில் டிக்கெட் கவுண்டரில் நின்றேன். இரு ஐம்பது காசுகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். மனது திக் திக் என்றது. பிரஷர் ஏறிற்று. டிக்கெட் வாங்கும்போது கை நடுங்கியது! அப்பா முகம் எதிரில் வந்து போயிற்று! அங்கும் இங்கும் நோட்டம் விட்டுக்கொண்டே அரங்கினுள் சென்றேன்.

2.30 மணிக்குத் திரைப்படம் துவங்கியதில் மனம் ஆழ்ந்து போனது. படம் முடிந்ததும் பயம் துவங்கியது! ஏற்றி விட்ட நண்பன் "முதல் தடவை இதெல்லாம் சகஜமப்பா. அப்புறமா சரியாயிடும்" என்றான்!

5.30 மணிக்குத் திருவல்லிக்கேணியிலிருந்து கிளம்பி 25C பிடித்து வீட்டினுள் பயந்துகொண்டே நுழைந்த போது மணி 7.00! அப்பா அலுவலகத்திலிருந்து வந்திருந்தார். காபி அருந்திக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்தார். பின் அந்த மில்லியன் டாலர் கேள்வி வந்தது

"நீ சகலகலாவல்லவன் பாத்துட்டு தானே லேட்டா வர்றே?" என்றார்!

சர்வ நாடியும் ஒடுங்கிப் போய் "உங்க அனுமதியில்லாம நான் எப்படிப்பா போவேன்?" என்றேன் ஈனஸ்வரத்தில்.

"எனக்குத்தெரியுண்டா உன்னப்பத்தி. நான் சொன்னத நீ என்னிக்கும் மீறமாட்ட. சும்மா விளையாடிப் பார்த்தேன்" என்றார்.

மனது குற்ற உணர்ச்சியில் குன்றிப்போனது. ஆனாலும், உண்மை சொல்லி என்"மதிப்பை" கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை!

அன்று தொடங்கிய வினை, என் திருமணம் வரை தொடர்ந்தது. நிறையப் படங்கள் வீட்டிற்குத் தெரியாமல் பார்த்தேன். தெரியாமல் போவதில் "திரில்" என்பது போய் அந்தப் பழக்கத்துக்கு நான் அடிமையானதுதான் மிச்சம்! ஆனாலும், அவ்வப்போது அம்மாவுக்கும் புத்திசாலியான என் தங்கை/தம்பிக்கும் இது தெரிந்தே இருந்தது!!

என் தந்தையிடம் உண்மையை மறைத்த நான், 20 வருடங்கள் கழித்து அவர் இல்லாத நாளில் அனைவரின் முன் ஒப்புக்கொள்வதில் என்ன "தில்" இருக்கிறது?

இன்று யோசித்துப்பார்க்கிறேன். இழப்பு யாருக்கு?!