Thursday, December 15, 2011

ஒழுக்கம்

அந்தப் பெரியவர்தான் அவனுக்கு எல்லாம். இன்று அவன் இருக்கும் மிகப் பெரிய நிலைக்கு அவர்தான் காரணம்.

கிராமத்தில் இருக்கும் எளிய விவசாயி அவர். மெத்தப் படிக்காதவர் அவர். வாழ்க்கையின் அனுபவங்கள் அவர் நெற்றியின் ரேகைகளாய் படிந்திருந்தன. உழுததின் அடையாளங்கள் அவர் கரங்களில் காப்பாய் நிறைத்திருந்தன.

ஓரிரவில் பெற்றோரைத் தொலைத்த அனாதையாய் நின்ற அவனை 'யாரையும் அண்ட விடாத' அவருக்குப் பிடித்துப் போனது. அவனை நன்றாய்ப் படிக்குமாறு தூண்டி விட்டு, பக்கபலமாய் நின்று கொண்டு, நல்ல பதவியில் அமர்த்தி விட்டு, மனதிற்குப் பிடித்த பெண்ணையே மணமுடித்து விட்டு, ஓய்ந்து போனார் அவர்.

பலமுறை கூப்பிட்டும் வராதவர் வந்திருக்கிறார் - 'ஒழுக்கம்' என்கிற தலைப்பில் - அவனுடைய முதல் புத்தக வெளியீட்டிற்கு.

'தம்பி! பெரிய பதவி. வேலை பிடுங்கித் தின்னும். உனக்கு வீட்டிலேயும் பொறுப்பு அதிகம். எப்படிப்பா உன்னால எழுத முடியுது?'

'அதில்லை அப்பா! வீட்டுக்கு வந்தா எதாச்சும் வேலை வந்திடுது. அதனால, என்னோட எழுத்துக்கள் எல்லாம் ஆபீஸ்-ல எழுதிருவேன். இந்தப் புத்தகமும் அப்படித்தான்' என்றான் அவன்.

'தம்பி! நான் விவசாயி. உழுதாத்தான் எனக்கு பொழைப்பு. அதை வெச்சித்தான் இன்னிக்கும் ஓட்டிக்கிட்டு இருக்கேன். உன்னிய படிக்க வெச்சி ஒரு நிலைக்கு ஆளாக்கி விட்ருக்கேன். வயலுக்குப் போனா வேலை, வேலை - வேற எத்தையும் நினைக்கக்கூட முடியாது. நினைக்கவும் கூடாது. ஆனா நீ? என்னப்பா இப்பிடி சொல்லுதே? அப்டின்னா உன் சொந்த வேலையத்தான் இத்தினி நாளும் ஆபீசு-ல பாத்தியா? நீ வாங்குற சம்பளமும் இதுக்குத்தானா? சரிதானாப்பா இது?' என்றார் வெள்ளந்தியாய்.

அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

Sunday, July 24, 2011

ஜீன்ஸ்!

எக்ஸ்சேஞ்ச் டவர்ஸ், கிங் ஸ்ட்ரீட், டொரொன்டோ, கனடா.

முதன்முறையாய் வெளிநாடு வந்ததில் எல்லாம் பிரமிப்பாய் இருந்தது. 18 வது தளத்தில் உள்ள எனது அலுவலகத்தில் வேலையை முடித்தாகி விட்டது. இனி ஷெப்பர்ட் அவென்யூ செல்ல வேண்டும்.

லி•ப்ட் பொத்தானை அழுத்தியவுடன் வயிற்றின் நினைவு வந்தது. முதல் தளத்தில் இறங்கி, கீழ்த்தளத்திற்குச் சென்றேன். தாய்லாந்த் உணவகத்திலிருந்து, Tim Horton, Sub Way, Burger King மற்றும் ஏனைய உணவகங்கள் வரிசையாய் இருந்தன.

பர்கர் கிங்-ல் வாங்கிய வெஜ் பர்கர் மற்றும் லார்ஜ் கோக்-குடன் போராடிக் கொண்டிருக்கையில் தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினால்... சட்டென பார்த்தவுடன் நினைவில் வராத, ஆனால் தெரிந்த முகமாய் இருந்தது. 'என்னடா சுந்து? மறந்துட்டியா?' என்றதும் புரிந்து போனது. 'சுந்து' என்று கூப்பிடும், கனடாவில் சந்திக்கும் சாத்தியமேயில்லாத (சாத்தியமான!) சீனி என்கிற சீனிவாசன்.

'என்னடா? இங்க என்ன பண்றே?' என்றான். சொன்னேன்.

'நான் இங்க டூரிஸ்ட் விசால வந்திருக்கேன். கிங் ஸ்ட்ரீட்டை சுத்திட்டு போலாம்னு வந்தேன். இந்த பில்டிங் சூப்பரா இருக்கே? ஒரு மினி டிவி ஸ்டூடியோ கூட இருக்கு. அப்பப்ப நியூஸ் கொடுக்கறாங்க' என சொல்லிக்கொண்டே போனவனை நிறுத்தி ‘இது Canada Stock Exchangeபா’ என்றேன்.

காதிலேயே வாங்கிக்கொள்ளாது 'அப்பறமா, கமல்-சிம்ரன் பஞ்சதந்திரத்தில டூயட் பாடினாங்களே? அது எங்க இருக்கு தெரியுமாடா?' என்று கேட்டதும் 'பழைய சீனி'தான் என்று நிச்சயமாய்த் தெரிந்துபோனது.

'கொஞ்சம் இரு. போயிறாத. முக்கியமான விஷயம் பேச வேண்டியதிருக்கு. சாப்பிட ஏதாச்சும் வாங்கியாறேன்' என்று சொல்லிவிட்டு சீனி நகர்ந்து போனான்.

மனது பின்னோக்கியதில்....

இந்தியாவில் 'first day first show'-வுக்கென ஒரு கும்பல் உண்டு; இவர்கள் போய்ப் பார்ப்பதோடு இல்லாமல், படத்தைப் பற்றிக் காரசாரமாய் விவாதம் செய்து, பார்க்கும் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடுவார்கள். இது தவிர, சினிமாவைப் பற்றிய ஞானம் அதிகம் என்கிற கர்வம் உள்ளூற இருக்கும். இந்த இனத்தைச் சேர்ந்தவன் சீனி என்கிற சீனிவாசன்; திருவல்லிக்கேணியின் ஒண்டுக்குடித்தன தோஸ்த்.

சீனிக்கென நாகா, சாமி, ராதா, வரது என ஒரு தனிக் கூட்டம் உண்டு. இவர்களுக்குச் சினிமாவைத் தாண்டிய உலகம் இல்லை. சீனி தரும் சினிமாக்கதைகளுக்கும், சினிமா கிசு கிசுக்களுக்கும், மற்றும் ஏனைய ஞானங்களுக்கு ஜால்ரா போடும். அதுவும் 'fdfs' பார்த்து விட்டு வரும் நாட்களில் சீனி போடும் அலட்டல்களுக்கு அளவே இல்லை.

மொட்டை மாடியில் கூட்டம் ஒவ்வொரு சனிக்கிழமை இரவில் கூடும். அதே நேரத்தில் எதிர் வீட்டு மாடியில் என் கனவுக்கன்னி ஹேமா உலாவுவதால் நானும் ஆஜர்!

இப்படித்தான் ஜீன்ஸ் படம் பார்த்துவிட்டு வந்தவுடன் சீனி ஆட்டம் போட்டான்; 'ஐஸ்' அப்படி இப்படி என ஜொள்ளு விட்டான்; ஷங்கரை 'கிழி கிழி'யெனக் கிழித்தான். கடுப்பானதில், முதன் முறையாகச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.

'சரி இவ்ளோ பேசறியே? ஒரு சீன்ல ஐஸ் டிரஸ்ஸே இல்லாம வர்றா தெரியுமா?' என்றேன்.

'என்னது?!'

'உனக்குத் தெரியுமா?'

'போடா டுபாக்கூர்! பாக்காம கத வுடாத'

'நீ எங்க படம் பார்த்த?'

'உதயம்-ல first day; first show. தெரியும்ல'

'சரி நம்ம பசங்க 'சத்ய'த்துல பாத்திருக்காங்க. அவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்'

ஜால்ரா கூட்டம் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்தது; பிரமிப்புடன்.

சீனி தவித்தான். அக்கம்பக்கம் பார்த்து திருட்டு தம் பற்ற வைத்து இழுத்துக் கொண்டே'இது நிச்சயம் பொய்' என்றான்.

'தோ பாரு! 'சத்ய'த்துல நைட் ஷோல சுமார் 30 செகண்ட் ஓடிருக்கு; confirmடா சொல்றாங்க' என்றேன் சிரிக்காமல்.

ஜால்ரா சீனியைக் கேவலமாய்ப் பார்த்தது. 'டேய்! இவன நம்பாதீங்கடா, பொய் சொல்றான்' என்றான் சீனி 'குப் குப்' புகையுடன்.

'இப்பவும் சொல்றன். நான் படம் பாக்கல. ஆனா சொன்னவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு' என்றேன் சீரியஸாய்.

சீனிக்கே சந்தேகம் வந்து 'confirm-டா மச்சி?' என்று கேட்கத் துவங்கினான்!

'ஆமாம்! நிச்சயமான உண்மை. சரி சரி ரொம்ப பேசியாச்சு. தூக்கம் வரது' என்று பாயை விரித்துப் போட்டேன்.

அன்றிரவு, சீனிக்குத் தூக்கம் தொலைந்து போகும் என்று தெரியவந்ததில் உள்ளூர சந்தோஷம். விஷயம் இத்தோடு விட்டது என்றுதான் நினைத்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து, பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் சீனியைச் சந்தித்தேன். 'முடிச்சிட்டியா? வாடா வா' என தர தர வென B R டீ பாருக்கு அழைத்துச் சென்றான்.

'டீயா? மசாலா பாலா?' என்றதற்கு 'ஒன்றும் வேண்டாம்' என்றாலும் வற்புறுத்தி பிஸ்கட் பால் சாப்பிட வைத்தான். ஸ்டைலாய்ச் சிகரெட் வாயில் வைத்து 'மச்சி! நீ சொன்னது சும்மாதானே?' என்றான்.

எனக்கு முதலில் புரியவில்லை. 'என்னது?' என்றேன் மையமாய்.

'நான் கூட சத்யம் போய் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி நைட் ஷோ பாத்தேன். ஒண்ணுமேயில்லை' என்றதும் என்னுள் ட்யூப்லைட் எரிந்தது!

'நிச்சயமா இருக்கு' என்றேன். 'டேய்! வெறுப்பேத்தாத. வெள்ளாடாத. உண்மைய சொல்லிரு' என்று கோபமாய்ச் சிகரெட்டை புகைத்தான்.

'எதுக்கு வெளயாடணும்? பசங்க அபிராமில பாத்துருக்காங்க. நாந்தான் வாய்தவறி உங்கிட்ட சத்யம்னு சொல்லிட்டேன். என்னால் prove பண்ண முடியும்' என்றேன்.

'கரெக்டா சொல்ல மாட்டியா? அது சரி எந்த ஸீன்ல டிரஸ் இல்லாம வர்றாளாம்?' என்றான் கிசுகிசுப்புடன்.

நான் சொன்னேன்.

'எப்படிறா சென்ஸார்ல வுட்டாங்க? தியேட்டரையே seal பண்ணிடுவாங்களே!' என்றான் சீனி நம்பாது.

'அதெல்லாம் தெரியாது. ஆனா பசங்க பாத்தாங்க. எல்லாம் என் college group. பெரிய இடம். கண்டிப்பா நம்பலாம்' என்று certificate கொடுத்தேன்.

சீனி ரொம்பவும் டென்ஷனாகி இன்னொரு சிகரெட்டை பற்ற வைக்க முயன்றதில் நான்கு தீக்குச்சிகள் அணைந்து போயின!

அந்த சனிக்கிழமை இரவு சீனிக்காக நாங்கள் காத்திருந்ததுதான் மிச்சம். அவன் வரவேயில்லை! வீட்டில் கேட்டதற்கு அபிராமியில் 'நைட் ஷோ' போயிருப்பதாகச் சொன்னார்கள்!

அடுத்த நான்கு நாட்களுக்கு சீனியைப் பார்ப்பதை தவிர்த்தேன். இருந்தாலும், ஹேமாவைப் பார்க்க மாடிக்குப் போகும்போது வசமாய்ச் சிக்கிக்கொண்டேன்.

'நீ சொன்னது நிச்சயம் பொய்தான்' என்றான் கோபமாய்.

'இப்பவும் சொல்றன். நான் சொன்னது நிஜம். 'மொத நாள்ல எதுவுமே கட் பண்ணாத படமாத்தானே இருக்கும். அப்பறமா தெரிஞ்சப்பறம் கட் பண்ணுவாங்க; அதனாலதான் மொத நாளே பாக்கறேன்'னு நீதான சொல்லிருக்கே?' என்றதும் விழுந்து விட்டான்!

'நான் பாக்கும்போது மட்டும் அந்த ஸீன் வர்றவேல்லடா!' என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

'ஒண்ணு செய்! வேணா கோயம்பேடு ரோகிணிக்கு ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடு. சிடிய விட்டு தள்ளி இருக்கறதால ஒரு வேளை ஸீன் வர்ற சான்ஸ் இருக்கு' என்றேன் படு சீரியஸாய்.

அந்த சனிக்கிழமையும் சீனி வராததில் ஜால்ரா கூட்டம் மொத்தமாய் என் மேல் பாய்ந்தது.

'உண்மைதான்' என உரக்கக் கூறி எல்லோரையும் பிரமிக்க வைத்தேன்.

நடுராத்திரி கனவில் ஹேமாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கையில் உலுக்கப்பட்டேன். கண்கள் சிவக்க சீனி நின்று கொண்டிருந்தான். 'எந்திரிடா' என்றான்.

மெல்ல எழுந்தேன். 'என்னடா?' என்றேன் கேஷ¤வலாய்.

'தோ பாரு! ரோகிணிலேந்து directஆ இங்கதான் வர்றேன். அந்த மாதிரி ஸீனே கிடையாது. நீ சும்மா சொல்றே' என்றான் ஆத்திரத்துடன்.

'அது உண்மைதான். கொஞ்சம் பொறுமையா கேளு' என்றதும் காலர் பிடிக்கப்பட்டது. ஜால்ரா பெரும்பாடுபட்டு எங்கள் இருவரையும் பிரித்தது. என் பனியன் வரை கிழிந்திருந்தது; உதடு பிய்ந்திருந்தது. சீனி மூக்கில் ரத்தம்! 'உன் சங்காத்தமே வேண்டாண்டா' என்று சீறிவிட்டு சீனி சென்றுவிட்டான்.

அதற்கடுத்த இருநாளில் எனக்கு தேசீயமயமாக்கப்பட்ட வங்கியின் குடியாத்தம் கிளையில் சேர்வதற்கான உத்தரவு வந்ததில் சீனி விஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

எனக்கு மும்பை மாற்றலானது, பெற்றோர் மெட்ராஸிலிருந்து மும்பைக்கு வந்தது, கனவுக்கன்னி ஹேமாவே எனக்கு மனைவியாய் வந்தது எல்லாம் பிறகு நடந்த விஷயங்கள். என் கல்யாண பத்திரிகை கொடுக்க திருவல்லிக்கேணி சென்றபோது சீனி குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

ஒரு நாள் ஹேமாவிடம் இதைச் சொன்னபோது 'ரொம்பவே ஓவர்' என்று விமர்சனம் செய்தாள். 'இது உண்மைதான்' என்றேன் நானும். 'சும்மா' என்றாள்.

'ஜீன்ஸ் படத்துல கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டு வரும்’

‘ஆமாம்’

‘லாஸ்ட்ல ப்ரோக்ராம் தப்பாகி ஐஸ் எலும்புக்கூடு ஆயிரும்’

‘சரி...அதுக்கென்ன?’

‘எலும்புக்கூடு ஐஸ் டிரஸ் இல்லாமதானே இருக்குது; அதைத்தான் நான் சீனிகிட்ட சொல்ல வந்தேன்' என்று விளக்கிச் சொன்னதும் கொஞ்சம் முழித்துவிட்டு பிறகு விழுந்து விழுந்து சிரித்தாள்.

'என்னய்யா? பழைய நெனப்பா?' என்ற குரலில் கலைந்து போய் நாசுக்காய்ச் சிரித்து வைத்தேன். சீனு, ஸ்ட•ப்ட் ஸான்ட்விச், ஓனியன் ரிங்க்ஸ், டோநட், கா•பி என ட்ரே முழுதும் நிரப்பியிருந்தான்.

‘அது சரி! ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னியே அது என்ன?’ என்று கேட்டு வைத்தேன்

ஸான்ட்விச்சைக் கடித்துக்கொண்டே சீனி என்னைக் கேட்ட கேள்வி
'நீ சொன்னது பொய்தானே?'

Thursday, June 16, 2011

முரண்

'யப்பா! எவ்ளோ கூட்டம்? அள்ளி அள்ளி சாப்பாடு போட்டு மாளலன்னா..அயிட்டம் வேற ஜாஸ்தியா...பரிமாறி பரிமாறி கை சோர்ந்து பாச்சு...ஆனா மனசு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆயிரம் பேருக்கு என் கையால பரிமாறி, சாப்பிட்ட சந்தோஷத்த அவா மொகத்துல பாக்கும்போது வலியெல்லாம் பறந்து போச்சு...நீங்கதான் வராம போயிட்டேள்....ஒண்ணு நிச்சயம்..அடுத்தவாளுக்கு பரிமாறி, பசியாத்தறது இருக்கே அதுதான் நிஜம்மாவே உசத்தி' என்றாள்.

அவரின் பார்வை பேப்பரை மேய்ந்தாலும், அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார்.

சட்டென நினைவுக்கு வந்து 'ஏன்னா நீங்க சாப்டேளா?' என்று கேட்டதற்கு 'இல்லை'யெனத் தலையசைத்தார்.

'என்னன்னா நீங்க? நான்தான் சொன்னேனோன்னோ? ப்ரிட்ஜ்ல நேத்து பண்ண சாம்பார், ரசம் இருக்கு; காத்தால உங்களுக்காகவே பாவக்காய் கறி பண்ணி, சாதம் வெச்சேன். எதுவுமே சாப்பிடாம இதென்ன பட்டினியா? ஷ¤கர் வேற' எனச் செல்லமாய்க் கடிந்து கொண்டாள்.

'என்னமோ பசிக்கல; நீ சாப்பாட்டு பேச்சு எடுத்தப்புறம்தான் எனக்கு சாப்படணும்போல தோணறது' என்றார்.

'எனக்கு ரொம்பவே டயர்டா இருக்கு; நான் ரெஸ்ட் எடுத்துக்கறேன். மறக்காம சூடு பண்ணி, நீங்களே போட்டுண்டு சாப்டுங்கோ என்ன?' என்றவளுக்கு அவரது புன்னகை மட்டுமே பதிலாய் வந்தது.

Friday, January 28, 2011

அந்த நாள்

....., 1993

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதி!"

"ராஜ்! உன்னோட செந்தமிழ்த் தேன் வாழ்த்துக்கள் சூபர்ப். சாருமதிங்கற பேர நீ மட்டும் 'மதி'ன்னு கூப்பிடறப்போ ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. நன்றி ராஜ்! அது சரி வாழ்த்துக்கள் மட்டும்தானா?"

"மதி! இது உனக்குதான் ஸ்பெஷலா ஆர்டர் பண் வாங்கினது"

"வாவ்! எனக்கு பிடிச்ச யெல்லோ ரோஸ் பொக்கே! ராஜ்! ஐயம் த்ரில்ட்! க்ரேட்!"

"கைக்குக் கிடைச்ச பாக்கியம் என் உதட்டுக்கு இல்லயே மதி!"

"ச்ž...நாட்டி...கம்னாட்டி..இப்பவே லிப் டு லிப் கேக்குதோ?! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமாத்தான்!"

"அது சரி...இப்பதான் நான் தேர்ட் இயர் எஞ்ஜினியரிங். இன்னும் ஒரு வருஷம்...அப்புறமா வேல தேடும் படலம்..நம்ம கல்யாணத்துக்கு இன்னும் அட்லீஸ்ட் 3/4 வருஷம் இருக்கு மதி...அதனால..."

"அதனால..."

"மதி! நீ கிரிக்கெட் மாட்ச் பாத்திருக்கியா?"

"யெஸ்"

"மாட்சுக்கு முன்னாடி என்ன செய்வாங்க?"

"என்ன செய்வாங்க?!"

"நெட் ப்ராக்டிஸ்! அது மாதிரி...பலான மேட்டர் எவ்ளோ பெரிய விஷயம்? தெரிஞ்சுக்க வேணாமா?!"

"அடப்போய்யா! நீயும் உன் குப்பை புத்தியும்..."

"மதி! ஒண்ணே ஒண்ணு மா! என் கண்ணு இல்ல...என் செல்லம் இல்ல..."

"இதுக்குதான் யாருமே இல்லாத இடத்துக்கு தள்ளிகினு வந்தியா?! கம்னு குந்திகினு கிட!"

"என்ன மதி! திடீர்னு மெட் ராஸ் பாஷை?"

"இப்ப ஓகேன்னு சொன்னா அப்பால எல்லாமே ராங்கா பூடும்...தள்ளி குந்து நைனா!"

"போன பர்த்டே போது கொடுத்தது மா...அப்பப்ப தரத் தாவல...கொடுக்கலன்னா மறந்துபோயிடும்..கொடுத்துடு..."

"சே ராக்ஷஸ ராஜ்! உதடு எப்படி செவந்துடுத்து பாரு! என்ன முரட்டுத்தனம்?!"

"இன்னும் ஒரு தடவை ஒத்தடம் கொடுத்தா சரியாயிடும் மதி!"

"கிட்ட வந்தா ஒதைப்பேன் ராஸ்கல்!"

....., 1996

"மதி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"

"..... "

"ஏன் என்னோட பரிசை வேண்டாம்னு திருப்பி விட்டே?"

"....."

"என்ன மதி! பேச்சையே காணும்?"

"ராஜ்! என்னோட நெலம தெரிஞ்சும் ஏன் போன் பண்றே?"

"மதி! எனக்கு வாழ்த்து சொல்றதுக்குக் கூட உரிமையில்லயா?"

"ராஜ்! உன்னோட குரலக் கேக்கறப்ப என் மனசாட்சி என்னக் கொல்லுதுப்பா. இவ்ளோ நல்ல மனுஷனை ஏமாத்திட்டோமேன்னு துடிக்குதுடா. ப்ளீஸ்! என்ன புரிஞ்சிக்க...சித்ரவதை பண்ணாதடா!"

"தப்பு உம்மேல இல்ல...உன் சூழ்லைல நான் இருந்தாக்கூட அப்படித்தான் செஞ்சிருப்பேன். அதுக்காகப் போன் பண்றதுக்கூட 144 போடாத. நான் பண்ணத்தான் பண்ணுவேன். ஏன்னா அடுத்த வருஷம் இதே நாள்ல நீ திருமதி ஜகன்! அப்ப பண்ணமுடியாதே!"

"ப்ளீஸ்! கல்யாணம் நிச்சயமான இந்த சமயத்துல் நீ போன் பண்றது அவ்வளவா நல்லால்லை ராஜ்! என்ன புரிஞ்சுக்க..இதுவே நம்ம கடைசி பேச்சா இருக்கட்டும்...உன்ன கல்யாணத்துக்குக்கு கூப்பிடற தகுதியைக்கூட நான் இழந்துட்டேன்.."

"மதி!"

"......"


"ஹலோ?"

"......"

"ஹலோ!"

"...."

"எவ்வளவு தடவ நீ போனை கட் பண்ணாலும் நான் பண்ணிகிட்டே இருப்பேன் மதி!"

"ராஜ்! ப்ளீஸ்..."

"சத்தியமா இதுதான் நான் உன்னோட பேசற கடைசி வார்த்தை..திருமண வாழ்த்துக்கள்!"

....., 2002 காலை

"கிரி! சாயந்திரம் சினிமா போறோம். அப்டியே வெளில டின்னர். அப்புறமா.."

"ராஜ்! அது என்னப்பா எப்ப பாத்தாலும் 'கிரி'ன்னுட்டு...முழுப்பேரு கிரிஜா..கிரிங்கறது ஆம்பளப் பேருப்பா!"

"நீ மட்டும் என்னவாம்! போன வாரம் ஒரு நைட்டுல.."

"அய்யோ ராஜ்! வேணாமே.."

"இன்னிக்கு அதே மாதிரி..."

"நமக்குக் கல்யாணமாயி வருஷம் அஞ்சாவுது...பொறந்த ரெட்டையும் பொம்பள...இன்னும் சின்னப்புள்ள மாதிரி...என்ன இது போப்பா..."

"அட...வெக்கத்தப் பாரு!"

"அப்பா! குட்மார்னிங்!"

"குட்மார்னிங்க் சாரு! குட்மார்னிங்க் மதி!"

"அப்பா! சினிமா! அப்பா! பீச்!"

"அப்பா ஆபீஸ் போவேனா? அப்புறமா வருவேனா? 5 ஓ க்ளாக் எல்லாருமா சினிமா போறோமா? அப்புறம் சண்டே அன்னிக்கு பீச்சுக்கு போறோமா? ஓகே! இப்போ அப்பாவுக்கு ஒரு கிஸ்!"

"தாங்க் யூ டாட்!...ச்ச்"

....., 2002 இரவு

"மை காட்! இன்னிக்கு என்ன நாள் தெரியுமா ராஜ்?"

"தெரியும் கிரி!"

"தெரிஞ்சுமா...இன்னிக்கு இவ்ளோ ப்ரோக்ராம்?"

"ஆமா கிரி! என்னப்பத்தி முழுசும் தெரிஞ்சும் இந்த அஞ்சு வருஷம் இந்த நாளை ஒதுக்கி எனக்காக துக்கம் கொண்டாடிருக்க...குழந்தைகளுக்கும் சாரு, மதி ன்னு பேரு வைக்க மறுப்பு சொல்லல..ஆனா நான்..."

"ராஜ்! காதல்ல ஜெயிக்கறங்களுக்கு காதலோட அருமை புரியறதில்ல...ஆனா காதல்ல தோத்தவங்களுக்கு அதோட அருமை ச்சயமா தெரியும்...அதனாலதான்..."

"இல்ல கிரி...அத நான் மறந்துதான் ஆகணும்...எனக்குன்னு மனைவி, குழந்தைன்னு அமைஞ்சப்புறம் கூட நான் இன்னும் மறக்காம இருந்தா ரொம்ப தப்பு கிரி..."

"ராஜ்!"

"ஆமா கிரி! குடும்பங்கறது காதல விட உன்னதமானது...புனிதமானது...என்ன மன்னிச்சிரு!"

"ராஜ்! ஐ லவ் யூ!"

"நானும் உன்னை மனதார நேசிக்கிறேன் கிரி!"