அந்தப் பெரியவர்தான் அவனுக்கு எல்லாம். இன்று அவன் இருக்கும் மிகப் பெரிய நிலைக்கு அவர்தான் காரணம்.
கிராமத்தில் இருக்கும் எளிய விவசாயி அவர். மெத்தப் படிக்காதவர் அவர். வாழ்க்கையின் அனுபவங்கள் அவர் நெற்றியின் ரேகைகளாய் படிந்திருந்தன. உழுததின் அடையாளங்கள் அவர் கரங்களில் காப்பாய் நிறைத்திருந்தன.
ஓரிரவில் பெற்றோரைத் தொலைத்த அனாதையாய் நின்ற அவனை 'யாரையும் அண்ட விடாத' அவருக்குப் பிடித்துப் போனது. அவனை நன்றாய்ப் படிக்குமாறு தூண்டி விட்டு, பக்கபலமாய் நின்று கொண்டு, நல்ல பதவியில் அமர்த்தி விட்டு, மனதிற்குப் பிடித்த பெண்ணையே மணமுடித்து விட்டு, ஓய்ந்து போனார் அவர்.
பலமுறை கூப்பிட்டும் வராதவர் வந்திருக்கிறார் - 'ஒழுக்கம்' என்கிற தலைப்பில் - அவனுடைய முதல் புத்தக வெளியீட்டிற்கு.
'தம்பி! பெரிய பதவி. வேலை பிடுங்கித் தின்னும். உனக்கு வீட்டிலேயும் பொறுப்பு அதிகம். எப்படிப்பா உன்னால எழுத முடியுது?'
'அதில்லை அப்பா! வீட்டுக்கு வந்தா எதாச்சும் வேலை வந்திடுது. அதனால, என்னோட எழுத்துக்கள் எல்லாம் ஆபீஸ்-ல எழுதிருவேன். இந்தப் புத்தகமும் அப்படித்தான்' என்றான் அவன்.
'தம்பி! நான் விவசாயி. உழுதாத்தான் எனக்கு பொழைப்பு. அதை வெச்சித்தான் இன்னிக்கும் ஓட்டிக்கிட்டு இருக்கேன். உன்னிய படிக்க வெச்சி ஒரு நிலைக்கு ஆளாக்கி விட்ருக்கேன். வயலுக்குப் போனா வேலை, வேலை - வேற எத்தையும் நினைக்கக்கூட முடியாது. நினைக்கவும் கூடாது. ஆனா நீ? என்னப்பா இப்பிடி சொல்லுதே? அப்டின்னா உன் சொந்த வேலையத்தான் இத்தினி நாளும் ஆபீசு-ல பாத்தியா? நீ வாங்குற சம்பளமும் இதுக்குத்தானா? சரிதானாப்பா இது?' என்றார் வெள்ளந்தியாய்.
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
No comments:
Post a Comment