Thursday, February 21, 2013

55 வார்த்தை கதை வரிசை - நடிகையுடன் ஒரு ஆட்டம்!

இவ்வளவு அருகாமையில் நடிகையுடன் இருப்பேன் எனச் சத்தியமாக நினைக்கவில்லை. (7)

எது அணிந்து வந்தாலும் பாந்தம் / அழகு சொட்டும் நடிகை. எல்லாப் படங்களையும் விடாமல் முதல் நாள் பார்த்துவிடுவேன். நகையெல்லாம் அணிந்த விளம்பரத்தைக் கூட நான்தான் முதலில் பார்த்ததாக நண்பர்கள் சொன்னார்கள். (22)

அவளைப் பற்றிய கிசுகிசுக்கள் என்னை ரொம்பவே பாதிக்கும். தவறாகப் பேசிய நண்பனை அறைந்திருக்கிறேன். அப்படிப்பட்ட அவளுடன் நெருக்கமாக இப்போது. (14)

கிறங்கிய கண்களால் கண்ணடித்தபோது தன்னை மறந்து, தியேட்டரின் முதல் வரிசையிலிருந்து காகிதக் கத்தைகளைத் திரையில் எறிந்தேன். (12)

Wednesday, February 20, 2013

55 வார்த்தை கதை வரிசை - மீசை!


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் கூட்டமில்லை. நானும் அவனும் நிதானமாய்த் தரிசித்தோம். (8)

அவன் அர்ச்சகரைக் கேட்டான். ‘சாமி! பெருமாளுக்கு மீசை சரியா வெக்கலியா?’(8)

‘சரியாத்தானே இருக்கு!’(2)

‘ரைட் ஸைட், லெஃப்டை விட சின்னதாயிருக்கு, பாருங்களேன்’ (6)

’ஆமாம்..அப்பப்ப கரப்பான் தின்னுடறது’ (4)

‘சாமி! பெருமாளுக்கு மீசைதான் அழகு. கொஞ்சம் கவனமாயிருங்க!’ (6)

‘தம்பி சொல்றது உண்மைதான். இப்ப சரி பண்ணிர்றேன்’(6)

வெளியில் வந்தோம். ‘அப்புறம் சொல்றேன்னியே! என்னாச்சு அழகு முறுக்கு மீசை?’ (8)

அவன் ‘ட்ரிம் பண்ணும்போது பிசகிருச்சி... வழிச்சிட்டேன்!’ சொல்லிவிட்டுப் புன்னகைத்தான். (7)

55 வார்த்தை கதை வரிசை - குருவாயூரப்பா!

‘லாஸ்ட் வீக் புது பென்ஸில் பாக்ஸைத் தொலைச்சிட்டேன்.. ‘குருவாயூரப்பா!’னு சொன்னே. நேத்திகூட சைக்கிளை அஸ்வின் மேலே விட்டதா அவங்க வீட்ல ரிப்போர்ட்...அப்ப கூட ‘குருவாயூரப்பா!’னுதான் கோவத்தோட சொன்னே...ஏம்பா?’ (22)

‘செல்லம்! அப்பா அம்மாக்கு நீ ரொம்ப லேட்டா பொறந்தயா? அதனால எது பண்ணாலும் திட்டமுடியல. ஆனாலும் கோவம் வருதே. அதனால ‘குருவாயூரப்பா!’ சத்தம் போடுறேன்’ (18)

‘இனிமே சமத்தா இருக்க ட்ரை பண்றேன்பா’ (5)

ரெண்டு நாள் கழித்து... (3)

‘குருவாயூரப்பானு ரெண்டு தடவை சொல்லு...!’ (4)

‘???’

’கனடா காமிராவை உடைச்சிட்டேன்பா!’ (3)

Tuesday, February 19, 2013

55 வார்த்தை கதை வரிசை - இதயம்

பிப்ரவரி எட்டு
29 வயசு டேவிட் அகாலமாய் மாரடைப்பில் இறந்து போனான். (9)

பிப்ரவரி ஒன்பது
ஆஃபீஸ் கிளைகள் தாண்டி துக்கம் அனுஷ்டித்தது. (7)

பிப்ரவரி பத்து
ஒரே மகனை இழந்த பெற்றோரைத் தேற்ற ஆளில்லை. நெருங்கிய நாலு பேர் கல்லறை வரை போனார்கள்.  டேவிட் என்பவனின் வாழ்க்கை ஆறடியில் தோற்றம்-மறைவு என்று அடங்கிப்போனது. (22)

பிப்ரவரி பதினான்கு
சக ஊழியை எலிஸாவின் கண்ணீர் காதலர் தின வாழ்த்து அட்டையில் பட்டுத் தெறித்தது. ’ஒரு வாரம் முன்னால் கொடுத்திருந்தால் பிழைத்திருப்பானோ? ’ (17)

Monday, February 18, 2013

55 வார்த்தை கதை வரிசை - போட்டி!

’டேய் வேணாம்மா’ (2)

‘இல்ல மச்சி, ட்ரை பண்ணா மாட்டிரும்!’ (5)

‘நமக்கும் இதுக்கும் ஒத்து வராது. அந்த கம்னாட்டி நம்மால முடியாதுன்னு தெரிஞ்சிகிட்டே சேலன்ஞ் பண்ணிருக்கான்’ (11)

‘சப்பை மேட்டரு. ஒரு தபா, ஒரே தபா அண்ணன் ட்ரை பண்ணார்னா வந்து விழாதா என்ன? அந்த தீபா மேட்டர்ல நாமதான ஃபர்ஸ்ட்டு, என்ன ஃபெர்பாமென்ஸு, கவுந்திருச்சி தீபா!’ (21)

‘ ’நிலா’ சினிமா பாட்டு கலெக்‌ஷ்ன்ஸ்பா… கலாய்ச்சிட்ட…இது?’ (6)

‘இப்ப என்னாங்கற…55 வார்த்தைல கதை எழுத முடியாதுங்கிறயா…அப்ப கத வுடு!’ (10)

55 வார்த்தை கதை வரிசை - காதல்

சமீபமாகத்தான் அவளை பெல்ஸ் ரோடு நிறுத்தத்தில் பார்க்கிறேன். நான் போகும் பஸ்-ஸில்தான் அவளும்! Tvs-ல் நான் இறங்குவதால், ’எதுவரை போகிறாள்?!’ (15)


மூன்று நாட்களாக மிக அருகாமையில் நின்றதில், கண்கள் எதேச்சையாக(?!) மோதிக்கொண்டதால், அலுவலகம் இல்லாத சனிக்கிழமையானாலும் டீக்காக உடையணிந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.’எப்படியாவது இன்னிக்கு கேட்டுடணும்' (18)


'கோரா' ஸில்க்/attached short sleeves-ல் அவள். நெருங்கியதில், lavender மணம்! (கண்கள் மோதிக்கொண்டன!) (11)


மெலிதாய்த் தொண்டையைச் செருமி, "எக்ஸ்க்யூஸ் மீ"(5)


'என்ன?' புன்னகைத்ததில் totally flat! (4)


"25 போயிடுத்தா?" (2)