நான்
மாலினியைச் சந்தித்த முதல் நொடியிலேயே காதலிக்கத் துவங்கிவிட்டேன். திருமணமானவள் எனத் தெரிந்துங்கூட.
நான்
என்கிற ராஜாராமன் ஒரு பட்டதாரி. படித்து முடித்தவுடன்
சுடச்சுட software கம்பெனி ஒன்றால் traineeயாய்த் தத்தெடுக்கப்பட்டவன். தேசீயமயமாக்கப்பட்ட வங்கியொன்றின் திருச்சி கிளையில்
மேலாளராய்த் தந்தை. அதனால் பிரம்மச்சாரியாய்,
தனியனாய் மும்பை வாசம். நிறைய அரட்டை, நிறைய
சிகரெட் (அப்பாவிற்குத் தெரியாது), நடுவில் கொஞ்சமாய் SQL / PLSQL code எழுதும் சிக்கலான
வேலை.
Project-ன்
முக்கிய தருணத்தில் இன்னொரு ‘கை’ தேவைப்பட்டதில், என்னுடன் கோர்க்கப்பட்ட பெண் மாலினி. மாலினி ஐஸ் இல்லை; ஏன் நம்மூர் த்ரிஷா போலக்கூட
இல்லை. இருந்தும் பிடித்துப்போய், ஒன்றுமே
தோன்றாது அதிர்ந்து விட்டேன். மாலினி என்னமோ
சகஜமாய்த்தான் பழகினாள்; நான்தான் மாறிப்போய் விட்டேன்.
இரண்டே
நாட்களில் மாலினி கண்டுபிடித்துவிட்டாள். கேட்டபோது
மறைக்காமல் ஒப்புக்கொண்டேன். அவள் சிரித்தாள். ‘நீ வெளிப்படையாய்ப் பேசினது எனக்கு புடிச்சிருக்கு. ஆனா, இதெல்லாம் சரிப்படாது’. நான் ஒப்புக்கொள்ளவில்லை.
இவ்வளவு
ஆனபின்னும் மாலினி இயல்பாய்த்தான் நடந்து கொண்டாள். என்னோடுதான் லஞ்ச். எப்போதும் போல ‘சள சள’வென வீழும் அருவி போலப் பேச்சு. நான் ‘கவிதை’ கூட எழுத ஆரம்பித்து விட்டேன்.
திருமணமானவள்
எனத் தெரிந்தும்
திரும்பிப்
பார்க்கிறேன்;
விவாகமானவள்
எனத் தெரிந்தும்
விரும்பிப்
பார்க்கிறேன்;
கல்யாணமானவள்
எனத் தெரிந்தும்
காதலித்துப்
பார்க்கிறேன்!
மாலினிக்குக்
கூடக் காட்டினேன். படித்தவுடன், ‘கொஞ்சம் லூஸோ’
என எண்ணுமளவிற்கு விழுந்து விழுந்து சிரித்தாள்.
அன்று
வழக்கம்போல் லஞ்சுக்கு ‘ஷிவ் ஸாகர்’ வந்தோம்.
கூட்டம் நெரிந்தது. இடம் பிடித்து உண்ணத்
துவங்கினோம். பேரரிடம் ‘இன்னுமொரு ரொட்டி’
என்றேன். எடுத்து வந்தவன் தவறுதலாய் மாலினி
தட்டில் வைத்துவிட்டான். பாதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த,
விரலைச் சப்பி ருசித்துக் கொண்டிருந்த கையால் எடுத்து ‘ஏ இந்தா’ என மாலினி கொடுக்க,
நான் வாங்க மறுத்தேன். வியப்புடன் மாலினி பார்க்க
‘ஸாரி! நான் வேறே ரொட்டி ஆர்டர் பண்ணிக்கறேன்.
எனக்கு எச்சில் பிடிக்காது’ என்றேன்.
‘நான்
மட்டும் என்னவாம்?’ என்று casual-ஆகத்தான் மாலினி கேட்டாள். எனக்குத்தான் பிய்ந்து போன செருப்பால் அடி வாங்கியது
போல இருந்தது!
இன்றும்
மாலினியோடுதான் பணி புரிகிறேன். நல்ல நண்பனாக.
1 comment:
This is crazy, you are reinforcing the stereotype that woman is an object. எச்சில் என்று சொல்லி பெண் இனத்தையே அவமானப்படுத்துகிறீர்கள்.
Post a Comment