Saturday, July 07, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 3

 

திருவடிப்பொடியார் வல்லவராயன் அளவளாவும் மூன்றாம் அத்தியாயம்


தன் முன்னே அமர்ந்திருக்கும் திருவடிப்பொடியாரை தீர்க்கமாகப் பார்த்தான் வல்லவராயன்.


தீவிர வைஷ்ணவரான திருவடிப்பொடியார் சராசரி உயரத்திற்கும் சற்றுக் கீழ்தான்.  மீசையை முறுக்கி, குடுமியை இறுக முடிந்து, சிவப்பு நிறத்தில் நாமமிட்டு, காதுகளில் கடுக்கன் போட்டு, பார்வை தீட்சண்யத்தில் அனைவரையும் பதற வைப்பவர். இரண்டு கரங்களிலும் தங்கக்காப்பு,  உடலில் அங்கங்கே தென்பட்ட நகைகள் கொண்டு ‘தங்கப் பிரியர்’ என்று அறிந்துகொள்ளலாம். எப்போதும் மேலே குறுக்காக அணிந்திருக்கும் பட்டு வஸ்திரம், ஒன்பது முழ வேட்டியை பஞ்சகச்சமாகக் கட்டிய அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். அருகில் நெருங்கினால் மட்டுமே மெலிதாய் வீசும் சந்தன வாசம், வீரம் மிகுந்திருந்தாலும், நடையில் கம்பீரம் அவ்வளவாக இல்லாமல் பெண்மையின் நளினம் கலந்திருந்தது,  பரதநாட்டியத்திலும் தேர்ச்சி பெற்றதாலும் இருக்கலாம். 


‘என்ன வல்லவா? அப்படியொரு பார்வை?’ திருவடிப்பொடியார் வெண்கலக் குரல் சூழலின் அமைதியைக் கலைத்தது.  வல்லவராயன் நினைவையும்.


வளர்பிறைச் சந்திரன் வானத்தில் நீந்திக்கொண்டிருக்க, ஆவணி மாத இரவாயிருந்தாலும், புழுக்கம் அதிகமாய் இருந்தது. 


உப்பரிக்கையில் இவர்களைத் தவிர வேறில்லை. 
திருவடிப்பொடியார் தனியாகத் திருமுகம் வேண்டி நின்றதுதான் முக்கியக் காரணம்.


‘எதற்காக இந்தத் தனிமைச் சந்திப்பு?  வினாவினால் விளைந்த பார்வை இது’ என்று சமாளித்தான் வல்லவராயன்.


திருவடிப்பொடியார் சிரித்தார்.  ‘வல்லவா! சிறு பிராயத்தில் இருந்தே உங்களை வளர்த்தவன் நான்..என்னிடமே நாடகமா?’ என்றார் கேலியாக.


வல்லவராயன் மௌனம் காத்தான்.  சில நேரங்களில் மௌனமே சிறந்தது என்று திருவடிப்பொடியாரிடம் பாடம் கற்றவன்.


’சில விஷயங்களை மனம் விட்டுப் பேசுவதற்காகவே இங்கு வந்துள்ளேன்’ என்றார் திருவடிப்பொடியார்.


வல்லவராயன் ஏதும் பேசவில்லை.


‘மீசையை முறுக்குவது வீரத்திற்கு அழகு.  முறுக்கு மீசையை நீவிக்கொள்வது பெருமைக்கு அழகு.  அதை விட்டுவிட்டு மீசையைத் ‘தொங்கு மீசை’ ஆக்கியதன் காரணம் என்ன?’


‘மன்னன் என்றால் முறுக்கு மீசைதான் இருக்க வேண்டுமா? சோழனுக்கு ஆண்டாண்டு காலமாய்க் கப்பம் கட்டி, போருக்கே செல்லாமல் பாதி வயதைக் கடந்த எனக்கு மீசை எப்படி இருந்தால் என்ன?  இது அழகாயிருக்கிறதென்று அங்கவை சொல்கிறாள்.’


அங்கவை திருவடிப்பொடியாரின் தங்கை மகள்.  ‘அது பற்றியும் பேச வேண்டும்.  அங்கவைக்கும் உங்களுக்குமான உறவுதான் என்ன?’


‘என் தோழி, எனக்குத் துன்பம் நேரும்போதெல்லாம் தோளில் தாங்கும் தோழி!’


‘வல்லவா! இது என்ன புதிதாக இருக்கிறது?  நீங்கள் இருவரும் அடிக்கடி கேப்பங்கூழ் விடுதிகளில் சந்தித்துக்கொள்வதும், கொஞ்சம் கேப்பங்கூழ் அருந்திவிட்டு, மணிக்கணக்கில் உறவாடுவதும் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?’


‘ஆசானே!  கேப்பங்கூழ் விடுதிகளைத் திறந்ததின் நோக்கமே அதுதானே… மக்கள் அங்கு வந்து கூழ் குடித்து, நேரத்தை செலவிடுவதற்குத்தானே அங்கங்கே திறக்கச் சொல்லியிருக்கிறேன்?’


‘வல்லவா! தடாலடியாய் நீங்கள் கேப்பங்கூழ் விடுதிகளில் நுழைந்துவிடுவதால் பாதுகாப்பு பிரச்னைகளை சமாளிப்பதற்குள் சிபிசிஐடி பிரிவு திணறி விடுகிறது’

சிபிசிஐடி என்பது சிறப்புப் பிரிவுச் சிந்தனை ஐமிச்ச டிமிக்கியின் சுருக்கம்.  அரசாங்கத்தின் நேர்ப் பார்வையில் இயங்கும் ஒற்றர் பிரிவு.  (அரசாங்கம் என்றால் திருவடிப்பொடியார் எனும் பொருள் கொள்பவர்கள் அரசியலுக்கு நுழையத் தகுதியானவர்கள்). யாரையும் சந்தேகக் கண்ணோடு (ஐமிச்சம்) பார்க்கும் உளவுகளில்/ஒற்றுகளில் தவறு நிகழ்ந்தால், இவர்களுக்குத் தண்டனை ஏதும் விதிக்கப்பட மாட்டாது (டிமிக்கி).


‘ஆசானே!  இதெல்லாம் ஒரு காரணமா?  எனக்கும் அங்கவைக்குமான ஆண்-பெண் நட்பு, கேப்பங்கூழ் விடுதிகள்… வரும் சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணம்..இதெல்லாம் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்’


‘இப்படி அதிகரித்துக்கொண்டே போகும் கேப்பங்கூழ் விடுதிகளில் ஆண்-பெண்கள் உரையாடுவதைத்தான் முக்கியமாக வைத்திருக்கிறார்கள்.  கேப்பங்கூழ் அரிதாகவே அருந்துகிறார்கள்.  இதனாலேயே வெளியே ஒரு பொன்னிற்கு விற்கும் கேப்பங்கூழ், விடுதிகளில் ஐந்து பொன்களுக்கு விற்கப்படுகிறது.  விடுதிக் காப்பாளார்கள் அடிக்கும் கொள்ளை இது’ என்று கொதித்தார் திருவடிப்பொடியார்.


‘ஆசானே! வரி போடுங்கள், சரியாகி விடும்’ என்றான் வல்லவராயன்.


‘வரியா? மக்கள்தானே அவதிப்படுவார்கள்?’


‘படட்டுமே! இளைப்பாற வருபவர்கள் அதற்குண்டான விலையைக் கொடுத்துதானே ஆகிவேண்டும்.  விற்பனை வரி பத்து சதவீதம், சேவை வரி இரண்டு சதவீதம், லாபத்தின் மீதான கூடுதல் வருமான வரி ஐந்து சதவீதம் என்று போட்டுப் பாருங்கள், கஜானா நிரம்பி வழியுமே!’


திருவடிப்பொடியாரால் அந்த நேரத்திலும் வல்லவராயனை வியக்காமல் இருக்க முடியவில்லை.  சமயத்தில் கொஞ்சம் சமயோசிதமாய்ப் பேசுகிறான்!


‘அது சரி! அங்கவைக்கும் உமக்கும் என்னதான் உறவு?’


‘ஆசானே!  கர்ண்ன் – துரியோதனன் போல இது உன்னதமான நட்பு.  அவள் என் மனங்கவர்ந்த தோழி.  இந்த உறவைப் புரிந்துகொள்ள உங்களால் முடியாது’


‘வல்லவா! கண்ணன் – அர்ஜுனன் நட்பு என்கிற உவமையைச் சொல்லலாமே? இதெல்லாம் சரியாய் வருமா?’


‘வரும், வரவேண்டும். அது சரி, இது பற்றி அவளிடம் பேசாதீர்கள்.  மனது வருத்தப்படுவாள்.’


எதற்கும் தீர்வு உண்டு என்று நினைக்கும் திருவடிப்பொடியாருக்கு இதை எப்படிக் கையாளுவது என்று தெரியத்தான் இல்லை.  ‘கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும்’


இடுப்பிலிருந்த ஓலையை எடுத்தார்.  ‘இது என்ன?’ என்றார்.
வல்லவராயன் வாங்கிப் பார்த்தான்.  ‘எப்படி உங்களுக்குக் கிடைத்தது?’ என்பது போல பார்வை.


’என்ன இது?’


விலகிருக்கு மாராப்பு
மனசுக்குள்ள மத்தாப்பு
இன்னுமேண்டி வீராப்பு
எட்டு மாசத்துல வளகாப்பு


’தளை தட்டுகிறதே வல்லவா!’


‘களை கட்டுகிறதே! அதைப்பாருங்கள் ஆசானே!  வெண்பா போன்ற பாட்டுக்களை விட்டுவிட்டு இதுபோல மடக்கி, மடக்கி எழுதப்பழகுங்கள்.  இதுவும் நான் வருங்காலச் சந்ததியினருக்கு வைத்துவிட்டுப் போகும் சொத்து!’ என்றான் வல்லவராயன் (ஆதாரம்: Tamil Rulers’ Rhymes – Molle Mary, Pg 259).


திருவடிப்பொடியார் மீண்டும் சங்கடத்தில் ஆழ்ந்தார். சிறிது அமைதிக்குப் பின்…‘திருநங்கை மகாராணியைத் திருப்தி படுத்த முடியாத தங்களுக்கு சாமரம் வீசும் பெண்ணிடம் சரசம் எதற்கு?’


‘திருப்தியாய் திருநங்கை இல்லையே!’ என்ற வல்லவராயனுக்குச் செருமலே பதிலாய்க் கிடைத்தது.  திருவடிப்பொடியார் பார்த்து நடத்தி வைத்த திருமணம்!  மீண்டும் மௌனம்.


’உறையில் வாள் இல்லாத நீங்கள் எந்த தைரியத்தில் உருவத் துணிந்தீர்கள்?’ என்ற திருவடிப்பொடியாரின் அஸ்திரக் கேள்விக்கு வல்லவராயன் திகைப்பே பதிலாயிருந்தது.


சுதாரித்துக்கொண்டு ‘மன்னன் என்பவன் எவ்வளவுதான் அணிந்துகொள்வது?  அணிந்துகொண்டு நடப்பதின் சிரமம் தங்களுக்கு எப்படித் தெரியும்?  அதனால் அவ்வப்போது வேண்டாததை அணியாமல் விடுவேன். அது வாளாயும் இருக்கலாம், உள்ளாடையாயும் இருக்கலாம். இதையும் திருநங்கை சொல்லியிருப்பாளே?!’ என்றான் கோபமாக வல்லவராயன்.  


’திருநங்கை சொல்லவில்லை.  வானவராயன் தங்களைச் சுற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் சிபிசிஐடி பிரிவு விடாமல் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறது.  அதில் கசிந்த தகவலே இது’ என்றார் திருவடிப்பொடியார் புன்னகையுடன்.


வல்லவராயன் பதிலேதும் சொல்லவில்லை.


‘மன்னா! இரு கைகளிலும் வாள் சுற்றும் கத்திவீச்சனை எப்படிக் கையாளப்போகிறீர்கள்?  அதுதான் இப்போதைய கவலை.  எனக்கே சவாலாய் நிற்கும் கேள்வி!  குணசீலப் பெருமான்தான் வழிகாட்ட வேண்டும்.  வருகிறேன் வல்லவா! மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் உறங்கு’ என்று சொல்லி, ஆழ்ந்த பெருமூச்சுடன் அகன்றார் திருவடிப்பொடியார்.


வல்லவராயன் நீண்ட நேரம் உறங்காது யோசனையில் ஆழ்ந்திருந்தான்.


அழகு நிலா வளரும்...

No comments: