Sunday, July 24, 2011

ஜீன்ஸ்!

எக்ஸ்சேஞ்ச் டவர்ஸ், கிங் ஸ்ட்ரீட், டொரொன்டோ, கனடா.

முதன்முறையாய் வெளிநாடு வந்ததில் எல்லாம் பிரமிப்பாய் இருந்தது. 18 வது தளத்தில் உள்ள எனது அலுவலகத்தில் வேலையை முடித்தாகி விட்டது. இனி ஷெப்பர்ட் அவென்யூ செல்ல வேண்டும்.

லி•ப்ட் பொத்தானை அழுத்தியவுடன் வயிற்றின் நினைவு வந்தது. முதல் தளத்தில் இறங்கி, கீழ்த்தளத்திற்குச் சென்றேன். தாய்லாந்த் உணவகத்திலிருந்து, Tim Horton, Sub Way, Burger King மற்றும் ஏனைய உணவகங்கள் வரிசையாய் இருந்தன.

பர்கர் கிங்-ல் வாங்கிய வெஜ் பர்கர் மற்றும் லார்ஜ் கோக்-குடன் போராடிக் கொண்டிருக்கையில் தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினால்... சட்டென பார்த்தவுடன் நினைவில் வராத, ஆனால் தெரிந்த முகமாய் இருந்தது. 'என்னடா சுந்து? மறந்துட்டியா?' என்றதும் புரிந்து போனது. 'சுந்து' என்று கூப்பிடும், கனடாவில் சந்திக்கும் சாத்தியமேயில்லாத (சாத்தியமான!) சீனி என்கிற சீனிவாசன்.

'என்னடா? இங்க என்ன பண்றே?' என்றான். சொன்னேன்.

'நான் இங்க டூரிஸ்ட் விசால வந்திருக்கேன். கிங் ஸ்ட்ரீட்டை சுத்திட்டு போலாம்னு வந்தேன். இந்த பில்டிங் சூப்பரா இருக்கே? ஒரு மினி டிவி ஸ்டூடியோ கூட இருக்கு. அப்பப்ப நியூஸ் கொடுக்கறாங்க' என சொல்லிக்கொண்டே போனவனை நிறுத்தி ‘இது Canada Stock Exchangeபா’ என்றேன்.

காதிலேயே வாங்கிக்கொள்ளாது 'அப்பறமா, கமல்-சிம்ரன் பஞ்சதந்திரத்தில டூயட் பாடினாங்களே? அது எங்க இருக்கு தெரியுமாடா?' என்று கேட்டதும் 'பழைய சீனி'தான் என்று நிச்சயமாய்த் தெரிந்துபோனது.

'கொஞ்சம் இரு. போயிறாத. முக்கியமான விஷயம் பேச வேண்டியதிருக்கு. சாப்பிட ஏதாச்சும் வாங்கியாறேன்' என்று சொல்லிவிட்டு சீனி நகர்ந்து போனான்.

மனது பின்னோக்கியதில்....

இந்தியாவில் 'first day first show'-வுக்கென ஒரு கும்பல் உண்டு; இவர்கள் போய்ப் பார்ப்பதோடு இல்லாமல், படத்தைப் பற்றிக் காரசாரமாய் விவாதம் செய்து, பார்க்கும் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடுவார்கள். இது தவிர, சினிமாவைப் பற்றிய ஞானம் அதிகம் என்கிற கர்வம் உள்ளூற இருக்கும். இந்த இனத்தைச் சேர்ந்தவன் சீனி என்கிற சீனிவாசன்; திருவல்லிக்கேணியின் ஒண்டுக்குடித்தன தோஸ்த்.

சீனிக்கென நாகா, சாமி, ராதா, வரது என ஒரு தனிக் கூட்டம் உண்டு. இவர்களுக்குச் சினிமாவைத் தாண்டிய உலகம் இல்லை. சீனி தரும் சினிமாக்கதைகளுக்கும், சினிமா கிசு கிசுக்களுக்கும், மற்றும் ஏனைய ஞானங்களுக்கு ஜால்ரா போடும். அதுவும் 'fdfs' பார்த்து விட்டு வரும் நாட்களில் சீனி போடும் அலட்டல்களுக்கு அளவே இல்லை.

மொட்டை மாடியில் கூட்டம் ஒவ்வொரு சனிக்கிழமை இரவில் கூடும். அதே நேரத்தில் எதிர் வீட்டு மாடியில் என் கனவுக்கன்னி ஹேமா உலாவுவதால் நானும் ஆஜர்!

இப்படித்தான் ஜீன்ஸ் படம் பார்த்துவிட்டு வந்தவுடன் சீனி ஆட்டம் போட்டான்; 'ஐஸ்' அப்படி இப்படி என ஜொள்ளு விட்டான்; ஷங்கரை 'கிழி கிழி'யெனக் கிழித்தான். கடுப்பானதில், முதன் முறையாகச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.

'சரி இவ்ளோ பேசறியே? ஒரு சீன்ல ஐஸ் டிரஸ்ஸே இல்லாம வர்றா தெரியுமா?' என்றேன்.

'என்னது?!'

'உனக்குத் தெரியுமா?'

'போடா டுபாக்கூர்! பாக்காம கத வுடாத'

'நீ எங்க படம் பார்த்த?'

'உதயம்-ல first day; first show. தெரியும்ல'

'சரி நம்ம பசங்க 'சத்ய'த்துல பாத்திருக்காங்க. அவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்'

ஜால்ரா கூட்டம் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்தது; பிரமிப்புடன்.

சீனி தவித்தான். அக்கம்பக்கம் பார்த்து திருட்டு தம் பற்ற வைத்து இழுத்துக் கொண்டே'இது நிச்சயம் பொய்' என்றான்.

'தோ பாரு! 'சத்ய'த்துல நைட் ஷோல சுமார் 30 செகண்ட் ஓடிருக்கு; confirmடா சொல்றாங்க' என்றேன் சிரிக்காமல்.

ஜால்ரா சீனியைக் கேவலமாய்ப் பார்த்தது. 'டேய்! இவன நம்பாதீங்கடா, பொய் சொல்றான்' என்றான் சீனி 'குப் குப்' புகையுடன்.

'இப்பவும் சொல்றன். நான் படம் பாக்கல. ஆனா சொன்னவங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு' என்றேன் சீரியஸாய்.

சீனிக்கே சந்தேகம் வந்து 'confirm-டா மச்சி?' என்று கேட்கத் துவங்கினான்!

'ஆமாம்! நிச்சயமான உண்மை. சரி சரி ரொம்ப பேசியாச்சு. தூக்கம் வரது' என்று பாயை விரித்துப் போட்டேன்.

அன்றிரவு, சீனிக்குத் தூக்கம் தொலைந்து போகும் என்று தெரியவந்ததில் உள்ளூர சந்தோஷம். விஷயம் இத்தோடு விட்டது என்றுதான் நினைத்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து, பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் சீனியைச் சந்தித்தேன். 'முடிச்சிட்டியா? வாடா வா' என தர தர வென B R டீ பாருக்கு அழைத்துச் சென்றான்.

'டீயா? மசாலா பாலா?' என்றதற்கு 'ஒன்றும் வேண்டாம்' என்றாலும் வற்புறுத்தி பிஸ்கட் பால் சாப்பிட வைத்தான். ஸ்டைலாய்ச் சிகரெட் வாயில் வைத்து 'மச்சி! நீ சொன்னது சும்மாதானே?' என்றான்.

எனக்கு முதலில் புரியவில்லை. 'என்னது?' என்றேன் மையமாய்.

'நான் கூட சத்யம் போய் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி நைட் ஷோ பாத்தேன். ஒண்ணுமேயில்லை' என்றதும் என்னுள் ட்யூப்லைட் எரிந்தது!

'நிச்சயமா இருக்கு' என்றேன். 'டேய்! வெறுப்பேத்தாத. வெள்ளாடாத. உண்மைய சொல்லிரு' என்று கோபமாய்ச் சிகரெட்டை புகைத்தான்.

'எதுக்கு வெளயாடணும்? பசங்க அபிராமில பாத்துருக்காங்க. நாந்தான் வாய்தவறி உங்கிட்ட சத்யம்னு சொல்லிட்டேன். என்னால் prove பண்ண முடியும்' என்றேன்.

'கரெக்டா சொல்ல மாட்டியா? அது சரி எந்த ஸீன்ல டிரஸ் இல்லாம வர்றாளாம்?' என்றான் கிசுகிசுப்புடன்.

நான் சொன்னேன்.

'எப்படிறா சென்ஸார்ல வுட்டாங்க? தியேட்டரையே seal பண்ணிடுவாங்களே!' என்றான் சீனி நம்பாது.

'அதெல்லாம் தெரியாது. ஆனா பசங்க பாத்தாங்க. எல்லாம் என் college group. பெரிய இடம். கண்டிப்பா நம்பலாம்' என்று certificate கொடுத்தேன்.

சீனி ரொம்பவும் டென்ஷனாகி இன்னொரு சிகரெட்டை பற்ற வைக்க முயன்றதில் நான்கு தீக்குச்சிகள் அணைந்து போயின!

அந்த சனிக்கிழமை இரவு சீனிக்காக நாங்கள் காத்திருந்ததுதான் மிச்சம். அவன் வரவேயில்லை! வீட்டில் கேட்டதற்கு அபிராமியில் 'நைட் ஷோ' போயிருப்பதாகச் சொன்னார்கள்!

அடுத்த நான்கு நாட்களுக்கு சீனியைப் பார்ப்பதை தவிர்த்தேன். இருந்தாலும், ஹேமாவைப் பார்க்க மாடிக்குப் போகும்போது வசமாய்ச் சிக்கிக்கொண்டேன்.

'நீ சொன்னது நிச்சயம் பொய்தான்' என்றான் கோபமாய்.

'இப்பவும் சொல்றன். நான் சொன்னது நிஜம். 'மொத நாள்ல எதுவுமே கட் பண்ணாத படமாத்தானே இருக்கும். அப்பறமா தெரிஞ்சப்பறம் கட் பண்ணுவாங்க; அதனாலதான் மொத நாளே பாக்கறேன்'னு நீதான சொல்லிருக்கே?' என்றதும் விழுந்து விட்டான்!

'நான் பாக்கும்போது மட்டும் அந்த ஸீன் வர்றவேல்லடா!' என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

'ஒண்ணு செய்! வேணா கோயம்பேடு ரோகிணிக்கு ஒரு நடை போய் பாத்துட்டு வந்துடு. சிடிய விட்டு தள்ளி இருக்கறதால ஒரு வேளை ஸீன் வர்ற சான்ஸ் இருக்கு' என்றேன் படு சீரியஸாய்.

அந்த சனிக்கிழமையும் சீனி வராததில் ஜால்ரா கூட்டம் மொத்தமாய் என் மேல் பாய்ந்தது.

'உண்மைதான்' என உரக்கக் கூறி எல்லோரையும் பிரமிக்க வைத்தேன்.

நடுராத்திரி கனவில் ஹேமாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கையில் உலுக்கப்பட்டேன். கண்கள் சிவக்க சீனி நின்று கொண்டிருந்தான். 'எந்திரிடா' என்றான்.

மெல்ல எழுந்தேன். 'என்னடா?' என்றேன் கேஷ¤வலாய்.

'தோ பாரு! ரோகிணிலேந்து directஆ இங்கதான் வர்றேன். அந்த மாதிரி ஸீனே கிடையாது. நீ சும்மா சொல்றே' என்றான் ஆத்திரத்துடன்.

'அது உண்மைதான். கொஞ்சம் பொறுமையா கேளு' என்றதும் காலர் பிடிக்கப்பட்டது. ஜால்ரா பெரும்பாடுபட்டு எங்கள் இருவரையும் பிரித்தது. என் பனியன் வரை கிழிந்திருந்தது; உதடு பிய்ந்திருந்தது. சீனி மூக்கில் ரத்தம்! 'உன் சங்காத்தமே வேண்டாண்டா' என்று சீறிவிட்டு சீனி சென்றுவிட்டான்.

அதற்கடுத்த இருநாளில் எனக்கு தேசீயமயமாக்கப்பட்ட வங்கியின் குடியாத்தம் கிளையில் சேர்வதற்கான உத்தரவு வந்ததில் சீனி விஷயம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

எனக்கு மும்பை மாற்றலானது, பெற்றோர் மெட்ராஸிலிருந்து மும்பைக்கு வந்தது, கனவுக்கன்னி ஹேமாவே எனக்கு மனைவியாய் வந்தது எல்லாம் பிறகு நடந்த விஷயங்கள். என் கல்யாண பத்திரிகை கொடுக்க திருவல்லிக்கேணி சென்றபோது சீனி குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

ஒரு நாள் ஹேமாவிடம் இதைச் சொன்னபோது 'ரொம்பவே ஓவர்' என்று விமர்சனம் செய்தாள். 'இது உண்மைதான்' என்றேன் நானும். 'சும்மா' என்றாள்.

'ஜீன்ஸ் படத்துல கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டு வரும்’

‘ஆமாம்’

‘லாஸ்ட்ல ப்ரோக்ராம் தப்பாகி ஐஸ் எலும்புக்கூடு ஆயிரும்’

‘சரி...அதுக்கென்ன?’

‘எலும்புக்கூடு ஐஸ் டிரஸ் இல்லாமதானே இருக்குது; அதைத்தான் நான் சீனிகிட்ட சொல்ல வந்தேன்' என்று விளக்கிச் சொன்னதும் கொஞ்சம் முழித்துவிட்டு பிறகு விழுந்து விழுந்து சிரித்தாள்.

'என்னய்யா? பழைய நெனப்பா?' என்ற குரலில் கலைந்து போய் நாசுக்காய்ச் சிரித்து வைத்தேன். சீனு, ஸ்ட•ப்ட் ஸான்ட்விச், ஓனியன் ரிங்க்ஸ், டோநட், கா•பி என ட்ரே முழுதும் நிரப்பியிருந்தான்.

‘அது சரி! ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னியே அது என்ன?’ என்று கேட்டு வைத்தேன்

ஸான்ட்விச்சைக் கடித்துக்கொண்டே சீனி என்னைக் கேட்ட கேள்வி
'நீ சொன்னது பொய்தானே?'

4 comments:

தக்குடு said...

உமக்கு கதை நன்னாவே வருது ஓய்! பிரமாதமா இருக்கு! எனக்கு தெரிஞ்சு ஒரு படத்துல நமிதா 16 கஜம் புடவை கட்டிண்டு வருவா! நீர் அந்த படம் பாத்து இருக்கேறா??..:PP

(Mis)Chief Editor said...

என்ன தக்குடு, கேள்வியே அபத்தமா இருக்கே...

16 கஜம் புடவை கட்டிண்டு வரான்னு தெரிஞ்சாலே...அந்த பக்கம் தலை வெச்சு கூட படுக்கமாட்டோமே?!!

என்ன நான் சொல்றது, சரிதானே?!

எல் கே said...

ஹ்ம்ம் கதை நல்லா இருக்கு

N.H. Narasimma Prasad said...

ரொம்ப அருமையான பதிவு. கடைசியில் நீங்கள் உங்கள் ஹேமாவிடம் விளக்கும்போது பயங்கரமாக சிரித்தேன். தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகளை எழுதவும். நன்றி.