அவன் இனி செல்பேசியில் பேசுவதில்லை எனத் தீர்மானித்தான்; அவளோடு. உயிரில் கலந்த உறவோடு.
என்ன வாழ்க்கை இது? அழகாகப் புன்முறுவல் செய்து காதலை அங்கீகரித்து வருஷம் மூன்றாகப் போகிறது. இன்றும் எல்லாம் அவன் தான். மாய்ந்து மாய்ந்து வலையில் தென்படும் நல்ல வாழ்த்துக்களை/வாசகங்களை மின் அஞ்சல் செய்வான்; பதிலே வராது. மேய்ந்து மேய்ந்து ஆர்ச்சீஸ்/ஹால் மார்க் அட்டைகளை உருகி உருகி அனுப்புவான்; பதிலே வராது. ப்ரீபெய்ட் தேயத் தேய பேசினாலும் 'உம்' என உச்சுக் கொட்டுவதோடு சரி. வார்த்தை ஒன்றும் பேறாது.
எந்த வீட்டில் காதல் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது? அதற்காக இப்படியா? 'அய்யயோ! அப்பா என்னையே பாத்துண்டு இருக்கார்' என செல்பேசி கட்டாகிப் போகும். 'ஊர்லேந்து கஸின் வந்திருக்கா' என ஞாயிறு சந்திப்பு பாழாய்ப் போகும். அவனுக்குத் தெரிந்து ஒரு முறை கூட அவளாக எதையும் செய்ததில்லை. கேட்டால் 'வீட்ல இதெல்லாம் பிடிக்காது'. 'காதலை மறைக்க வேண்டும்' என நினைத்தால் ஒரு பெண்ணால் என்னதான் முடியாது?!
எல்லாம் பரவாயில்லை என்றாலும் சமயத்தில் மனதில் கேள்வி எழத்தான் செய்தது. 'என்ன இவள்? எதற்குமே பதில் சொல்வதில்லையே?'. தாங்காமல் ஒரு தடவை கேட்டபோது 'ஒவ்வொரு தடவையும் பிடிச்சிருக்குன்னு சொல்லணுமா? அதென்னமோ எனக்கு 'ஈமெயில்' நல்லாயிருக்குனு எழுதத் தோணல; 'கார்டு' சூப்பர்னு சொல்லத் தோணல. கமான் யார்! டோண்ட் பி ·பார்மல்!' என நறுக்காய்ப் பேசியது தேவையில்லாமல் நினைவில் வந்து போனது.
இருந்தாலும் இன்று (காதலர் தினமாச்சே!) ரொம்பவே ஏங்கிப் போய் 'அவளாகப் பேச மாட்டாளா?' எனத் தவித்துப் போனான். செல்பேசியோடு பல் துலக்கினான்; குளித்தான்; டிபன் சாப்பிட்டான். மொபைக்-ல் செல்லாமல் வழக்கத்திற்கு மாறாக ஆட்டோ பிடித்தான் (நடுவழியில் தொடர்பு கொண்டால் என்னாவது?!) அலுவலக போனுக்கு அருகிலேயே பழியாய்க் கிடந்தான். மதிய உணவுக்குக்கூடச் செல்லவில்லை. அவளிடமிருந்து அழைப்பே இல்லை.
மனது பொறுக்காது அவளுடைய செல் பேசியைத் தொடர்பு கொண்டான். 'ஹாய்' என்ற சொல் கேட்டு பசி மறந்து போனது; இதயம் குளிர்ந்து போனது.
'என்ன திடீர்னு?'
'ஒண்ணுமில்ல. சும்மாதான்...'
'தலைக்கு மேல வேலை இருக்குப்பா. என்ன மேட்டர்?' என்றவுடன் அவன் சுருதி அபஸ்வரமாய்ப் போனது.
'ஒண்ணுமில்ல..உன் குரலைக் கேக்கணும்போல இருந்தது...' என இழுத்தான்.
'தோ பாரு..எத்தன தடவ சொல்லிருக்கேன்; பீ ப்ராக்டிகல் யார்! நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன்; நைட் கால் பண்ணு(?!) ஓகே?!' எனத் தொடர்பு துண்டிக்கப்பட்டது!
'என்ன பொண்ணு இவ? இந்த ஞாயித்துக் கிழமை வேற மீட் பண்ணலை. இப்ப என்னடான்னா போன்ல கூட பேச மாட்டங்கறா! அவனவன் லீவு போட்டு பிளான் பண்ணி சுத்தறான். இவளுக்காக சாப்பாடு தண்ணியில்லாம உக்காந்ததுக்கு என்னை ஜோட்டால அடிச்சுக்கணும்' எனப் பொருமிக் கொண்டே வாசலுக்கு வந்து, சிகரெட்டைப் பற்ற வைத்து, வானத்தை வெறித்து, வேகமாய் இழுத்தான். வயிறு காய்ந்து புகைத்ததில் புரைக்கேறி தொடர்ந்து இருமினான்.
அப்போதுதான் தீர்மானித்தான்.
மீண்டும் துவக்கத்திலிருந்து படிக்கவும்................
1 comment:
கத நல்லாவே உடரீங்க சார்!!! :))
Post a Comment