Wednesday, July 04, 2012

சரித்திர புதினம்- அழகு நிலா- 1

வானவராயன் சதித் திட்டம் தீட்டும் முதல் அத்தியாயம்


அமாவாசை முடிந்து மூன்று நாட்கள் கழிந்திருந்தாலும், மையிருட்டு.  நேரமோ நடுச்சாமம் கடந்து அரை நாழிகை ஆகியிருந்தது. காரிருளில் கானகம் மூழ்கிக் கிடந்தது. 

காட்டின் மையப்பகுதியில் அமைந்திருந்த ப்ரத்யங்கரா மண்டபம் பற்றிப் பலவிதமான கதைகள்.  சுற்றிலும் நெடிதுயர்ந்த மரங்களின் நிழல்கள் மண்டபத்தின் மீது விழுந்து, வெளிச்சம் தராது, ஒரே இருட்டு. நடுவில் நிறுவப்பட்ட ‘ப்ரத்யங்கரா தேவி’ சிலை மனம் நலிந்தோரை நடுங்க வைக்கும் அமைப்பைக் கொண்டதாயிருந்தது.  இதனாலேயே பகலில் இளைப்பாறும் பிரயாணிகள் கூட இரண்டு நாழிகைகளுக்கு மேல் தங்காமல், நடையைக் கட்டுவதும் உண்டு.

சேர சோழ பாண்டிய மன்னர்கள் இணையாமல் ஆண்டு கொண்டிருந்த காலத்தில், தமிழகம் முழுதும் குறுநில மன்னர்கள் பரவியிருந்தார்கள்.  நாட்டை எப்படியாவது ஆள வேண்டும் என்கிற வெறியில் உறவினர்களுக்குள் எப்போதும் சண்டை.  போராலேயும், சதியாலேயும் நேர் வாரிசுகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி, வாரிசுகளைக் கொன்று, விசுவாசிகளை வைத்து படைகளைத் தன் கீழ் கொணர்ந்து நாட்டை ஆளும் கொடுமை நிலை (ஆதாரம் – தமிழகக் குறுநில மன்னர்களின் குசும்புகள், மாரி கேப், பக்கம் 67).  

ப்ரத்யங்கரா தேவியின் அருகில் ‘மினுக்/மினுக்’ வெளிச்சம்.  அச்சம் கொள்ளாமல் அருகில் சென்றோமானால், மெல்லிய குரலில் கசிந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜர் மீதான / திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடலைக் கேட்கலாம். 


பாடுபவரின் சாரீரம் பாட்டிற்குச் சுவை சேர்த்தாலும், சூழலுக்குப் பொருத்தமாயில்லை.

அணிந்திருந்த உடைகள் கொண்டு அவனை மெத்தப் படித்தவன் என அறியலாம்.  நடுச்சாமத்திலும் நெற்றியில் அழியாத திருநீறு, குங்குமம் கண்டு அவனது நியமத்தையும், ஒழுங்கையும் அறியலாம். வலுவான உடலமைப்பை வைத்து, அவன் படைகள் திறம்பெற ஏற்று நடத்தும் தகுதியுடைய வீரனென்று அறியலாம்.

நற்றமிழ்  ஞான சம் பந்தன்  நான்மறை
கற்றவன்  காழியர்  மன்னன்  உன்னிய
அற்றமில்  மாலையீ  ரைந்தும்  அஞ்செழுத்
துற்றன….


‘ஆஹா!’ என்ற ஒலி கேட்டதும் சட்டென பாட்டை நிறுத்தி ‘வானவராயரே! எப்போது வந்தீர்?’ என்கிற குரலில் இருந்த இனிமை போய், பணிவு வந்தது..


வானவராயன் என்று விளிக்கப்பட்ட உருவம் வெளிப்பட்டது தெரியத்தான் இல்லை.  கம்பர் பாடியது போல் ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’ எங்கே இருந்தான்?!


‘தண்டபாணி நாயக்கரே! அவையில் அனைவரும் மயங்கிக் கேட்கும் குரலை யாருமறியாது கானகத்திலே வைத்திருக்கிறீரே? தேவரும் போற்றும் வீரத்தை ஒளித்து வைத்திருக்கிறீரே? காலம்தான் எவ்வளவு கொடிது!’ என்று அரற்றினான் வானவராயன்.


’வானவராயரே! நானாக விருப்பப்பட்டு ஏற்றுக்கொண்டதுதானே இது.  சரி, எதற்காக வரச்சொன்னீர்?’


‘எனக்கு உரித்தான அரியணை வேண்டும்.  அதற்கே ஆலோசிக்க வந்திருக்கிறேன்’.


‘வானவராயரே! பலமுறை உமக்கு அறிவுறுத்தியும் விளங்காமல் மீண்டும் மீண்டும் உசிதமில்லாத காரியத்தில் இறங்குவது சரியல்லவே!’


‘அது எனக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியம்.  என் தமையனார் அகாலத்தில் இறந்தவுடன், என்னை மன்னனாக்கி அழகு பார்த்தார்கள்.  ஆனால், அந்தக் கிழ திருவடிப்பொடியார்…’ என வானவராயன் கர்ஜித்தான்.


‘பதவி ஆசையில் சொந்த தமையனாரைக் கொன்று, மகனையே விஷம் வைக்கத் துணிந்தீர்கள்.  அதனாலேயே வாழ்வை இழந்தீர்கள்’ என இடித்துரைக்க வேண்டிய நாயக்கன் மௌனம் காத்தான்.  வானவராயன் மீது நாயக்கன் வைத்திருக்கும் விசுவாசம் கும்பகர்ணன் ராவணன் மீது வைத்த விசுவாசத்தை விட ஒரு படி மேலே.


’சொல்கிறேன் கேள், ஏதேனும் ஓட்டைகள் இருந்தால் அடைத்து விடலாம் இப்போதே’ என்று திட்டத்தை மிகவும் அமைதியாக, சீரான குரலில் சொல்லி முடித்தான்.


‘அருமை வானவராயரே!  இதில் உங்கள் மேல் குற்றம் இராது.  சோளபுரி உங்கள் கையில்’ என்றான் நாயக்கன்.


‘முக்கியமாக அந்த புத்திசாலிக் கிழம் திருவடிப்பொடியார் தலையீடும் இருக்காது. நாம் நினைத்தவாறே நடந்தால் அடுத்த ‘பரஞ்சோதி’ நீதான்!’ என்று கூறி வானவராயன் சிரித்தது ஆந்தை அலறுதலை நினைவூட்டியது.


நியாயமாக அத்தியாயம் இங்கு முடிந்திருக்க வேண்டும்.  ஆனாலும், சரித்திர கதைகளுக்கே உரித்தான திருப்பத்துடன் முடித்தால்தானே சரியாய் வரும்?!  அதனால்….

‘சல சல’வென மண்டபத்தின் கோடியில் சப்தம் கேட்டதும், வாளை உருவிக் கொண்டு வானவராயன் வெளியே பாய்ந்து ஓடினான்.  நாயக்கன் திகைத்துப் போய் செய்வதறியாது நின்றான்.  மஞ்சள் கண்கள் மட்டுமே தெரிந்த பூனை  ‘மியாவ்’வுடன் ஓடி ஒளிந்து கொண்டது தவிர ஏதும் தென்படவில்லை. 


வாளை உறையில் இட்டு, ஏமாற்றத்துடன் மண்டபத்துக்குத் திரும்பிய வானவராயன் கால்களில் ஏதோ நெருடியது.  எடுத்து வந்து, தீபத்தின் சுடரில் பார்த்தான்.  ‘பொரி கடலை’ உருவ இலச்சினை! 


‘திருவடிப்பொடியார்!’ என்று கடுங்கோபத்தில் வானவராயனும், அச்சத்தில் நாயக்கனும் ஒரே சமயத்தில் கூவியது கேட்டு வௌவால்கள் பறந்தன!



இதொன்றும் அறியாத நமது நாயகன், வல்லவராயன் லேசான குறட்டையுடன், உல்லாசம் முடித்த களைப்பில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.



அழகு நிலா வளரும்...

2 comments:

XXXXXXXXXXXXXXXXXX said...

எதிர்பாராத எழுத்து நடை சார். அருமை. ஒரு அத்தியாயம் என்பது இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.

இடையிடயே மானே, தேனே பொன் மானே போட்டுக்கிற மாதிரி, கொஞ்சம் கொஞ்சம் சரித்திர நிகழ்வுகளையும் தட்டி விடுங்கள்.

அப்புறம், கதாபாத்திரங்களை கட்டாயம் வர்ணிக்க வேண்டுகிறேன். அது பாத்திரங்களை மனதில் நிலைக்கச் செய்ய பேருதவியாய் இருக்கும்.
மேலே சொன்னவை எல்லாம் அடியேனின் ஆவல்கள் மட்டுமே! உங்கள் எழுத்தினை விமர்சிக்கும் நோக்கில் அல்ல.

வாழ்த்துகள் சார்!

shankar said...

நல்ல முயற்சி. Good luck!

Shankar